For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'புத்திசாலித்தனமாக ஓட்டுப் போடுவோம்' பிரசாரம்!

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை லயோலா கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி, எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இணைந்து 'புத்திசாலித்தனமாக ஓட்டுப் போடுவோம்' என்ற பெயரில் மாணவர்களிடையே பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த பிரசாரத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டவர்கள் லயோலா கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வரும் அருண் பெர்னாண்டஸ் மற்றும் அவரது சக மாணவர்கள்தான்.

கல்லூரியின், கலாச்சாரம், மத பரிவர்த்தனைக் கழகத்தின் தலைவரான டாக்டர் ஜோ அருணை அணுகி தங்களது ஐடியாவைக் கூறியுள்ளனர். அவரும் கோ அஹெட் என்று சொன்னதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள கல்லூரிகளை அணுகினர்.

லயோலா கல்லூரி மாணவர்களின் இந்த வித்தியாசமான பிரசாரத்திற்கு எத்திராஜ் மகளிர் கல்லூரி, வைஷ்ணவா மகளிர் கல்லூரி ஆகியவற்றில் பயின்று வரும் மாணவிகள் சம்மதம் தெரிவித்தனர்.

இவை தவிர தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவ, மாணவியரும் கூட இதில் இணைய ஆர்வம் காட்டியுள்ளனராம். தற்போது இந்த புத்திசாலித்தனமாக ஓட்டுப் போடுவோம் பிரசாரத்தில் 60 மாணவ, மாணவியர் இணைந்துள்ளனராம்.

தங்களது பிரசாரத்திற்கான காரணம் குறித்து மாணவர் பெர்னாண்டஸ் கூறுகையில், மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள், காந்தமாலில் நடந்த கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் எங்களை வெகுவாக பாதித்தன.

அதேபோல இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் அவலத்தை இங்குள்ள தலைவர்கள் அரசியலாக்கி விட்டனர். இதையெல்லாம் நாங்கள் யோசித்துப் பார்த்தபோது நல்ல தலைவர்கள் நம்மிடம் இல்லாததே இதற்குக் காரணம் என்பதை உணர்ந்தோம்.

நம்மிடம் நல்ல தலைவர்களுக்கு பஞ்சம் உள்ளது. எனவேதான் மக்களிடையே இரண்டு முக்கிய அம்சங்களை முன்வைத்து பிரசாரம் செய்ய தீர்மானித்தோம்.

ஒன்று அனைவரும் தவறாமல் வாக்களிக்க முன்வர வேண்டும். 2வது எந்தவித குற்றப் பின்னணியும் இல்லாத வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது.

இன்று இந்த பிரசார அமைப்பில் இணைந்துள்ள மாணவர்கள் ஒன்று கூடி தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்துவது, எப்படியெல்லாம் பிரசாரம் செய்வது என்பது குறித்து திட்டமிடவுள்ளனராம். தேர்வுகள் இருந்ததால் இது நாள் வரை மாணவர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடவில்லையாம். ஆனால் தற்போது தேர்வுகள் முடிந்து விட்டதால் தீவிரப் பிரசாரத்தில் அவர்கள் ஈடுபடப் போகிறார்களாம்.

இதற்காக துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து மக்களிடையே மாணவர்கள் விநியோகம் செய்யவுள்ளனர். அதில், தீவிரவாதம், ஊழல், ஒதுக்கப்படுதல் ஆகிய அனைத்துமே ஒன்றுதான். இவற்றை ஒழிக்க நல்ல வேட்பாளர்களை மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.

நல்ல தலைவர்களாக வருகிறவர்களுக்கே வாக்களிக்க வேண்டும். குற்றப் பின்னணி இல்லாத வேட்பாளர்களுக்கு, அவர்கள் எந்தக் கட்சி என்று பாரபட்சம் பார்க்காமல் வாக்களிக்க வேண்டும் என்று வாசகங்கள் இடம் பெறவுள்ளன.

மேலும், நமது தலைவர்கள் வாக்கு வங்கியை மட்டுமே கவனமாக பார்க்கின்றனர். தேர்தல்களின்போது இந்த வாக்குகளை அவர்கள் விலை கொடுத்து வாங்குகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினராவதற்கும், ஏன் அமைச்சராவதற்கும் கூட இந்த வாக்கு வங்கியே நமக்கு உதவும் என அவர்கள் நினைக்கின்றனர். இதை ஒரு முதலீடு போல அவர்கள் கருதுகின்றனர்.

இதை வைத்து பதவியைப் பிடித்தவுடன் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு தங்களது சொத்துக்களை அதிகரித்துக் கொள்கின்றனர் என்றும் அந்த துண்டுப் பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக தற்போது கல்லூரி மாணவர்களிடையே இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமும், அனைத்துக் கல்லூரி மாணவர்களிடமும் இதை விநியோகிக்கவுள்ளனராம்.

பாராட்டுக்குரிய நல்ல முயற்சி..

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X