For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதிமுகவுக்கு திருப்பூரை விட்டுத் தருகிறது சிபிஎம்!?

By Sridhar L
Google Oneindia Tamil News

Varadharajan
சென்னை: மதிமுகவுக்காக திருப்பூரை விட்டுத் தர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது. இதன்மூலம் அதிமுக-மார்க்சிஸ்ட் இடையிலான தொகுதிப் பங்கீட்டு சிக்கல் முடிவுக்கு வருகிறது.

முன்னதாக எங்கள் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் நடக்கிறது. அதில் நாங்கள் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இதனால் அதற்குள் எங்களது தொகுதிகளை அறிவிக்க வேண்டும் என அதிமுகவுக்கு நெருக்கடி தந்து பார்த்த மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சிக்கு ஜெயலலிதா எந்த பதிலும் தரவில்லை. இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தனது மத்தியக் குழுக் கூட்டத்தையே தள்ளிப் போட்டுவிட்டு காத்துக் கொண்டிருந்தது சிபிஎம்.

ஜெ தந்த அதிர்ச்சி 1:

முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 சீட் கேட்டது. அதெல்லாம் முடியாது என்று திட்டவட்டமாக அதிமுக கூறிவிட்டது. இது அந்தக் கட்சிக்கு முதல் அதிர்ச்சி.

ஜெ தந்த அதிர்ச்சி 2:

இதையடுத்து 3 சீட் ஓ.கே., ஆனா நாங்க கேட்பதைத் தரணும் என்று பேச்சை ஆரம்பித்தது. அவர்கள் கேட்ட தொகுதிகள் லிஸ்டில் இந்திய கம்யூனிஸ்ட் கேட்ட தொகுதிகள் இருந்தன. இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கேட்ட தொகுதிகளை அவர்களுக்கு அப்படியே ஒதுக்கிவிட்டார் ஜெயலலிதா. இது மார்க்சிஸ்ட்களுக்கு இரண்டாவது அதிர்ச்சி.

ஜெ தந்த அதிர்ச்சி 3:

அடுத்ததாக இவர்கள் கேட்ட தொகுதிகளில் திருப்பூரை மதிமுகவும் கேட்க, நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாங்க என்று கூறிவிட்டுப் போய்விட்டது அதிமுக. இது மார்க்சிஸ்ட்களுக்கு 3 வது அதிர்ச்சி.

ஜெ தந்த அதிர்ச்சி 4:

பிரச்சனையைத் தீர்க்க வைகோவும் மார்க்சிஸ்ட் தலைவர் வரதராஜனும் நடத்திய பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் முற்றியதே தவிர, முடிவு ஏற்படவில்லை. இந் நிலையில் மதுரையில் அழகிரி நிற்கப் போறார்.. அது உங்களுக்கு சரியா வராது, திண்டுக்கல் தொகுதியை ஒதுக்குகிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் அதிமுக கூறிவிட்டது. அது இந்தக் கட்சிக்கு 4வது அதிர்ச்சி.

கட்சிக்கே வரதராஜன் தந்த அதிர்ச்சி:

திண்டு்க்கல் என்றவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன் உடனே ஓகே கூறிவிட்டது அந்தக் கட்சியினர் அனைவருக்குமே பெரும் அதிர்ச்சி.

காரணம், இந்தத் தொகுதியில் திண்டு்ககல் நகரசபைத் துணைத் தலைவராக இருக்கும் தனது மகனான வீ.கே.வை நிறுத்த வரதராஜன் முயல்வதாகப் பேச்சு எழுந்துள்ளது. இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

நாட்டில் உள்ள கட்சிகளிலேயே கொஞ்சமாவது கட்டுப்பாடு, நேர்மை, நியாயம் உள்ள கட்சிகள் என்றால் அது இடதுசாரிகள் தான். இங்கே குடும்பம், பாசம் எல்லாம் எடுபடாது.. திறமையும் ஒழுக்கமும் இருந்தால் தான் முக்கிய பொறுப்புகளை அடைய முடியும். அப்படித்தான் தனது அப்பழுக்கற்ற அரசியலால் இந்த நிலைக்கு வளர்ந்தார் வரதராஜன்.

இந் நிலையில் அவருக்கும் திராவிடக் கட்சிகளைப் போல மகன் பாசம் தேவையா என்பது இடதுசாரிகள் மீது அன்பு கொண்டவர்கள் கேட்கிறார்கள். ஆனால், இதெல்லாம் புரளி என்கிறது வரதராஜன் தரப்பு.

கூட்டம் தள்ளி வைப்பு:

சரி.. கூட்டணி கலாட்டாவுக்கு வருவோம்.

தங்களுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டுக் கொண்டே இருந்த நிலையில் தனது கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தை மதுரையில் கடந்த 31ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டுவதாக அறிவித்தது. இது அதிமுகவுக்கு நெருக்கடி தரும் என நினைத்தது.

ஆனால், அதிமுக அமைதியாகவே இருக்கவே.. இந்தக் கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு நடக்கவுள்ளது. எனவே தொகுதிகளை அறிவியுங்கள் என்று மீண்டும் இறங்கி வந்து அதிமுகவிடம் கோரிக்கை வைத்தது.

ஆனால், போயஸ் கார்டனில் ஆழ்ந்த அமைதி. இதையடுத்து தனது
மதுரை கூட்டத்தை நாளைக்கு (3ம் தேதி) தள்ளி வைத்துவிட்டு போயஸ் கார்டனை நோக்கி பார்த்தபடி உட்கார்ந்தது சிபிஎம்.

திருப்பூரை விட்டுத் தர முடிவு?:

இந் நிலையில் ஜெயலலிதாவின் தூதர்களாக பன்னீர்செல்வம், ஜெயக்குமார் இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு வந்தனர்.

மாநிலச் செயலாளர் வரதராஜன், மத்திய கமிட்டி உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், ராமகிருஷ்ணன் ஆகியோருடன் நீண்ட நேரம் பேசினர்.

அப்போது மதுரை, திண்டுக்கல், பொள்ளாச்சி என மூன்று தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்று முடிவானதாகத் தெரிகிறது.

வைகோ கேட்பதால் அவருக்காக திருப்பூரை விட்டுத் தருமாறு அதிமுக வைத்த கோரிக்கையை மார்க்சிஸ்ட் தலைவர்கள் ஏற்றுக் கொண்டதாக அக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் மார்க்சிஸ்ட்-அதிமுக கூட்டணி சிக்கல் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டதாகவே தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X