கஸாப் வயதை கண்டறிய சோதனை-கோர்ட் உத்தரவு

 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி முகம்மது அஜ்மல் கஸாப்பின் வயது என்ன, அவர் மைனரா என்பது குறித்து விசாரிக்க மும்பை தனி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சிறப்பு அரசு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தஹிளியானி ஏற்றுக் கொண்டார். தனது மனுவில், டாக்டர்கள் மற்றும் சிறை ஜெயிலர் உள்ளிட்டோர் அடங்கிய குழு, ஏப்ரல் 28ம் தேதி கஸாப்பை சிறையில் பரிசோதித்து, அவர் 18 வயதுக்கு மேற்பட்டவரா அல்லது மைனரா என்பது குறித்து விசாரிக்க அனுமதி கோரியிருந்தார்.

மேலும் கஸாப்பின் வயதை சரியாக அறிய அவருக்கு பல் மருத்துவ பரிசோதனையும் நடத்த சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பான சோதனையை நடத்தும் பல் மருத்துவர் மற்றும் ரேடியாலஜிஸ்ட் ஆகியோர் ஏப்ரல் 28 அல்லது அதற்கு முன்பு தங்களது ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

பலத்த பாதுகாப்புடன் இந்த சோதனைகளுக்கு கஸாப் அழைத்துச் செல்லப்படுவார் என அவரது வக்கீல் அப்பாஸ் கஸ்மி கூறியுள்ளார்.

கஸாப் 18 வயதுக்கு உட்பட்டவர் என்று சோதனைகளில் தெரிய வந்தால், அவரது வழக்கு சிறார் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும். அப்படி மாற்றப்பட்டால் கஸாப்புக்கு வெறும் 3 ஆண்டு சிறைத் தண்டனையே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம், சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

இதை மனதில் கொண்டுதான் கஸாப்பும், சமீபத்தில் நீதிபதியிடம், நான் மைனர். எனவே இந்த வழக்கை சிறார் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தான். ஆனால் அந்தக் கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார்.

இந்த நிலையில் அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம், குற்றச்சாட்டு பதிவு செய்ய்படுவதற்கு முன்பு கஸாப்பின் வயதை தெளிவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததால் தற்போது அவனது வயதை அறிய சோதனைகள் நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Write a Comment