ஜெவுக்கு அமெரிக்க இலங்கை தமிழ் சங்கம் நன்றி

நியூயார்க்: தனி ஈழம் அமைப்போம் என அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவின் பேச்சுக்கு அமெரிக்க இலங்கை தமிழ் சங்கம் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது.

இது குறித்து அமெரிக்க இலங்கை தமிழ் சங்க தலைவர் தனபால சிங்கம் மதிவாணன், ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,

மதிப்பிற்குரிய டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு,

தெளிவான - உறுதியான - தளம்பலற்ற வார்த்தைகளால் - இலங்கை வாழ் தமிழர்களுக்குத் தனி ஈழம் அமைப்பது தான் சரியான ஒரே தீர்வு என்று தாங்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடு கண்டு உலகத் தமிழினத்தோடு சேர்ந்து அமெரிக்கத் தமிழர்களும் புளகாங்கிதம் அடைந்து போயுள்ளோம்.

தனி ஈழம் தான் ஒரே தீர்வு என்று வெறுமனே ஒற்றை வரியில் சொல்லி விட்டுப் போகாமல், அந்தத் தீர்வு ஏன் சரியானது என்றும், ஏன் தேவையானது என்றும் ஆணித்தரமான நீண்ட வாதங்களையும் நீங்கள் முன்வைத்திருப்பதானது - ஈழத் தமிழினத்தின் எதிர்காலம் பற்றி உங்களுக்கு இருக்கும் அசைவற்ற தெளிவைக் காட்டுகின்றது.

முன்பொரு காலத்தில் - ஈழத் தமிழர்களது விடுதலைக்காகப் போராடுகின்றோம் என்று கூறிக் கொண்டு பல இயக்கங்கள் தோன்றியிருந்தன. எல்லாவற்றையும் சேர்த்து வைத்துக் கொண்டு காலத்தை வீணடிக்காமல் - அவற்றிற்குள் உண்மையான போராளி இயக்கம் எது என்பதைத் தெளிவாகக் கண்டறிந்து, அந்த இயக்கத்தின் நிபந்தனையற்ற காவலனாகத் தனது கடைசி நாள் வரை துணையிருந்து, அந்த இயக்கத்தைத் தனது பிள்ளை போல வளர்த்தெடுத்தார் காவியத் தலைவன் எம். ஜி. ஆர் அவர்கள்.

எம்ஜிஆரின் மறுவடிவம் ஜெ...

மிகத் தெளிவாக அன்று அவர் எடுத்த அந்த முடிவு எவ்வளவு சரியானது என்பதை வரலாறு எமக்கு நிரூபித்துக் காட்டிவிட்டது.
அந்த மாபெரும் தலைவனின் செயலில் அன்று இருந்த அந்தத் தெளிவு – அவரது மறுவடிவமாக இன்று திகழும் உங்கள் வாத்தைகளில், அதை விடவும் துல்லியமாக இருப்பது கண்டு ஈழத் தமிழினம் மெய்சிலிர்த்துப் போயுள்ளது.

இந்தியாவின் மிகச் சக்தி மிக்க ஓர் அரசியல் தலைவர் நீங்கள். காலம் எடுத்து, நிதானமாகச் சிந்தித்து - முடிவெடுத்த பின்பு - பலவாறு பேசி விட்டு விலகாமல் - எடுத்த முடிவோடு ஒட்டியே இருப்பவர் என்ற பெருமை உங்களுக்கு உண்டு. இலங்கைத் தமிழ் மக்களுக்கு தனி ஈழம் தான் ஒரே தீர்வு என்ற முடிவிலும், அவர்களுக்கு நான் தனி ஈழம் அமைப்பேன் என்ற
உறுதியிலும் வழுவாது இருந்து - இருளில் இருக்கும் எமது மக்களுக்கு ஒளி காட்டி, அவர்களுக்கு நிரந்தர விடுதலையை நீங்கள் பெற்றுத் தருவீர்கள் என நாம் நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம்.

நடைபெறுகின்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் - ஈழத் தமிழர்களது ஆதரவுக் கோட்டையாகத் திகழும் உங்களது அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணி அமோக வெற்றியீட்ட தமிழீழ மக்கள் அனைவருடைய சார்பிலும் அமெரிக்க இலங்கைத் தமிழ் சங்கம் மனமார வாழ்த்துகின்றது என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

Videos