For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மறக்க முடியாத பிரபாகரன்!

By Staff
Google Oneindia Tamil News

Prabhakran with Wife
இலங்கையின் வடக்கில் உள்ள முக்கிய துறைமுகங்களில் ஒன்றான வல்வெட்டித்துறையில், 1954ம் ஆண்டு பிறந்தார் பிரபாகரன்.

பிரபாகரனின் குடும்பம் அப்பகுதியில் மிகவும் பிரசித்தமானது. திருமேனியார் குடும்பம் என அப்பகுதியினரால் அழைக்கப்பட்டனர் பிரபாகரனின் மூதாதையர்கள்.

குடும்பத்தின் மூதாதையரான திருமேனியார் வெங்கடாசலம் என்பவர் அவ்வூரிலுள்ள வல்வை வைத்தீஸ்வரன் கோவிலைக் கட்டியும், வல்வை முத்துமாரியம்மன் கோயில், நெடியகாடு பிள்ளையார் கோயில் இரண்டையும் கட்ட உதவியும் செய்தார்.

இவ்வூருக்கு அருகிலுள்ள பருத்தித்துறையில் மெத்தை வீட்டு நாகலிங்கம் என்பவரின் குடும்பமும் பல கோவில்களைக் கட்டிய குடும்பம் ஆகும். இவ்விரு குடும்பத்தினரும் திருமண உறவின் மூலம் இணைந்தனர்.

வேலுப்பிள்ளையின் கடைசிப் பிள்ளை...

திருமேனியார் குடும்பத்தில் தோன்றிய திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், நாகலிங்கம் வழித்தோன்றிய பார்வதியும் திருமணத்தில் இணைந்தனர். இந்தத் தம்பதிக்குப் பிறந்த கடைசிக் குழந்தையே பிரபாகரன் அவர்கள்.

பிரபாகரனுக்கு ஒரு அண்ணனும், இரண்டு அக்காள்களும் உள்ளனர். பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை, இலங்கை அரசின் அதிகாரியாகப் பல வருடங்கள் பணியாற்றியவர்.

பிரபாகரன் தனது கல்வியை வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்திலுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரை கற்றார். யாழ்ப்பாணத்தில் அந்நாட்களில் செல்வம் மிக்க குடும்பங்களில் பிறந்த பிள்ளைகள் ஆங்கிலம் கற்பதும் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போவதும் அரச பணிகளில் அமர்வதுமே வாழ்வின் லட்சியமாகக் கொள்வது நடைமுறையாக இருந்து வந்தன. ஆனால் பிரபாகரன் அவர்களின் சிந்தனை
வேறுவிதமாக இருந்தது.

தந்தையுடன் செல்லும்போது சிங்களக் போலீஸார், அப்பாவித் தமிழர்களை அடித்து இம்சிப்பதையும் உதைப்பதையும் கண்ட அவருக்கு அது மனதில் பாதிப்பை ஏற்படுத்தியது.

சிங்கள வன்முறையால் மனதில் பாதிப்பு...

1958 ஆம் ஆண்டிடு தமிழர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதலை சிங்களர்கள் நடத்தினர். இந்த சம்பவங்களைக் கண்டு, கேட்டு, அறிந்த பிரபாகரன் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இது, சிங்கள இனவெறியிலிருந்து தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற வேகம் அவருக்குள் பிறந்தது.

அமைதி வழியை விட அவர்களது வழியிலேயே போய், ஆயுதத்தின் மூலம்தான் சிங்கள இனவெறியை ஒடுக்க முடியும் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

கரிகாலன்...

இதனால் சிறு வயதிலேயே தனது நண்பர்களுடன் சேர்ந்து கையெறி குண்டுகளை தயாரிக்கக் கற்றுக் கொண்டார் பிரபாகரன். இப்படி செய்தபோது ஒருமுறை குண்டு ஒன்று வெடித்துச் சிதறியதில் பிரபாகரனின் காலில் காயம் ஏற்பட்டு விட்டது. இதன் காரணமாகவே அவருக்கு கரிகாலன் என்ற பெயரும் ஏற்பட்டது. இதுவே அவரது புனைபெயராகவும் மாறியது.

10ம் வகுப்புவரை படித்த பிரபாகரன் அதன் பின்னர் போராட்டக் களத்தில் குதித்ததால் படிப்பை விட்டு விட்டார்.
ஆனால் மகனின் போக்கு பெற்றோருக்கு கவலை தந்தது. சரியாக படிக்காமல் சுற்றி வரும் மகன் குறித்து அவர்கள் கவலை கொண்டனர். ஆனால் தங்களது மகன் ஒரு போராளி என்பது ஒரு நாள் அதிகாலையில்தான் வேலுப்பிள்ளை, பார்வதி தம்பதிக்குத் தெரிய வந்தது.

அதிகாலை 3 மணியளவில் பிரபாகரன் வீட்டை போலீஸார் முற்றுகையிட்டு கதவைத் தட்டினர். அப்போது பிரபாகரன் வீட்டிலிருந்து தப்பி வெளியேறினார். ஒன்றும் புரியாமல் அவரது தாய் கதவைத் திறந்து பார்த்தபோது போலீஸார் குழுமியிருந்தனர். பிறகுதான் தனது மகன் போராளி இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று அவருக்குத் தெரிய வந்தது.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் பிரபாகரன் மீண்டும் வீடு திரும்பவில்லை. தனது இயக்கத்தில் தீவிரமாக இறங்கி விட்டார்.

இதையடுத்து அவரது தந்தை, பிரபாகரன் இருந்த இடத்திற்குப் போய் வீட்டுக்குக் கூட்டி வந்தார். ஆனால் பிரபாகரன், என்னால் இனி உங்களுக்கு ஒரு பயனும் கிடையாது. என்னை என் போக்கில் விட்டு விடுங்கள். உங்களுக்கு என்னால் எந்தத் தொல்லையும் வரக் கூடாது என்று கூறினார்.

அதன் பின்னர் தனது இயக்கத்தில் தீவிரமானார்.

இந்த நிலையில், 1970ம் ஆண்டு தமிழ் மாணவர் பேரவை என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. சிங்கள அரசு கொண்டு வந்த தரப்படுத்தல் திட்டத்திற்கு எதிராக மாணவர்களை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டங்களைத் தமிழ் மாணவர் பேரவை நடாத்தியது.

தமிழ் மாணவர்கள் மத்தியில் பெரும் சக்தியாக இப்பேரவை வளர்ந்தது. ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலமே சிங்கள இனவெறியர்களின் கொடுமைகளில் இருந்து தமிழர்கள் விடுதலை பெறமுடியும் என்பதை மெல்ல மெல்லத் தமிழ் இளைஞர்கள் உணரத் தொடங்கினர்.

தமிழ் மாணவர்கள் பேரவை பலம் பொருந்திய இயக்கமாக உருவெடுத்தது. இந்த அமைப்பின் ஆயுதம் தாங்கியப் பிரிவில் பிரபாகரன் இடம் பெற்றார். அப்பிரிவின் முக்கியஸ்தராக உருவெடுத்தார்.

தம்பி...

இக்குழுவிலேயே பிரபாகரன்தான் மிகவும் வயது குறைந்தவர். எனவே அவரை செல்லமாக தம்பி என்று அழைப்பார்கள் சக போராளிகள். இந்தப் பெயரும் பின்னர் பிரபாகரனின் பெயராகவே மாறிப் போனது.

இந்தக் குழுவினர் ஒரு அரசுப் பேருந்தை குண்டு வைத்துத் தகர்க்கும் திட்டத்தைத் தீட்டினர். நான்கு பேர் இதற்காக நியமிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் பிரபாகரன். சம்பவ நாளன்று குண்டு வைக்கப் போனபோது மற்ற மூவரும் பயந்து பின்வாங்கி விட்டனர். ஆனால் பிரபாகரன் துணிச்சலுடன் தனியாக சென்று அந்தப் பேருந்தை தீவைத்துக் கொளுத்தி விட்டு வந்தார்.

அப்போது பிரபாகரனுக்கு வயது 16!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X