For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிகரிக்கும் கருத்து வேறுபாடு-மமதா, காங். உறவு விரைவில் உடையும்?

By Staff
Google Oneindia Tamil News

Mamatha Bannerjee
டெல்லி: திரினமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையிலான உறவு நாளுக்கு நாள் மோசமாகி வருவதால், விரைவில் மமதா ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகக் கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க அரசு குறித்து மத்திய அரசு கடைப்பிடித்து வரும் கொள்கைதான், மமதாவின் சமீபத்திய எரிச்சலுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

மத்திய ரயில்வே அமைச்சராக பதவியேற்பதற்கு முன்பே மேற்கு வங்க அரசைக் கலைக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார் மமதா. ஆனால் இதை காங்கிரஸ் ஏற்கவில்லை.

இந்த நிலையில் லால்கரில் நக்சலைட்டுகள் நடத்திய அட்டகாசத்தைத் தொடர்ந்து மறுபடியும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் மமதா.

இதையடுத்து சிபிஐ மாவோயிஸ்ட்களை மத்திய அரசு தடை விதித்து தீவிரவாதிகள் என அறிவித்தது. இது மமதாவை திருப்திப்படுத்தவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசு மீது மத்திய அரசு மென்மையாக நடந்து கொள்வதாகவே நினைக்கிறார் மமதா.

இதையடுத்து பிரனாப் முகர்ஜியை விட்டு மமதாவை சமாதானப்படுத்த முயன்று வருகிறது காங்கிரஸ்.

லால்கர் விவகாரத்தில் மமதாவை காங்கிரஸ் ஆலோசிக்கவே இல்லை என்று திரினமூல் தலைவர் செளகதா ராய் குற்றம் சாட்டுகிறார்.

லால்கருக்கு துணை ராணுவப் படைகளை அனுப்பியது தொடர்பாக மமதாவை மத்திய அரசு ஆலோசிக்கவில்லை. மேற்கு வங்கப் பிரச்சினைகளைப் பொறுத்தமட்டில் மமதாவிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் லால்கர் விவகாரத்தில் மமதாவை மத்திய அரசு இருட்டில் வைத்து விட்டது என்கிறார் அவர்.

ஆனால் லால்கர் விவகாரத்தில் மேற்கு வங்க அரசுக்கு உதவ மத்திய அரசு முடிவு செய்ததை முன் கூட்டியே மமதாவிடம் தெரிவித்து விட்டதாக மத்திய அரசுத் தரப்பு கூறுகிறது.

இதுகுறித்து அத்தரப்பு கூறுகையில், பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் அடங்கிய அமைச்சர்கள், துணை ராணுவப் படையினரை அனுப்புவது என்று முடிவெடுக்கப்பட்டது. இது மமதாவுக்கும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பிரச்சினையாக்க வேண்டாம் எனவும் மமதாவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் மத்திய அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த விவாகரத்தில் தன்னுடன் மத்திய அரசிலிருந்து யாரும் பேசாமல் இருப்பதற்காக முன்கூட்டியே கொல்கத்தாவுக்குக் கிளம்பிச் சென்று விட்டார் மமதா. இதன் மூலம் தன்னை யாரும் கலந்து ஆலோசிக்கவில்லை என்று கூற அவர் காரணத்தை ஏற்படுத்திக் கொண்டார் என மத்திய அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

மேற்கு வங்க விவகாரத்தை முன்வைத்து தற்போது மமதாவுக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் இடையிலான விரிசல் பெரிதாகி விட்டதாக கருதப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வருகிறது. அதுவரை இக்கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதுகுறித்து செளகதா ராய் கூறுகையில், நாங்கள் யாரிடமிருந்தம் அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை. எங்களிடம் 20 எம்.பிக்கள் உள்ளனர். மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளோம். எனவே எங்களது மாநிலம் தொடர்பான முக்கியப் பிரச்சினைகளில் எங்களை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்கிறார்.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீதும் மமதா கடும் கோபத்துடன் உள்ளார். திரினமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான சிசிர் அதிகாரி மற்றும் முகுல் ராய் ஆகிய இருவரையும் லால்கருக்குப் போகக் கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளதே இதற்குக் காரணம்.

இதுகுறித்து திரினமூல் தலைவர் ஒருவர் கூறுகையில், அபர்னா சென் லால்கருக்குப் போகலாம். ஆனால் எங்களது தலைவர்கள் போகக் கூடாதா என்று கோபமாக கேட்டார்.

இறுப்பினும் கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த விரிசல் மேலும் பெரிதாகாது, உடனடியாக உறவு முறியாது என்று மமதா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். அது குறித்து தனது கட்சியினர் மத்தியில் அவர் பேசுகையில், காங்கிரஸுடன் உறவை முறிக்க நான் விரும்பவில்லை. அதேசமயம், சிபிஎம்முடன் மட்டும் ஆலோசனை மேற்கொண்டு எந்த முடிவையும் மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது. நச்சுத்தன்மை வாய்ந்த பாம்பை விட மோசமானது சிபிஎம். அதை காங்கிரஸ் நம்பி விடக் கூடாது என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 வார காலமாக கொல்கத்தாவிலேயே இருந்த மமதா தற்போது டெல்லி திரும்பியுள்ளார்.

மமதாவுக்கும், மத்திய அரசுக்கும் இடையே விரிசல் ஏற்பட சமீபத்தில் நிகழ்ந்த இந்த சம்பவங்கள் முக்கிய காரணமாக கருதப்படுகிறது...

- மே மாத இறுதியில், மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டசார்ஜி அய்லா புயலால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடாக மேற்கு வங்க மாநில அரசுக்கு ரூ. 1000 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால் இந்த நிதியை நேரடியாக மாநில அரசிடம் வழங்காமல், சம்பந்தப்பட்ட ஊராட்சி அமைப்புகளுக்கே மத்திய அரசு தந்து விட வேண்டும் என மமதா வலியுறுத்துகிறார்.

ஆனால் இதை ஏற்க முடியாது என்பதை மறைமுகமாக குறிப்பிடும் வகையில், மேற்கு வங்க அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான உறவு அரசியல் சட்டமைப்புக்கு உட்பட்டது. இதை மீற முடியாது என்று தெரிவித்தார் பிரதமர் மன்மோகன் சிங். இதன் மூலம் மமதாவின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காது என்பது மறைமுகமாக அவருக்கு உணர்த்தப்பட்டது.

- அய்லா புயல் தொடர்பாக ஜூன் மாதம் மேற்கு வங்க மாநில அரசு நடத்திய 2 அனைத்துக் கட்சிக் கூட்டங்களையும் புறக்கணித்தார் மமதா. ஆனால் காங்கிரஸ் இதில் பங்கேற்றது.

- லால்கருக்கு துணை ராணுவப் படையை அனுப்பிய விவகாரம்.

இப்படி அடுத்தடுத்து மமதாவுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு முற்றி வருவதால் இந்தக் கூட்டணி எத்தனை நாட்களுக்கு நீடிக்கப் போகிறதோ என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X