For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேக வேகமாய் சிலைகள் திறந்த மாயாவதி!

By Staff
Google Oneindia Tamil News

லக்னோ: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால், தடை வந்து விடுமோ என்ற பயத்தால் தனது சிலை மற்றும் கன்ஷிராம், அம்பேத்கர் நினைவிடங்களே திட்டமிட்டதற்கு எட்டு நாட்களுக்கு முன்பே திறந்து விட்டார் மாயாவதி.

உ.பி. முதல்வர் மாயாவதியின் சிலை, அம்பேத்கர் ஸ்தலம் என்ற பெயரில் கோமதி நகரில் அமைக்கப்பட்ட நினைவிடம், டெல்லியில் அமைக்கப்பட்ட கன்ஷிராம் நினைவிடம் உள்ளிட்டவற்றைத் திறக்க தடை கோரி டெல்லியைச் சேர்ந்த ரவிகாந்த் என்ற வக்கீல் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். நேற்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சிலைகள், நினைவிடங்கள் திறப்பு விழா ஜூலை 3ம் தேதிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்குள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் எங்கே தடை வந்து விடுமோ என்ற பயத்தில் நேற்று இரவே இவற்றை திறந்து விட்டார் மாயாவதி.

சிலைகள், நினைவிடங்கள் திறப்பு உள்பட மொத்தம் 15 திட்டங்களை நேற்று அவர் தொடங்கி வைத்து விட்டார்.

இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் கூருகையில், ரவிகாந்த் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பான விசாரணை வருகிற 29ம் தேதி வருகிறது.

அங்கு தடை விதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் இரவே 15 திட்டங்களையும் முதல்வர் மாயாவதி தொடங்கி வைத்து விட்டார் என்றார்.

இதுகுறித்து ரவிகாந்த் கூறுகையில், அவசரம் அவசரமாக தனது சிலை உள்ளிட்ட நினைவிடங்கள் ஆகியவற்றைத் திறந்து விட்டார் மாயாவதி. இதுவே எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும் என்றார்.

இந்த நிலையில் லக்னோவில் செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டிய மாயாவதி, சிலை திறப்பு உள்ளிட்டவை முன்கூட்டியே நடந்ததற்கான காரணத்தை விளக்காமல், தலித் சமுதாயத்திற்கு எதிரான நடவடிக்கையாக ரவிகாந்த்தின் வழக்கை விமர்சித்தார்.

அவர் கூறுகையில், எனது பெயரைக் கெடுப்பதற்காக எதிரிகள் விஷமப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். பொதுமக்களின் பணத்தை வீணடித்து பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நினைவிடங்கள் கட்டுவதாக கூறுகின்றனர்.

ஆனால் இவையெல்லாம் அடிப்படை ஆதாரமற்றவை. நான் பொதுமக்கள் பணத்தை வீணடிக்கவில்லை.

தனது வாரிசின் சிலையை தனது சிலைக்குப் பக்கத்தில் நிறுவ வேண்டும் என்பது மறைந்த கன்ஷிராமின் விருப்பமாகும். இதனால்தான் அவரது சிலைக்கு அருகில் எனது சிலை திறக்கப்பட்டது என்றார்.

கான்டிராக்ட்களுக்கு இட ஒதுக்கீடு:

இந் நிலையில் தலித் மற்றும் பழங்குடியினர் வாக்கு வங்கியை பத்திரப்படுத்தும் இன்னொரு முயற்சியாக, அரசு ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்வோருக்கான நடைமுறைகளில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளார் மாயாவதி.

ராகுல் காந்தியை முன்வைத்து மாயாவதியின் தலித் கோட்டையை தகர்க்க முயன்று வருகிறது காங்கிரஸ். இதன் காரணமாக ஆடிப் போயிருக்கும் மாயாவதி, தலித் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு வேலைகளில் இறங்கியுள்ளார்.

இந்த நிலையில், அரசு கான்டிராக்ட் பணிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

அதன்படி ரூ. 5 லட்சம் வரையிலான அரசு ஒப்பந்தப் பணிகளில் தலித்கள் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.

இதுகுறித்து மாயாவதி கூறுகையில், இதன்படி 21 சதவீத பணிகள் தாழ்த்தப்பட்ட கான்டிராக்டர்களுக்கும், 2 சதவீத பணிகள் பழங்குடியின கான்டிராக்டர்களுக்கும் வழங்கப்படும்.

தற்போது அரசு வேலைவாய்ப்பில் தாழ்த்தப்பட்டோருக்கு 21 சதவீதமும், பழங்குடியினருக்கு 2 சதவீதமும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இது இனிமேல் கான்டிராக்டர்களுக்கும் கடைப்பிடிக்கப்படும்.

இதுதொடர்பாக விரைவில் சட்டம் கொண்டு வரப்படும். இதன் மூலம் டென்டர்கள் விடும்போது இந்த இட ஒதுக்கீட்டை அரசு அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டும். இதை முறையாக கடைப்பிடிக்காத அரசு அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், அம்பேத்கர் கிராமங்கள் அனைத்தும் புனரமைக்கப்படும். தற்போது இங்கு மேற்கொள்ளப்படும் பணிகளில் எனக்குத் திருப்தி இல்லை. எனவே இவற்றை நிவர்த்தி செய்யும் வரையில் புதிதாக அம்பேத்கர் கிராமங்கள் உருவாக்கப்படாது என்றார் மாயாவதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X