For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொறுமை 'ஓவர்'.. இலங்கைக்கு இந்தியா தந்த 'ஷாக்'!

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழர் பகுதிகளிலிருந்து இலங்கை ராணுவம் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும், அப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை 10 நாள்களுக்குள் முடிக்க வேண்டும், இல்லாவிட்டால் அந்தப் பணியில் நீ்ங்கள் விரும்பாவிட்டாலும் நாங்கள் ஈடுபடுவோம் என்று இலங்கையிடம் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

மேலும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்குத் திரும்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெல்லி வந்த அதிபர் ராஜபக்சேவின் சகோதரர்களிடம் இந்தியா கூறியுள்ளது.

புலிகளுக்கு எதிரான நடவடிக்கையை இலங்கை ராணுவம் முடிக்கும் வரை பொறுமை காத்த மத்திய அரசு இப்போது தமிழர்களின் உரிமைகளைக் காக்கும் நடவடிக்கைகளை மெல்ல தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரரான பாதுகாப்பு ஆலோசகர் பாசில் ராஜபக்சே, இன்னொரு சகோதரரும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோதபய ராஜபக்சே ஆகியோர் அதிபரின் செயலாளர் லலித் வீரசிங்கவுடன் டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தியபோது இந்த விஷயங்களை இந்தியத் தரப்பு எடுத்து வைத்தது.

தமிழர் பகுதிகளில் இயல்புநிலை திரும்பாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அப்பகுதியில் ராணுவத்தினரின் அளவுக்கு அதிகமான நடமாட்டம்தான் என்று 'ரா' கொடுத்துள்ள தகவல்கதளை சுட்டிக் காட்டிய இந்தியத் தரப்பு உடனடியாக ராணுவத்தை வாபஸ் பெறும் நடவடிக்கைகளைத் தொடங்குமாறு வலியுறுத்தியது.

அதே போல இந்தக் குழு வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்தபோது, முகாம்களில் தமிழர்கள் போதிய உணவு, சுகாதார வசதியின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளது கவலை தருவதாகக் கூறிய அவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தமிழர்கள் பாதிப்பு அடைந்து வருவதால் அனைத்து முகாம்களையும் மூடிவிட்டு அவர்கள் உடனே வீடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்தக் குழு இந்திய பாதுகாப்புத்துறைச் செயலாளர் விஜய் சி்ங்கை சந்தித்தபோது, தமிழர் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணியை இலங்கை அரசு உடனே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் கண்ணி வெடிகள் அகற்றும் பணியை இலங்கை அரசு 10 நாட்களுக்குள் தொடங்காவிட்டால் அதன் பிறகு அந்தப் பணியில் இந்தியா ஈடுபடும் என்றும் திட்டவட்டமாக இலங்கை குழுவிடம் கூறப்பட்டுள்ளது.

புலிகளின் பெயரால் சீனா, பாகிஸ்தானுடன் இலங்கை நெருக்கம் காட்டியதை இந்தியா எரிச்சலுடன் பார்த்து வந்தது. இந் நிலையில் புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டதால் இலங்கையை மீ்ண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர இந்தியா நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாகவே தமிழர் பிரச்சனையில் இனியும் மத்திய அரசு அமைதியாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மறு சீரமைப்புக்கு வேண்டிய அளவு உதவுவதாகவும் அந்தக் குழுவிடம் மத்திய அரசு உறுதி தந்துள்ளதோடு, இனியும் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் எண்ண ஓட்டங்களை புறக்கணித்துவிட்டு செயல்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு உரிய மரியாதை, அரசியல் உரிமை, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சிங்களர்களுக்கு இணையான சம வாய்ப்பும் தரப்பட வேண்டும் என்றும் இந்தியத் தரப்பு வலியுறுத்தியுள்ளதாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்திலிருந்து கடும் அரசியல் நெருக்குதல் தரப்பட்ட நிலையிலும் புலிகள் விஷயத்தில் இலங்கையின் ராணுவரீதியான நடவடிக்கைகளில் தலையிடாமல் இருந்ததை சுட்டிக் காட்டிய அமைச்சர் கிருஷ்ணா, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பகை நாடுகளுடன் இலங்கை அளவுக்கு அதிகமாக நெருங்குவதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரித்துவிட்டார்.

மேலும் கச்சத் தீவை ராணுவ கேந்திரமாக்கவோ இலங்கையில் சீனா கடற்படைத் தளம் அமைக்கவோ இந்தியா அனுமதிக்காது என்றும் பாதுகாப்புத்துறைச் செயலாளர் விஜய் சிங் தெரிவித்தார்.

தங்களுடன் கொஞ்சிக் குலாவிய இந்திய அதிகாரிகள் திடீரென இவ்வளவு கடுமையாகப் பேசியதை இலங்கை குழு எதிர்பார்க்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மகிழ்ச்சியோடு டெல்லி வந்த குழு இறுக்கத்துடன் தான் கொழும்பு திரும்பியுள்ளது.

இதையடுத்தே நேற்று இலங்கை அரசு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், இடம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் 6 மாதத்துக்குள் அவரவர் இல்லங்களுக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X