உள்நாட்டு டிக்கெட் முன்பதிவு 15 நாட்களுக்கு ரத்து-ஏர் இந்தியா

 
Share this on your social network:
   Facebook Twitter Google+ Comments Mail

டெல்லி: விமானிகளின் வேலை நிறுத்தம் காரணமாக ஏர் இந்தியா நிறுவனம் உள்நாட்டு டிக்கெட் விற்பனைக்கான முன்பதிவை 15 நாட்களுக்கு ரத்து செய்திருப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் அரவிந்த் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

ஊக்க தொகை மற்றும் படிகளை ஏர் இந்தியா நிறுவனம் குறைந்ததை அடுத்து விமானிகள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் 46 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் விமானிகளின் சங்கங்களுக்கும் ஏர் இந்தியா தலைவர் அரவிந்த் ஜாதவுக்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

கடந்த 3 நாட்களில் மட்டும் நிறுவனத்துக்கு சுமார் ரூ. 84 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 180 விமானிகள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் விமானிகளுக்கு கொடுக்கும் படி சுமார் ரூ. 1000 கோடியில் இருந்து ரூ. 1500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரத்தான விமான டிக்கெட்டுகளுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதற்கு சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவ பல அதிகாரிகளை அனைத்து விமான நிலையங்களிலும் பணியில் அமர்த்தியுள்ளோம்.

மேலும் 15 நாட்களுக்கான உள்நாட்டு முன்பதிவை ரத்து செய்துள்ளோம் என்றார்.

விமான பயணிகளுக்கு ரயில்-மம்தா...

மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில்,

ஏர் இந்தியா நிறுவன வேலைநிறுத்தம் காரணமாக பல பயணிகள் கொல்கத்தாவில் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்காக கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

நாளை முதல் செயல்படும் இந்த சிறப்பு ரயில்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் இயக்கப்படும். இதற்காக தனி கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

அதிவேக ரயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்படும். அந்தமானி தீவில் இருப்பவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு கப்பல் சேவைக்கு ஏற்பாடு செய்யுமாறு கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் முகுல் ராயிடம் கேட்டு கொள்கிறேன் என்றார்.

Please Wait while comments are loading...

Videos