கண்டனக் கூட்டத்தில் ஸ்ரீபிரியா, விவேக் ஆபாசப் பேச்சு- பத்திரிக்கையாளர்கள் கொதிப்பு

Subscribe to Oneindia Tamil
Sripriya and Vivek
சென்னை: நடிகர் சங்கத்தினர் நேற்று நடத்திய கண்டனக் கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களை மிகவும் ஆபாசமாக விமர்சித்துப் பேசிய நடிகர் விவேக், ஸ்ரீபிரியா, விஜயக்குமார் ஆகியோரைக் கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் கொதிப்புடன் கூறியுள்ளனர்.

நடிகர் சங்கம் சார்பில் நேற்று கண்டனக் கூட்டம் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற அவசர கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மூத்த பத்திரிகையாளர்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு தினமலர் செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நடவடிக்கையை கண்டித்துப் பேசினர்.

ஒரு பத்திரிகை தவறான செய்தி வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவித்த நிலையில், அதன் மீது நடவடிக்கை எடுக்க விரும்பினால் மானநஷ்ட வழக்கு, அவதூறு வழக்கு போன்றவற்றை தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

அதற்கு மாறாக காவல் துறையினர், செய்தி ஆசிரியரை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளது ஜனநாயக நடைமுறைகளுக்கு ஏற்றதல்ல என்றும், இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் கூட்டத்தில் பேசிய பத்திரிகையாளர்கள் கூறினார்கள்.

சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கைது செய்யப்பட்ட செய்தி ஆசிரியரை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தினார்கள்.

கூட்டத்தில், நடிகர் சங்கக் கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்ட, ஸ்ரீபிரியா, விவேக், விஜயக்குமார் ஆகியோரது பேச்சுக்கள் அடங்கிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

அதில், பத்திரிகையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் தரக்குறைவாக விமர்சித்து அவர்கள் ஆபாசமாக பேசியதைக் கேட்ட பத்திரிக்கையாளர்கள் கடும் கொந்தளிப்படைந்தனர்.

இந்த நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என அவர்கள் ஆவேசமாக கூறினர்.

நடிகர் சங்கத்தின் நடவடிக்கை மற்றும் செய்தி ஆசிரியர் கைது ஆகியவற்றைக் கண்டித்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்