கொழும்பு சென்றடைந்தது திமுக கூட்டணி எம்.பிக்கள் குழு

 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

கொழும்பில் திமுக கூட்டணிக் குழு
சென்னை: தமிழக திமுக கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்கள் குழு இன்று இலங்கைத் தலைநகர் கொழும்பு சென்றது.

இலங்கையில் முகாம்கள் என்ற பெயரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களின் அவல நிலை குறித்து ஐ.நா. சபை உள்பட உலகெங்கும் உள்ள மனிதாபிமான அமைப்புகள் கவலை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் முகாம்களுக்கு இந்தியாவின் சார்பில் எம்.பிக்கள் குழு ஒன்றை அனுப்ப வேண்டும் என்று திமுக, தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் சமீபத்தில் பிரதமரை நேரில் சென்று வலியுறுத்தினர்.

இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் தமிழக அளவிலான ஒரு குழு இலங்கைக்குச் செல்லும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்தக் குழு இன்று பிற்பகல் சென்னையிலிருந்து கிளம்பி கொழும்பு நகரை அடைந்தது.

தமிழக குழுவினர் யாழ்ப்பாணம், கண்டி ஆகிய நகரங்களுக்குச் செல்லவுள்ளனர். மேலும், மாணிக் பார்ம் உள்ளிட்ட இடம் பெயர்ந்தோர் முகாம்களையும் பார்வையிடவுள்ளனர்.

இலங்கை அதிபர் ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா, தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளனர்.

தமிழக திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவற்றின் எம்.பிக்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தொல். திருமாவளவன் இடம் பெற்றுள்ளார்.

முன்னதாக இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

இலங்கையில் நடந்த போரின் போது உள்நாட்டில் இடம் பெயர்ந்த லட்சக் கணக்கான தமிழர்கள் மீண்டும் அவர்களின் வீடுகளுக்கு திரும்பவும், அவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும், இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்றும், அப்பாவி தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை நிறுத்தும்படி எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும் கடந்த மாதம் 22ம் தேதியன்று, தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தை கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த எம்.பி.க்கள், பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 3.10.09 அன்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினார். அதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய மத்திய மந்திரி ப.சிதம்பரம், இலங்கைக்கு எம்.பி.க்கள் குழுவை அனுப்புவது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் 8ம் தேதி காலையில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முதல்வர் கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசியதையொட்டி, 10.10.09 அன்று காலையில் தமிழக எம்.பி.க்கள் 10 பேரைக் கொண்ட குழு இலங்கைக்கு செல்வதென்றும், 10-ந் தேதி முதல் 14ம் தேதி வரை அவர்கள் இலங்கையில் பல பகுதிகளையும் பார்வையிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இலங்கைக்கு செல்லும் எம்.பி.க்கள் குழுவுக்கு நாடாளுமன்ற தி.மு.க. கட்சி தலைவர் டி.ஆர்.பாலு தலைமை ஏற்பார். எம்.பி.க்கள் என்.எஸ்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன், கவிஞர் கனிமொழி, ஏ.கே.எஸ்.விஜயன், ஜே.எம்.ஆரூண், டி.கே.எஸ்.இளங்கோவன், தொல்.திருமாவளவன், கே.எஸ்.அழகிரி, ஹெலன் டேவிட்சன் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெறுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கருணாநிதியுடன் ஆலோசனை...

முன்னதாக இந்தக் குழுவைச் சேர்ந்த எம்.பிக்கள் 9 பேர் முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அவர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் ஆகியோரும் உடன் இருந்தனர்.

Write a Comment
AIFW autumn winter 2015