For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அண்ணல் நபிகள் வழியில் நடந்து வளமும், நலமும் பெறுவோம் - கருணாநிதி வாழ்த்து

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: அண்ணல் நபிகள் நாயகம் வாழ்ந்து காட்டிப் போதித்த அறநெறிகளில் வாழ்ந்து வளமும், நலமும் பெற எனது உளமார்ந்த மிலாது நபித் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த திருநாள் ஆண்டு தோறும் "மிலாது நபி'' நன்னாளாக இஸ்லாமிய மக்களால் நிறைந்த மகிழ்ச்சியோடும், மிகுந்த எழுச்சியோடும் கொண்டாடப்படுகிறது.

கருவில் இருக்கும் போதே தந்தையாரையும், பிறந்து ஆறு வயதாகும் போது தாயாரையும் இழந்து, சிறு வயது முதல் சொல்லொணாத் துன்பங்களைச் சந்தித்த நபிகள் நாயகம் இஸ்லாமியத் தத்துவத்தை ஒரு வாழ்க்கை நெறியாக மக்களுக்குப் போதித்தார்; போதித்தபடியே வாழ்ந்து காட்டினார்.

அவர் தமது வாழ்நாளில் பொய் பேசியதில்லை; வாக்குறுதிகளில் இருந்து மாறியது இல்லை; மது அருந்ததியதில்லை; சூதாடியதில்லை; ஏசிப் பேசி, இகழ்ந்து பிறர் மனத்தைப் புண்படுத்தி இழிவு செய்ததில்லை; புறங்கூறிப் பழி தூற்றியதுமில்லை, எவரையும் சபித்ததும் இல்லை;

தனக்குத் துன்பம் இழைத்தவர்களைப் பழிவாங்கியதும் இல்லை; அவர் எப்பொழுதும் ஏழைகளுக்காக இரக்கப்பட்டார்; அனாதைகளுக்கு ஆதரவு தந்தார்; துன்பத்தில் சிக்கிக் கொண்டவர்களின் துயர்களைத் துடைத்தார்; விதவைப் பெண்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார்.

இவற்றின் காரணமாகவே நபிகள் பெருமானாரின் அன்பு கொண்ட மக்கள் அவரை நம்பிக்கைக்குரியவர், அடைக்கலம் அளிப்பவர், வாய்மையாளர் எனப் பொருள்படும், "அல் அமீன்'' எனும் சிறப்புப் பெயர் கொண்டு அழைத்தனர்.

இத்தகைய சிறப்புக்களுக்கெல்லாம் உரிய அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளாகிய "மிலாது நபி'' நன்னாளை இஸ்லாமியச் சகோதரர்கள் மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்பதற்காக முதன் முதலாக நான் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற 1969-ம் ஆண்டிலேயே விடுமுறை நாளாக அறிவித்துச் செயல்படுத்தினேன்.

அந்த மிலாது நபி நாள் விடுமுறையை முந்தைய அரசு ரத்து செய்ததையும், 2006-ல் இந்த அரசு அமைந்தபோது, மிலாது நபித் திருநாளுக்கு மீண்டும் "அரசு விடுமுறை'' வழங்கியதையும் இந்நாளில் நினைவு கூர்ந்து; அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இஸ்லாமியர்க்கு மூன்றரை விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது உள்பட பல்வேறு சலுகைகளை நல்கி, தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்களின் நலன் காத்து வரும் இந்த அரசின் சார்பில், இஸ்லாமிய மக்கள் அனைவரும் அண்ணல் நபிகள் நாயகம் வாழ்ந்து காட்டிப் போதித்த அறநெறிகளில் வாழ்ந்து வளமும், நலமும் பெற எனது உளமார்ந்த மிலாது நபித் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X