For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. அவதூறு வழக்கு தொடர்ந்தால் சந்திக்கத் தயார் - கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சிறுதாவூர் நில விவகாரம் தொடர்பாக என் மீது வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க நான் தயார் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை:

கேள்வி: நீங்கள் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து சிறுதாவூர் என்கிற இடத்தில் ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை ஜெயலலிதா அபகரித்து வீடு கட்டிக்கொண்டுவிட்டதாக நீங்கள் பொய்யான தகவலை பரப்பி வந்ததாக ஜெயலலிதாவும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும் கூறியிருக்கிறார்களே?

பதில்: பேரவையிலேயே இதற்கு நான் பதில் சொல்லியிருக்கிறேன். சிறுதாவூர் கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை அபகரித்தது பற்றி 2006-ம் ஆண்டிலேயே ஊர்வலமாக கோட்டைக்கு வந்து என்னிடம் புகார் மனுவினை கொடுத்தவர், தற்போது அ.தி.மு.க.விற்காக அழைக்காமலேயே இடைத்தேர்தலில் மேடை ஏறி பிரசாரம் செய்த தோழர் என்.வரதராசன் தான். அவர் கொடுத்த புகார் மனுவிலே,

"1967-ம் ஆண்டு அன்றைய தமிழக முதல்-அமைச்சரான சி.என்.அண்ணாதுரையால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய தலித் மக்கள் விவசாயம் செய்து வாழ்வதற்காக 20 குடும்பங்களுக்கு விவசாய நிலம் தலா 2.50 ஏக்கர், குடிமனைக்காக 10 சென்ட் மற்றும் பொது பயன்பாட்டிற்காக ஒரு ஏக்கர் என மொத்தம் 53 ஏக்கர் நிலம், பட்டா வழங்கப்பட்டது.

1992-ம் ஆண்டு வாக்கில் சிறுதாவூரில் அமைந்துள்ள சொகுசு பங்களாவில் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் வந்து தங்க ஆரம்பித்த பின்னர் மேற்படி நிலங்களில் இருந்து தலித் மக்கள் நிர்ப்பந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பலர் பெயரில் போலி கிரய பத்திரப்பதிவுகளும் நடைபெற்று, முறையான விசாரணை நடைபெறாமல் பட்டா மாற்றங்களும் செய்யப்பட்டு சிறுதாவூர் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட மேற்படி நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. கிடைத்துள்ள வருவாய்த்துறை ஆவணங்கள் அடிப்படையில் சசிகலா குடும்பத்தை சேர்ந்த பலர் பெயரில் பட்டாக்கள் மாற்றப்பட்டுள்ளன.

எனவே, சிறுதாவூர் தலித் மக்களுக்கு மீண்டும் விவசாய நிலம் கிடைத்திடவும்; போலியான பத்திரப்பதிவு மற்றும் பட்டாக்களை ரத்து செய்து சிறுதாவூர் தலித் மக்களுக்கு வழங்கிடவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். போலி பத்திரப்பதிவு பட்டா மாற்றம் செய்து தலித் மக்களின் நிலங்களை மோசடி செய்தவர்கள் மீது உரிய விசாரணையும், நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டுகிறோம்.

மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தங்கியிருந்த சிறுதாவூர் பங்களா அமைந்துள்ள இடம் அவரது தோழி சசிகலாவின் நெருங்கிய உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் பெயரில் பதிவு மற்றும் பட்டா உள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அந்த பங்களாவை சுற்றியுள்ள காம்பவுண்டுக்குள் அரசு புறம்போக்கு நிலம் சுமார் 200 ஏக்கர் வளைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே ஜெயலலிதா மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையால் பதிவு செய்யப்பட்டுள்ள வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் சிறுதாவூர் பங்களாவும் குற்றப்பத்திரிகையில் சொத்தாக சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி நிலங்கள் சம்பந்தமாகவும் தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்தி புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களை கையகப்படுத்தி சிறுதாவூர் கிராமத்தில் வசிக்கும் நிலமற்ற இதர விவசாய குடும்பங்களுக்கு வழங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.''

இந்த மனுவின் அடிப்படையிலேதான் உண்மையை அறிய விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதில் புகார் கொடுத்தவர்கள் மார்க்சிஸ்ட் கம்iனிஸ்டு கட்சியினர். உண்மையை அறிய விசாரணை கமிஷன் அமைத்ததுதான் அரசின் பணி. இதிலே நான் பொய்யான தகவலை பரப்பினேன் என்று சொல்வது என்ன நியாயம்?

கேள்வி: சிறுதாவூர் நிலத்தில் ஜெயலலிதாவுக்கு பங்கு இல்லை என்று நீதிபதி சிவசுப்பிரமணியம் கமிஷன் அறிக்கையில் சொல்லப்பட்டுவிட்டது என்பதை போல சில பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. அந்த சிறுதாவூர் நிலம் தன்பெயரில் இல்லை என்று ஜெயலலிதாவும் அறிக்கை விடுத்துள்ளாரே?

பதில்: சிவசுப்பிரமணியம் கமிஷன் விசாரணையே சிறுதாவூர் நிலத்தில் ஜெயலலிதாவுக்கு பங்கு உண்டா என்பதை பற்றியோ, அந்த நிலம் அவர் பெயரில் உள்ளதா என்பதை பற்றியோ அல்ல. சிறுதாவூர் பங்களா உள்ள நிலம் அவர் பெயரில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

அவரே முன்பு விடுத்த அறிக்கையில் அந்த வீட்டிற்கு வாடகை கொடுத்துவிட்டு தங்குவதாக சொல்லியிருக்கிறாரே? சிவசுப்பிரமணியம் கமிஷன் விசாரணைக்காக அந்த அம்மையாரையே அழைக்கவே இல்லையே! இந்த நிலையில் அவருக்கு பங்கு இருக்கிறதா? இல்லையா? என்ற பிரச்சினை இப்போது எங்கே வந்தது? ஆனால் அவர் அடிக்கடி சென்று தங்குகின்ற சிறுதாவூர் பங்களா யாருடையது,

அவர் யாருக்கு வாடகை கொடுக்கிறார், அந்த பங்களாவின் சுற்றுச்சுவர் மற்றும் வேலிக்குள் அமைந்துள்ள மொத்த நிலப்பரப்பு 115 ஏக்கர்; அதில் 35 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் என்று சொல்லப்படுகிறதே அது உண்மையா? இல்லையா?.

அரசுக்கு சொந்தமான அந்த புறம்போக்கு நிலங்களை அபகரித்து வளைத்துப்போட்டு கொண்டது யார்? சிவசுப்பிரமணியம் கமிஷன் அறிக்கையிலே அந்த பங்களாவிற்கு பக்கத்தில் தலித் மக்களுக்காக அரசினால் வழங்கப்பட்ட 53 ஏக்கர் நிலத்தை வாங்கியவர்கள் பரணி ரிசார்ட்ஸ்' என்றும், அதன் உரிமைதாரர்கள் வி.என்.சுதாகரன், இளவரசி, சித்ரா என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் எல்லாம் யார்? ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலாவுக்கு மிக நெருக்கமான உறவினர்களா, இல்லையா? 2005-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்திலே அந்த பகுதியிலே உள்ள இடங்களுக்கெல்லாம் ஒரே நாள் இடைவெளியில் பட்டா மாற்றம் மிகவும் அவசர அவசரமாக செய்யப்பட்டதாகவும், அந்த பட்டா மாற்றங்கள் செய்வதற்காகவே பத்து நாட்களில் ஓய்வு பெறுகின்ற நிலையிலே இருந்த தியாகராஜன் என்ற தாசில்தாரரை பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு மாறுதல் செய்து -அவர் முறைகேடாக அந்த பட்டா மாற்றங்களையெல்லாம் செய்து கொடுத்தார் என்றும் சிவசுப்பிரமணியம் கமிஷன் சொல்லியிருக்கிறதே,

அந்த முறைகேடுகளுக்கெல்லாம் பொறுப்பானவர்கள் யார், எந்த ஆட்சியில் அது நடைபெற்றது என்பதை பற்றியெல்லாம் அறிக்கை விடும் ஜெயலலிதா பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.

கேள்வி: சிவசுப்பிரமணியம் கமிஷன் அறிக்கை தங்களுக்கு சாதகமான அறிக்கை என்பதைப்போல ஜெயலலிதாவும், அ.தி.மு.க.வினரும் சொல்லிக்கொள்கிறார்களே?

பதில்: சிறுதாவூரில் தலித்களுக்காக வழங்கப்பட்ட நிலத்தை சட்ட விதிகளுக்கு புறம்பாக சில பேர் வாங்கிக்கொண்டார்கள். அதனை திரும்பப்பெற்று நிலமற்ற தலித்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்iனிஸ்டு கட்சியின் கோரிக்கையை ஏற்றுத்தான் சிவசுப்பிரமணியம் விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டது.

தற்போது அந்த கமிஷன் கொடுத்துள்ள அறிக்கையில், தலித்களுக்காக ஏற்கனவே வழங்கப்பட்ட அந்த நிலம் தற்போது யாருடைய பொறுப்பிலே இருந்தாலும், அந்த பட்டாவையெல்லாம் ரத்து செய்துவிட்டு மீண்டும் நிலமற்ற தலித் மக்களுக்கு வழங்கவேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

மேலும் விசாரணை கமிஷன் அறிக்கையில்-தலித்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் தற்போது இளவரசி, சுதாகரன், சித்ரா ஆகியோரை பங்குதாரர்களாக கொண்ட பரணி ரிசார்ட்ஸ்'க்கு சொந்தமாக உள்ளது என்றும் சொல்லப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வினர் பிரச்சினைக்குரிய அந்த இடம் ஜெயலலிதாவிற்கு சொந்தமல்ல, இளவரசி, சுதாகரன், சித்ரா ஆகியோருக்குத்தான் சொந்தம் என்று சொல்கிறார்கள்.

ஜெயலலிதாவோ விசாரணை அறிக்கையில் அந்த இடத்திற்கும், தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிட்டது; அதுவே நியாயத்திற்கும், தர்மத்திற்கும் கிடைத்த வெற்றி என்று சொல்லி கொள்கிறார். சிவசுப்பிரமணியம் கமிஷன் அறிக்கையை முழுவதுமாக படித்தால் உண்மை புரியும்.

நம்மை பொறுத்தவரையில் சிறுதாவூரில் தலித் மக்களுக்காக வழங்கப்பட்ட நிலத்தையோ, அரசுக்கு சொந்தமான நிலத்தையோ ஜெயலலிதா தன் பெயருக்கு வாங்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அந்த இடத்தை வாங்கியவர்கள் ஜெயலலிதா குடும்பத்திலே உள்ளவர்களா? இல்லையா? அந்த இடத்தில் கட்டப்பட்ட பங்களாவில் இன்றளவும் ஜெயலலிதா அடிக்கடி சென்று தங்குகிறாரா? இல்லையா? இதிலே என்ன தர்மம்? நியாயம்?

கேள்வி: சிவசுப்பிரமணியம் கமிஷன் அறிக்கையில் கூறப்பட்ட சில பகுதிகளை குறிப்பிடுவீர்களா?

பதில்: நிலம் ஒப்படைக்கப்படும்போது அந்த நிலத்தை வேறு யாருக்கும் விற்கக்கூடாது என்ற நிபந்தனையோடு ஒப்படை செய்யப்பட்டதால் நிலத்தை விற்றிருப்பது-விற்பனை சட்டத்திற்கு புறம்பானது. எனவே அரசு அப்படி விற்கப்பட்ட நிலத்தை திரும்ப எடுத்துக்கொள்ள உரிமை உண்டு.

சிறுதாவூரில் உள்ள பங்களாவை பொறுத்தவரையில் 35 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அது கட்டப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

இதுவும் கமிஷனின் விசாரணைக்கு உட்பட்டது என்ற போதிலும்-சித்ரா என்பவர் நிலஆக்கிரமிப்பு சட்டத்தின்கீழ் எடுக்கப்படும் நடவடிக்கையை தான் சந்திக்க தயாராக இருப்பதாக சொன்னதாலும், அரசு தரப்பிலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாலும்-நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 53 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டதாக சொல்லப்படும் பிரச்சினை குறித்து மட்டும் விசாரணை செய்ய கமிஷன் முடிவு எடுத்தது.

பரணி ரிசார்ட்ஸ்' என்ற நிறுவனம் அந்த நிலத்திற்கான பட்டா மாறுதலை சட்டத்திற்கு முரணாக தவறான முறையில் விசாரணை எதுவுமின்றி பெறுவதற்காக அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்றிருக்கிறது. பட்டாவை இவ்வாறு வழங்குவதற்கென்றே தூத்துக்குடியில் பணியாற்றி கொண்டிருந்த எம்.தியாகராஜன் என்ற வட்டாட்சியர் ஒருவரை - அவருக்கு என்றே ஒரு பணி இடத்தை உருவாக்கி -காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு திடீரென்று பணி மாற்றம் செய்து -அவர் மூலமாக அதிகார துஷ்பிரயோகம் செய்து பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

பட்டா மாறுதலுக்கான விண்ணப்பம் 27-10-2005 அன்று தாக்கல் செய்யப்பட்டு-வட்டாட்சியர் தியாகராஜன் 31-10-2005 அன்று ஓய்வு பெற இருந்ததால்-எந்தவிதமான விசாரணையும் இன்றி-ஒரே நாளில்-அதாவது 28-10-2005 அன்றே பட்டா மாறுதல் செய்யப்பட்டது.

பட்டா மாறுதலுக்கான விண்ணப்பம் யாரோ ஒருவரால் கொடுக்கப்பட்டுள்ளது. பரணி ரிசார்ட்ஸ்' நிறுவனத்தை சார்ந்தவர்களாலோ, அல்லது அந்த நிறுவனத்தை சேர்ந்த பங்குதாரர்களோ விண்ணப்பம் தரப்படவில்லை.

சசிகலாவிற்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. இந்த பிரச்சினையில் தான் சம்பந்தப்படவில்லை என்று அவர் பதில் தாக்கல் செய்திருந்தபோதிலும்-கமிஷன் முன் ஒரு சாட்சியாக விசாரணைக்கு வரவோ-அவரது குடும்ப உறுப்பினர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை மறுக்கவோ இல்லை.

பரணி ரிசார்ட்ஸ்' நிறுவனத்தின் பிரதிநிதியான டி.சித்ரா என்பவர் பொய் வாக்குமூலங்களை கொடுத்துள்ளார். நிலத்தை 2005-ம் ஆண்டில்தான் வாங்கியதாக அவர் சொல்லியிருக்கிறார். ஆனால் 1994-ம் ஆண்டிலிருந்தே நிலத்தின் பெரும் பகுதி பரணி ரிசார்ட்ஸ்' நிறுவனத்தின் கைவசம்தான் இருந்து வந்திருக்கிறது. இது சட்டத்திற்கு புறம்பான-எந்தவிதமான உரிமையும் இல்லாமல்-முறைகேடான முறையில்-வரம்பு மீறி கைவசம் வைத்திருந்த செயலுமாகும். (இத்தகைய இடத்திலே கட்டப்பட்டுள்ள மாளிகையில் தான் ஜெயலலிதா சென்று தங்குகிறார்).

கேள்வி: உங்கள் மீது ஜெயலலிதா மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்: சந்திக்க தயாராக இருக்கிறேன். அப்போதுதான் விரிவான முறையில்-இன்னும் பல விவரங்களையும், விளக்கங்களையும் சொல்ல முடியும். தொடக்கத்திலிருந்து பிரச்சினைக்குரிய இடங்கள் எப்படியெப்படி யார், யார் பெயர்களில் மாற்றப்பட்டன, அதற்கு அ.தி.மு.க. ஆட்சியில் அரசு இயந்திரம் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டது.

அரசு அதிகாரி ஒருவர் சட்டவிதிகளையெல்லாம் காற்றிலே பறக்கவிட்டு விட்டு, எப்படியெல்லாம் செயல்பட்டார், அதற்கு மேல் அதிகாரிகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்தும் அதை மீறி எப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, சிவசுப்பிரமணியம் கமிஷன் அறிக்கையிலே இன்னும் என்னென்ன சொல்லப்பட்டிருக்கின்றன, பங்களாவிற்குள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கும் அரசு புறம்போக்கு நிலத்தின் கதி என்ன, என்பன போன்ற விளக்கங்கள் எல்லாம் வெளிவர அவர் என் மீது தொடுக்கின்ற வழக்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X