For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2012ம் ஆண்டுக்குள் ஒகேனக்கல் திட்டப் பணிகள் முடிவடையும்: ஸ்டாலின்

By Chakra
Google Oneindia Tamil News

ஒகேனக்கல்: 2012ம் ஆண்டுக்குள் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் முடிவடையும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மக்களின் குடிநீர் தேவையை போக்கும் வகையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜப்பான் நாட்டு உதவியோடு ரூ.1,928 கோடியில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த மடம் கிராமத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்டு வரும் தரைமட்ட நீர் சேகரிப்பு தொட்டியின் கட்டுமானப் பணிகள், நீர்சுத்திகரிப்பு நிலையப் பணிகளை ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

இதையடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நடந்துவரும் தலைமை நீரேற்று நிலைய கட்டுமானப் பணியை ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து இந்தத் திட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், இந்தப் பணிகள் தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் தவறான தகவல் அரசியல் நோக்கத்திற்காகவும், தேர்தலை முன்னிட்டும் பரப்பப்பட்டு வருகின்றன. 2.5 டிஎம்சி தண்ணீர் தமிழகம் எடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசிடம் முறையான அனுமதி பெற்றே திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அதுவும் நமக்கு அனுமதிக்கப்பட்ட 1.4 டிஎம்சி அளவிலான தண்ணீரை மட்டுமே குடிநீருக்காக எடுக்க உள்ளோம்.

இந்த தண்ணீரும் தமிழக எல்லைக்குள்தான் எடுக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக 240 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சமதள நீர்தேக்கத் தொட்டி ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படும். இந்த திட்டத்திற்காக 5 முறையாக டெண்டர் விடப்படுகிறது.

முதல் கட்டமாக ரூ. 60 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த கட்ட டெண்டர்கள் ஜூன் மாதம் விடப்படும். இந்த திட்டம் 2012 டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு முன்பாகவே முடிக்கப்படும் வகையில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு வருகின்றனர். இந்த திட்டத்தை குறித்த காலத்திற்குள் முடிக்கவுள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் கையால் தங்க மோதிரம் வழங்கப்படும்.

மேலும் இந்தப் பகுதியில் கலைக் கல்லூரி ஒன்று அமைப்பதற்காக முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

மாலை 6 மணிக்கு பென்னாகரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்தத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட இன்பசேகரனை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகிறார் ஸ்டாலின்.

செம்மொழி மாநாட்டு பணி-கருணாநிதி கோவை பயணம்:

இதற்கிடையே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பான பணிகளை நேரில் ஆய்வு செய்ய முதல்வர் கருணாநிதி வரும் 24ம் தேதி கோவை செல்கிறார்.

விமானம் மூலம் கோவை செல்லும் அவர் கொடிசியா அரங்கையும் அங்கு நடந்து வரும் மாநாட்டு பந்தல் பணிகள், கண்காட்சி மற்றும் பொது அரங்கத்தையும் ஆய்வு செய்கிறார்.

இதையடுத்து செம்மொழி மாநாட்டுக் குழு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

சட்ட மேலவை அரங்கை பார்வையிட்ட கருணாநிதி:

இந் நிலையில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் சட்ட மேலவைக்கான கூட்ட அரங்கை முதல்வர் கருணாநிதி இன்று பார்வையிட்டார்.

சட்ட மேலவைக்கான சிறப்புச் செயல் அதிகாரியாக ஜமாலுதீன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X