For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபை காங். தலைவர் சுதர்சனம் கோவையில் மரணம்-நாளை உடல் தகனம்

Google Oneindia Tamil News

D Sudarsanam
கோவை: தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவரும், பூவிருந்தவல்லி தொகுதி காங்கிரஸ் எம்.எல.ஏவுமான சுதர்சனம் நேற்று கோவையில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடல் நாளை தகனம் செய்யப்படுகிறது.

67 வயதாகும் சுதர்சனம், கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். 23ம் தேதி முதலே கோவையில் முகாமிட்டிருந்த அவர் 2 நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

24ம் தேதி இரவு ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள காங்கிரஸ் பிரமுகரின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு திடீரென சிறுநீருடன் ரத்தம் கலந்து போனது. உடலும் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிய அளவிலான அறுவைச் சிகிச்சையும் நடத்தப்பட்டது.

தகவல் அறிந்து முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் உள்ளிட்டோர் விரைந்து சென்று சுதர்சனத்தைப் பார்த்தனர். அவருக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் தீவிரமாக மேற்கொள்ளுமாறு டாக்டர்களுக்கு துணை முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதையடுத்து ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் நரசிம்மன் தலைமையிலான குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை சுதர்சனத்தின் நிலைமை மோசமானது. இரவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சில விநாடிகளில் அவர் உயிரிழந்தார்.

இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர். மாநாட்டுத் திடலுக்கும் சுதர்சனம் இறந்த செய்தி பரவியதும் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

தகவல் கிடைத்ததும் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் விரைந்து சென்று மலர்அஞ்சலி செலுத்தினர். கதறி அழுத சுதர்சனத்தின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் கூறினார்.

சென்னை கொண்டு வரப்பட்ட உடல்

கோவையில் மரணமடைந்த சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனத்தின் உடல் இன்று காலை சென்னை கொண்டு வரப்பட்டது.

ஷெனாய்நகரி்ல உள்ள அவரது வீட்டுக்கு உடல் கொண்டுவரப்பட்டபோது அவரது குடும்பத்தினரும்,உறவினர்களும், காங்கிரஸ் கட்சியினரும் கதறி அழுதனர்.

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம் வைத்து சுதர்சனம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நாளை சுதர்சனத்தின் உடல் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கு பல்வேறுதலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இரங்கல் தெரிவித்து செய்தி அனுப்பியுள்ளார்.

மறைந்த சுதர்சனம், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராவார். காமராஜர் காலத்திலேயே அரசியலுக்கு வந்தவர். பின்னாளில் மறைந்த ஜி.கே.மூப்பனாரின் வலது கரம் போல திகழ்ந்தார். காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக 20 வருடங்கள் இருந்தவர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பண்ருட்டி கிராமத்தில் 1943ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பிறந்தவர் சுதர்சனம். பத்தாவது வரை படித்துள்ளார். அடிமட்டத் தொண்டர் நிலையிலிருந்து காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் பதவி வரை உயர்ந்தவர்.

கடந்த 1991, 96, 2001 ஆகிய தேர்தல்களில் பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த தேர்தலிலும் பூந்தமல்லி தொகுதியிலேயே போட்டியிட்டு வென்றார்.

சுதர்சனத்திற்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X