For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிறைவடைந்தது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு-இந்தியாவின் ஆட்சிமொழியாக தமிழை அறிவிக்க கோரி தீர்மானம்

Google Oneindia Tamil News

Tamil Conferance
கோவை: செம்மொழியான தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழத் தமிழர்கள் தங்களது வாழ்வுரிமையை முழுமையாக அடைய மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களுடன், கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நிறைவடைந்தது.

முதலாவது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு இன்றுடன் நிறைவடைந்தது. இதற்கான நிறைவு விழா இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது.

கடந்த 23ம் தேதி கோலாகலமாக தொடங்கிய உலகத் தமிழ் செம்மொழி மாநாடு வெகு விமரிசையாக நடந்து வந்தது. தினசரி பல்வேறு ஆய்வரங்குகள், சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், கவியரங்குகள் என களை கட்டி வந்த மாநாடு இன்றுடன் முடிவடைந்தது.

இதையொட்டி தொல்காப்பியர் அரங்கில் மாலை 4 மணிக்கு நிறைவு விழா தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை தாங்கினார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார்.

விழாவில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு சிறப்பு அஞ்சல் தலையையும் ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் மற்றும் தமிழ் வளர்த்த பேராயர் ராபர்ட் கால்டுவெல் ஆகியோரின் அஞ்சல் தலைகளையும் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆ.ராசா வெளியிட, அவற்றை முதல்வர் கருணாநிதி பெற்றுக் கொண்டார்.

முதல்வர் கருணாநிதி சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கியதற்காக "கணியன் பூங்குன்றனார்'' பரிசு வழங்கினார்.

2007-08ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சிறந்த மென்பொருட்களுக்கான கணியன் பூங்குன்றனார் விருதினை முதல்வர் கருணாநிதி வழங்க அதை விஜயன் பெற்றுக் கொண்டார். அதன்பிறகு கோவையில் அமையவுள்ள செம்மொழி பூங்காவுக்கான வரைபடத்தைத் திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார் முதல்வர் கருணாநிதி. தொடர்ந்து அவர் நிறைவு விழா சிறப்புரையாற்றினார்.

மாநாட்டுத் தீர்மானங்கள் மற்றும் அறிவிப்புகள்

முதல்வரின் பேச்சின்போது இடம் பெற்ற மாநாட்டுத் தீர்மானங்கள் மற்றும் அறிவிப்புகள்...

- தமிழகத்தில் 5 பாரம்பரிய மரபணு பூங்காக்கள் அமைக்கப்படும். இவற்றை வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் பொறுப்பேற்றுக் கவனிப்பார்.

- இலங்கையில் இன்னும் ஆயிரக்ணக்கான தமிழர்கள் தொடர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தாங்கள் சார்ந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நல்வாழ்வும், பாதுகாப்பும், உறுதி அளிக்கப்பட்டு முழுமையான அளுவுக்கு மறுசீரமைப்பு செய்யப்படாதது, மொழி இன உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முழுமையாக நிறைவேற்றப்படாதது வேதனை தருகிறது. இதற்கு உடனடியாக தீர்வு காண முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ள இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என இந்த மாநாட்டின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.

தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும்

- மத்தியில் தமிழ் ஆட்சி மொழி ஆக்கப்பட வேண்டியது தமிழக மக்களின் நீண்ட கால கோரிக்கை. அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்க தாமதம் ஏற்படுமானால், செம்மொழியான தமிழை முதலில் ஆட்சி மொழியாக்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

- சென்னை உயர்நீதமன்றத்தில் தமிழ் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று 2006ம் ஆண்டு ஒருமனதாகத தீர்மானம் நிறவேற்றி, ஆளுநரின் பரிந்துரையையும், தலைமை நீதிபதியின் கருத்துரையையும் இணைத்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதை தாமதமின்றி உடனடியாக நிறைவேற்றி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

கல்வெட்டு கழகம் அமைக்க வேண்டும்

- சமஸ்கிருத மொழிக்குத் தரப்படுவது போல தமிழ் ஆராய்ச்சி, வளர்ச்சிக்கு போதிய மானியத் தொகையை மத்திய அரசு வழங்கிட வேண்டும்.

- இந்திய மொழிகள் அனைத்திலும் தோராயமாக 1 லட்சம் கல்வெட்டுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் ஏறத்தாழ 60 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழ் கல்வெட்டுக்கள் ஆகும். இதனையும், இனி காணப்பட உள்ள கல்வெட்டுக்களையும் கருத்தில் கொண்டு, தமிழகத்தில், இந்திய தேசிய கல்வெட்டியல் நிறுவனத்தை அமைத்திட வேண்டும்.

- கடல் கொண்ட் பூம்புகார் மற்றும் குமரி கண்டத்தில் விரிவான அகழ்வாராய்ச்சியை நடத்திட தேவையான திட்டத்தை வகுத்து மத்திய அரசு செயல்படுத்திட வேண்டும்.

- தமிழகத்தில் ஆட்சி மொழியாக, நிர்வாக மொழியாக, தமிழ் ஆக்கப்பட வேண்டும் என்ற நீண்ட கால கனவு இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இதை நிறைவேற்ற அரசு அலுவலரக்ளும், பொதுமக்களும் தேவையான ஒத்துழைப்பு வழங்கி செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணி

- தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்க தனிச் சட்டம் இயற்றப்படும்.

- மதுரை மாநகரில் தொடங்கப்படவுள்ள தொல்காப்பியர் உலகத் தமிழ் செம்மொழிச் சங்கம் கீழ்க்கண்ட பணிகளைச் செய்யும்:

குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து செம்மொழி மாநாடுகளை நடத்தும்.

திராவிட மொழி கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றைப் பொறுத்து நிரந்தர கண்காட்சி ஒன்று அமமைக்கப்படும்.

தமிழ் மொழியின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய ஆவணக் காப்பகம் அமைக்கப்படும்.

தமிழ் ஆராய்ச்சி உலகத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும்.

தமிழ் ஆராய்ச்சி, தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து அவர்களை உரிய முறையில் ஆதரித்து தமிழ் வளர்ச்சிக்கு முழுமையாக பயன்படுத்தப்படும்.

உலகம் முழுதவும் உள்ள தமிழறிஞர் விவரம் குறித்த கையேடு வெளியிடப்படும்.

- கோவையில் செம்மொழி பூங்கா அமையவுள்ள காந்திபுரம் பகுதியில், ரூ. 100 கோடியில் பிரமாண்டமான மேம்பாலம் அமைக்கப்படும்.

- தமிழ் மொழியின் சிறந்த படைப்புளை ஐரோப்பிய, ஆசிய மொழிகளில் மொழி பெயர்க்க ஏற்பாடு செய்யப்படும். அதேபோல அறிவியல் தொழில்நுட்பம், மருத்துவம் உள்ளிட்டவற்றில் உள்ள பன்னாட்டு படைப்புகளை தமிழாக்கம் செய்யவும் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ் எழுச்சிக்கு ரூ.100 கோடி நிதி

- மாநாட்டின் தொடர்ச்சியாக தமிழ் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் தமிழக அரசின் சார்பில் தனியாக ரூ. 100 கோடி சிறப்பு நிதி உருவாக்கப்படும் என்றார் கருணாநிதி.

அமைதியாக வீடு திரும்ப வேண்டும்

தனது பேச்சின் இறுதியில், அரசியல் சாயம் பூசாமல் இந்த மாநாடு நடந்தது. கோவை மாநகரில் எந்த இடத்திலும் கட்சிக் கொடிகளும், அந்தக்கொடி வண்ணங்களே இல்லாமல் இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக நான் உடன்பிறப்புகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

மாநாட்டிற்கு வந்திருக்கும் லட்சக்கணக்காணோர் அமைதியாக வீடு திரும்ப வேண்டும். அவசரப்படாமல் அவரவர் வாகனங்களில் மெதுவாக வீடு திரும்பவேண்டும். நீங்கள் நல்லபடியாக சென்று சேர்ந்தீர்கள் என்று கேள்விப்பட்டால்தான் எனக்கு நிம்மதி. அதுவரை நான் கவலையோடுதான் இருப்பேன் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று குறிப்பிட்டார் முதல்வர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X