For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொடநாடு எஸ்டேட்டில் விதிகளை மீறி டீ பேக்டரி-விசாரிக்கப்படும்: கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
கோவை: கொடநாடு எஸ்ட்டேடில் விதிகளை மீறி டீ பேக்டரி கட்டப்படுவதாக கூறப்படுவது குறித்து விசாரிக்கப்படும். சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளிடம் அவர் கூறியதாவது:

கேள்வி: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வரக் கூடாது என்று குடியரசுத் தலைவரிடம் அதிமுக கூட்டணி சார்பில் ஜெயலலிதா, வைகோ, தா.பாண்டியன் ஆகியோர் சார்பில் மனு கொடுக்கப்பட்டது குறித்து...

முதல்வர் கருணாநிதி: அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தார்களா என்று தெரியாது. அப்படியே மனு கொடுத்திருந்தாலும் அதையும் மீறித்தான்அதனை அலட்சியப்படுத்தி விட்டுத்தான் இங்குள்ள தமிழர்களையும், வெளிநாட்டு தமிழர்களையும் மதிக்கும் வகையில் ஜனாதிபதி மாநாட்டுக்கு வருகை தந்தார்.

அதற்காக குடியரசு தலைவருக்கு நன்றி சொல்ல வேண்டும். மாநாட்டுக்கு ஜனாதிபதி வரக்கூடாது என்ற கருத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கையெழுத்திட்டிருந்தாலும் அந்த கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கலந்து கொண்டு பேசியதை தாங்கள் அறிவீர்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற தலைவர் சிவபுண்ணியமும் மாநாட்டிற்கு வந்திருந்தார். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி- மாநாட்டின் தலையாய சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்?

கருணாநிதி: தமிழர்கள் அனைவரும் ஒன்று பட்டு, மொழியை மேலும் படிப்படியாக வளர்க்க, உயர்ந்த கோபுரத்தில் அமர்த்துவதற்கான முயற்சியில் கூடியதையே சாதனையாக கருதுகிறேன்.

கேள்வி: வெளிநாட்டுத் தமிழர்களுக்கு தமிழ் கற்றுத் தர இங்கிருந்து புலவர்ளையும், தமிழாசிரியர்களையும் அரசு சார்பில் அனுப்பவீர்களா?

கருணாநிதி: அப்படி ஒரு வேண்டுகோள் அல்லது மனு அல்லது விண்ணப்பம் அல்லது தகவல், அனுப்பப்பட்டு, அதற்குரிய வசதிகள், வாய்ப்புகள், சூழ்நிலைகள் உருவாகுமோயானால், தேவைப்பட்டால், அவற்றை உருவாக்கியும் கூட அந்த நாடுகளுக்குச் சென்று தமிழ்ப் பணியாற்ற திறனாளர்களை அனுப்ப தமிழக அரசு தயாராகவே இருக்கிறது.

கேள்வி: தமிழில் படித்தவர்களுக்குத்தான் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற கூறியிருக்கிறீர்கள். இதனை அரசியல் சட்டம் ஏற்குமா?. ஒவ்வொரு மாநிலத்திலும் இது போல கூறினால் ஒருமைப்பாடு என்னவாகும்?

கருணாநிதி: இந்த கருத்தை லட்சக்கணக்கான மக்கள் ஏற்றுக் கொண்டதை மாநாட்டில் பார்த்தீர்கள். இதனை நானாக சொல்லவில்லை. தமிழ் நாட்டில் இத்தகைய கருத்துள்ள பல ஏடுகள், இதழாசிரியர்கள், புலவர் பெருமக்கள் தெரிவித்த கருத்துக்களின் எதிரொலியாகத்தான் மாநாட்டில் இதனை அறிவித்தோம். எனவே இதனை தமிழ் மீதும், தமிழர் மீதும் அவர்களுடைய முன்னேற்றத்தின் மீதும் பற்றுக் கொண்டவர்கள். எதிர்ப்பதற்கு எந்த காரணமும் இல்லை.

கேள்வி: உங்கள் கோரிக்கையை ஏற்றதாக மத்திய அமைச்சர்கள் சொல்லவில்லையே?

கருணாநிதி: நான் கடைசியாக பேசியதுதான் காரணம்.

கேள்வி: உங்களது அரசியல் வாழ்க்கையில் பல மாநாடுகளை சந்தித்திருப்பீர்கள். செம்மொழி மாநாடு கூட்டம்போல பார்த்துள்ளீர்களா?

கருணாநிதி: செம்மொழி மாநாட்டில் முதன்முதலில் பார்த்தோம்.

கேள்வி: சட்டசபை தேர்தல் முன்கூட்டியே வருமா?

கருணாநிதி: தமிழ் வளர்ச்சியை விட, மாநாட்டை விட சட்டசபைத் தேர்தலா இப்போது முக்கியம்?

கேள்வி: செம்மொழி மாநாட்டையொட்டி கைதிகளை விடுவிப்பதை ஜெயலலிதா எதிர்த்துள்ளாரே...

கருணாநிதி: செம்மொழி மாநாடு என்ற பெயரால் கைதிகளை விடுவிக்க அரசு சார்பில் அறிவிக்கப்படவில்லை. அறிவிக்கப்பட்டதாக எந்த ஏடுகளிலும் அரசு சார்பில் தெரிவிக்கப்படவும் இல்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் எதை நம்பி, யாரை நம்பி இப்படி ஒரு அறிக்கை விடுத்தார் என்று புரியவும் இல்லை. ஆனால் விஷயம் தெரிந்த ஏடுகள் கூட அதை எப்படி வெளியிட்டனர் என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.

அந்த அறிக்கையில், இப்படி கைதிகளை விடுவிடுப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் வேலை என்று எதிர்க்கடசித் தலைவர் ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அவரே முதல்வராக இருந்தபோது அவரது பிறந்த நாளை ஒட்டி 1992ல் 230 கைதிகளையும், 93ம் ஆண்டு 130 கைதிகளையும் 94ல் 163 கைதிகளும் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

'ஜெ. பிறந்தநாள் புனிதமானதாக இருக்கலாம்':

ஒரு வேளை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை விட ஜெயலலிதாவின் பிறந்தநாள் புனிதமானதாக இருக்கலாம். அதற்காக அவரது பிறந்த நாளில் கைதிகளை விடுவித்திருக்கலாம். எனக்குள்ள வேதனை எல்லாம் நம்முடைய பத்திரிக்கையாளர்கள் இதையெல்லாம் யோசித்து செய்தியை, அறிக்கைகளை வெளியிடும்போது இதை அந்த அம்மையாருக்கு நினைவூட்டுவார்களேயானால் தவறுகள் மீண்டும் மீண்டும் வராது என்று எதிர்பார்க்கிறேன்.

கேள்வி: கொடநாடு எஸ்டேட்டுக்குள் ஜெயலலிதா டீ பேக்டரி கட்டி வருவதாகக் கூறப்படுகிறது. சிறிய அளவிலான பேக்டரி கட்ட மட்டுமே அனுமதி உள்ள நிலையில் விதிகளை மீறி பெரிய பேக்டரி கட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

கருணாநிதி: நீங்கள் சொன்ன புதிரான செய்தி விசாரிக்கப்படும். அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சட்ட ரீதியாக அரசு நடவடிக்கை எடுக்கும்.

கேள்வி: மாநாட்டில் நெகிழ வைத்த, மிரள வைத்த நிகழ்வு...

கருணாநிதி: எல்லா நிகழ்ச்சிகளும் நெகிழ வைத்தவைதான். மிரள வைத்தது எதுவும் இல்லை.

கேள்வி: அடுத்து எப்போது செம்மொழி மாநாடு?

கருணாநிதி: தமிழகத்தில் மட்டுமல்லாமல், பிற நாடுகளிலும் செம்மொழி மாநாடு நடைபெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது தமிழ்நாடட்டில் இத்தகைய மாநாடு நடைபெற வேண்டும் என்ற கருத்து மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், ஆர்வலர்களால் எழுப்பப்பட்டு அது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

கேள்வி: இலவச நிலம் வழங்கும் திட்டத்தில் முறைகேடு என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரே...

கருணாநிதி: 2 ஏக்கர் இலவச நிலம் தரப்படும் என்பது அரசின் அறிவிப்பு. நிலங்களை பிரித்துக் கொடுக்கும்போது சில இடங்களில் ஒன்றே முக்கால் ஏக்கர் இருக்கலாம். அங்கங்கே உள்ள நிலங்களுக்கு ஏற்றவாறு நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும்.

சில நேரங்களில் ஒரு ஏக்கர் நிலத்தில் 2 ஏக்கர் நிலத்தின் பயன் விளையலாம். சில இடங்களில் 2 ஏக்கரில் கூட ஒரு ஏக்கர் நில பயன்தான் ஏற்படக் கூடும். ஆகவே ஆங்காங்கு உள்ள நிலங்களின் பரப்பளவுக்கு ஏற்றவாறும், பயனாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் நிலங்கள் பயனாளிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

கேள்வி: தொழிற் கல்விப் படிப்புகள் தமிழிலேயே அமல்படுத்தப்படுமா?

கருணாநிதி: இந்த ஆண்டு முதல் தமிழில் பொறியியியல் பயிலலாம் என அமைச்சர் அறிவித்துள்ளார். அடுத்து மருத்துக் கல்வி.

கேள்வி: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து..

கருணாநிதி: தமிழக அரசின் சார்பாக மத்திய உள்ளவர்களுக்கு தெரிவித்துள்ள கருத்துக்களை முழுமையாக புறக்கணிக்காமல், அவர்கள் உத்தேசித்திருந்த அளவை விட தற்போது ஓரளவு விலை உயர்வை குறைத்து அறவித்திருப்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இந்த விலை உயர்வால் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ. 150 கோடி நிதிச் சுமை ஏற்படும் என்றாலும், பொதுமக்கள் நலன் கருதி பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம்.

கேள்வி: தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி அளிக்கப்படுமா?

முதல்வர் கருணாநிதி: இத்துடன் விடை பெறுவோம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X