For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாங்கள் தமிழர்கள் என்பதில் சந்தேகம் உடையவர்கள்தான் கோவை மாநாட்டுக்கு வரவில்லை-கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: கோவையில் நாங்கள் நடத்திய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், ஏதோ ஒரு கட்சியைச் சார்ந்தவர்கள் அல்லது இந்த அரசை நடத்துகின்றவர்கள் மாத்திரம் கலந்து கொள்கின்ற மாநாடாக அல்லாமல், எல்லோரும் கலந்து கொள்கின்ற மாநாடாக நடத்தினோம். அதில் தமிழர்களாக இருப்பவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தங்களைப் பற்றி சந்தேகம் கொண்டவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

முதல்வர் கருணாநிதி, கதை, வசனம், பாடல்கள் எழுதிய போர்வாளும், பூவிதழும் என்ற தலைப்பிலான நாட்டிய நாடகம், கோவையில் முடிந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நடத்தப்பட்டது. இந்த நாடகம், நேற்று மீண்டும் ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசிய பேச்சு:

இந்த நாட்டிய நாடகத்தைப் பற்றி, சுருக்கமாக - ஆனால் சுவையாக தலைமையேற்றுள்ள நீதியரசர் ராமசுப்பிரமணியன் எடுத்துச் சொல்லியிருக்கின்றார். நீதியரசர் என்ற காரணத்தால், ஜட்ஜ்மென்டை ஒத்தி வைத்துவிட்டு அந்த முடிவை முதலிலே சொல்லக்கூடாது என்ற நிலையில் அமர்ந்திருக்கிறார். வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் எனக்குப் புதியவர்கள். இந்த மேடையிலேதான் அவர்களுடைய அறிமுகம் - அவர்களுடைய பேச்சைக் கேட்கின்ற வாய்ப்பு - இவையெல்லாம் ஜெகத்ரட்சகனால் உருவாக்கித் தரப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பு இந்த உரைகளைக் கேட்கவில்லையே! என்ற ஆதங்கம்தான், அவர்களுடைய உரைகளைக் கேட்டபிறகு எனக்கு ஏற்பட்டது என்று சொன்னால், அது மிகையாகாது. அவர்களுடைய சொற்பொழிவில் - சொல்லப்பட்ட கருத்துக்களில் ஒன்றிரண்டு சொற்களில் எனக்கும், அவர்கள் கையாண்ட சொற்களுக்குமிடையே வேறுபாடு இருக்கலாம். ஆனால், எதைச் சுற்றினாலும், கடைசியாக தமிழ் தான் என்று அவர்கள் முடித்த அந்த உணர்வு இருக்கிறதே, அந்த உணர்விலே நாங்கள் உடன்பாடு கொண்டவர்கள்.

அந்த உடன்பாடு, உணர்வு - இவைகளை எடுத்துக்காட்டுகின்ற வகையிலேதான், அண்மையில் கோவையில் நாங்கள் நடத்திய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், ஏதோ ஒரு கட்சியைச் சார்ந்தவர்கள் அல்லது இந்த அரசை நடத்துகின்றவர்கள் மாத்திரம் கலந்து கொள்கின்ற மாநாடாக அல்லாமல், எல்லோரும் கலந்து கொள்கின்ற மாநாடாக - எல்லா சமயத்தவரும் - எல்லா மதத்தினரும் - எல்லா கொள்கை படைத்தவர்களும், எல்லா அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும் கலந்து கொள்கின்ற மாநாடாக - அந்த மாநாட்டை நடத்தியதற்குக் காரணமே, அது தமிழ் மாநாடாக - தமிழர்களின் மாநாடாக - உலகத் தமிழர்களின் மாநாடாக நடைபெறவேண்டும் என்பதால்தான். தமிழர்களாக இருப்பவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தங்களைப் பற்றி சந்தேகம் கொண்டவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.

அந்த மாநாட்டிலே தமிழைக் கேட்கும்போது, எந்த உணர்வு ஏற்பட்டதோ, எந்தளவிற்கு இந்தத் தமிழ் மொழி நம்மையெல்லாம் ஒன்றுபடுத்தியிருக்கிறது என்ற உணர்வு ஏற்பட்டதோ, அந்த உணர்வு அந்த மாநாடோடு நின்று விடாமல், தொடர்ந்து இந்த நாட்டிய நிகழ்ச்சியிலும், அது கொழுந்து விட்டெரிந்து, தமிழகத்திலே எல்லோரையும் இணைக்கக்கூடிய ஒரு ஆற்றலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, இந்த நிகழ்ச்சியில் இந்த நாட்டிய நாடகம் இணைக்கப்பட்டிருக்கின்றது. அதனால் தான், "போர்வாளும் பூவிதழும்'' என்ற தலைப்பிலே இந்த நாட்டிய நாடகம் நடைபெறுகின்றது.

"போர்வாளும் பூவிதழும்'' என்பது இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டதைப்போல, "வன்மை - மென்மை'' என்ற இரண்டையும் குறிப்பிடுகின்ற இரண்டு சொற்களாக இருந்தாலும்கூட, "போர்வாள் பெரிதா? பூவிதழ் பெரிதா?'' என்ற வினா ஒரு இளைஞனுடைய - ஒரு வீரனுடைய உள்ளத்திலே எழும்போது, "இரண்டையும் விட, அவன் எதிர்நோக்க வேண்டிய கடமையென்று ஒன்று இருந்தால், அதுதான் பெரிது'' என்பதை உணர்த்துகின்ற வகையிலேதான் இந்த நாட்டிய நாடகம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதை நான் சில சங்க காலப் பாடல்களை வைத்து, சங்கப் புலவர்கள் யாத்த அந்தச் செய்யுள்களை வைத்து பின்னிய ஒரு ஓரங்க நாடகம். அதை இவ்வளவு திறமையாக நாட்டிய நாடகமாக நடித்துக் காட்ட முடியும் என்கின்ற ஆற்றலை வெளிப்படுத்தியிருப்பவர் நம்முடைய அன்பிற்கும், நன்றிக்கும் உரிய கலைமாமணி பத்மா சுப்பிரமணியம் ஆவார்.

அவர்களுடைய நிகழ்ச்சிகள் இதே மாமன்றத்தில் எத்தனையோ நடைபெற்றிருக்கின்றன. நானும் அருகிலே உள்ள இல்லத்திலேதான் இருந்திருக்கின்றேன். ஆனால், இந்த நிகழ்ச்சியைக் காணுகின்ற வாய்ப்பினை நானும் பெற்று, நீங்களும் பெற்றுள்ள இந்தச் சூழல் - தமிழுக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கவேண்டுமென்று அனைவரும் எண்ணுகின்ற ஒரு சூழல். இதிலே எப்படி வேளுக்குடி கிருஷ்ணன் வந்தார்? திருச்சி கல்யாணராமன் வந்தார் என்று சில பேருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். அதுதான் ஆழ்வார் செய்த வேலை. நாங்களெல்லாம் ஆழ்வார் என்று அழைப்பது ஜெகத்ரட்சகனைத்தான். அவர்தான் இவர்கள் இருவரையும் இந்த விழாவிலே பங்கு பெறச் செய்து, எங்களுக்குத் தமிழ் இன்பத்தை இன்றைக்கு ஊட்டியிருக்கிறார். அதற்காக நான் ஜெகத்ரட்சகனுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

வேளுக்குடி கிருஷ்ணன் மிகுந்த தமிழ் ஆர்வத்தோடு, தமிழ் இனிமை சொட்டச் சொட்ட, இங்கே தன்னுடைய உரையை நிகழ்த்தியிருக்கின்றார். இந்த மேடையிலே எவ்வளவு கட்டுப்பாட்டோடு, நாளைக்கு வெளியிலே சென்றால், யார் யாரைச் சந்திக்க நேரிடும் என்கின்ற அந்த உணர்வோடு, இங்கே எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவு பேசி, எங்களையெல்லாம் மகிழ்வித்திருக்கின்றார்.

திருச்சி கல்யாணராமன் தொடக்கத்திலே பேசும்போது, ஒரு கோரிக்கை வைத்தார். அதெல்லாம் நிறைவேற்ற முடியாத கோரிக்கை அல்ல; நிறைவேறிவிட்டதாக அவர் கருதிக் கொள்ளலாம். இதிலே ஒரு சின்ன சிறப்பு என்னவென்றால், என்னுடைய ஒரு பக்கத்திலே வைணவம்; இன்னொரு பக்கத்திலே சைவம் - இரண்டும் அமர்ந்திருப்பதைப் போல உங்களுக்குத் தெரியும். அந்த இரண்டையும் சமப்படுத்துவதற்காகத்தான், நடுவிலே நீதியரசர் இன்றைக்கு இந்த விழாவிலே பங்கு பெற்றிருக்கின்றார். "வேளுக்குடி கிருஷ்ணன்'' - "கிருஷ்ணன்'' என்றாலே, வைணவப் பெயர் என்பது உங்களுக்குத் தெரியும். "கல்யாணராமன்'' - அதுவும் வைணவப் பெயர்தான். "ராமன், கிருஷ்ணன்'' - இந்த இரண்டையும் இணைக்கக்கூடிய நீதியரசர் பெயர் இரண்டுக்கும் பொதுவான பெயர் - "ராமனும், சுப்பிரமணியனும்'' - சைவமும், வைணவமும் சேர்ந்த பெயர். அத்தகைய ஒரு ஒற்றுமையோடு இந்த நிகழ்ச்சியிலே தங்களுடைய கருத்துக்களை எடுத்துச் சொல்லியிருக்கின்றார்கள்.

சில பேர் மண்டபத்திற்கு வெளியிலே நின்று காத்துக் கொண்டிருப்பார்கள். கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் - இவர்களெல்லாம் கலந்து கொள்கின்ற ஒரு நிகழ்ச்சியில் - "வேளுக்குடி கிருஷ்ணன் என்ன பேசுவாரோ? திருச்சி கல்யாணராமன் என்ன பேசுவாரோ? என்ன கலாம் விளையுமோ? வேடிக்கை பார்க்கலாம்'' என்று யாராவது இருந்தால், ஏமாந்து போயிருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாங்கள் எதையும், எந்த இடத்திலும், அளவோடு அளந்து பேசக்கூடியவர்கள்; பண்பானவர்கள். அந்தப் பண்பை எங்களுக்கு - எங்களுடைய மொழி கற்றுக் கொடுத்திருக்கிறது. எங்களுக்குக் கற்றுக் கொடுத்த அதே தமிழ் மொழி, அவர்களுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறது. அவர்களுக்கு உணர்த்திய தமிழ் மொழி, எங்களுக்கும் உணர்த்தியிருக்கிறது. எனவே, எப்படிப் பேச வேண்டும்? எப்படிப் பழக வேண்டும்? எப்படி நம்முடைய கொள்கைகளை எடுத்துச் சொல்லவேண்டும் என்பதை உணர்ந்தவர்கள் நாங்கள்.

மிக விறுவிறுப்பான காலம் - அண்ணாவும், நாவலர் சோமசுந்தர பாரதியாரும், ஆர்.பி. சேதுப்பிள்ளையும் சொற்போர் நடத்திய ஒரு காலக்கட்டத்திலே கூட, அண்ணாவுடைய பேச்சைக் கேட்டு, சோமசுந்தர பாரதியார் வியந்ததும், ஆர்.பி. சேதுப்பிள்ளை புகழ்ந்ததும் சரித்திரம் சொல்லும். ஆகவே, எங்களுடைய தமிழ், தமிழ் ஆற்றல், நாங்கள் கற்ற கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, பழகுகின்ற முறை, எடுத்துச் சொல்கின்ற லாவகம், இவைகளெல்லாம் திராவிட இயக்கத்திலே அண்ணாவால் எங்களுக்கெல்லாம் கற்றுக் கொடுக்கப்பட்ட ஒன்று. அதை அவர்கள் இந்த மேடையிலே உணர்ந்திருப்பார்கள் என்றார் அவர்.

நிகழ்ச்சியில், முதல்வரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள்கள் செல்வி, கனிமொழி, கனிமொழியின் கணவர் அரவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X