For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாரன் ஆன்டர்சன் இந்தியாவை விட்டு தப்ப நரசிம்மராவ்தான் காரணம்-அர்ஜூன் சிங்

Google Oneindia Tamil News

டெல்லி: ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிரைப் பறித்த போபால் விஷ வாயு சம்பவத்திற்குப் பின்னர், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆன்டர்சன் இந்தியாவை விட்டு தப்ப முன்னாள் பிரதமரும், அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவருமான நரசிம்மராவ்தான் காரணம் என்று அப்போது மத்தியப் பிரதேச முதல்வராக அர்ஜூன் சிங் தெரிவித்துள்ளார்.

ஆன்டர்சன் தப்ப ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், அர்ஜூன் சிங் ஆகியோர்தான் காரணம் என்று கடந்த சில மாதங்களாகவே கடும் விவாதம் நடந்து வந்தது. ஆனால் இதுகுறித்து அர்ஜூன் சிங் வாய் திறக்காமலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் ராவ்தான் காரணம் என தற்போது வாய் திறந்து கூறியுள்ளார்.

ராஜ்யசபாவில் நேற்று நடந்த விவாதத்தின்போதுதான் இதைத் தெரிவித்தார் அர்ஜூன் சிங். அப்போது அவர் கூறுகையில்,

ஆண்டர்சனுக்கு ஜாமீன் வழங்க வலியுறுத்தி தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளிடம் இருந்து நெருக்குதல் அளிக்கப்படுவதாக அப்போதைய தலைமைச் செயலர் என்னிடம் தெரிவித்தார். (அப்போது உள்துறை அமைச்சராக ராவ் இருந்தார்).

ஆண்டர்சனை கைது செய்வதற்கு உத்தரவு பிறப்பித்ததுடன் அதைப் பதிவு செய்யவும் உத்தரவிட்டேன்.

ராஜீவ் ஆதரிக்கவில்லை-எதிர்க்கவில்லை

ஆண்டர்சன் கைது செய்யப்பட்டபோது அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி மத்தியப் பிரதேசத்தில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்தார். அவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டபோது அவர் ஆண்டர்சனுக்கு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.

அரசு விமானத்தில் போபாலை விட்டு ஆண்டர்சன் அனுப்பப்பட்ட சம்பவம் குறித்து விவரித்தால் அது கசப்புணர்வையே உண்டாக்கும். ஆண்டர்சனை மக்கள் தாக்கக்கூடாது என்பதற்காகத்தான் அவரை கைது செய்தபின் அரசு விருந்தினர் இல்லத்துக்கு கொண்டு செல்லும் முடிவை "கனத்த இதயத்துடன்' எடுத்தேன்.

இப் பிரச்னை தொடர்பாக யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. ஏதாவது குற்றம் இழைத்திருந்ததாக கருதப்பட்டால், சாதாரண குடிமகனாக இருந்து அதற்கான தண்டனையை ஏற்கத் தயாராக இருக்கிறேன்.

ஒபாமா நவம்பரில் இந்தியாவுக்கு வரும்போது ஆண்டர்சனை இந்தியாவுக்கு அனுப்பவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரண உதவி வழங்குவது குறித்தும் அவரிடம் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்த வேண்டும் என்றார்.

அர்ஜூன் சிங்கின் இந்த வழவழா பதிலைக் கேட்டு கொதிப்படைந்த பாஜகவினர் இறந்தவர்களின் மீது பழியைப் போட்டு தான் தப்பப் பார்க்கிறார் அர்ஜூன் சிங் என்று விளாசினர்.

அருண் ஜேட்லி பேசுகையில், அர்ஜுன் சிங்கின் பதில் திருப்தி அளிக்கவில்லை. இறந்தவர்களின் மீது பழிபோட்டு தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார். உண்மைகளை மேலும் மறைப்பதாகவே அவரது அறிக்கை உள்ளது என்றார்.

முன்னதாக மக்களவையில் நடந்த விவாதத்தின்போது ப.சிதம்பரம் பேசுகையில்,

வாரன் ஆண்டர்சனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீர்த்துப் போகுமாறு செய்யப்படவில்லை. அட்டார்னி ஜெனரல் எதிரான கருத்தை கூறிய போதும் கூட, ஆண்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் சி.பி.ஐ. உறுதியாக இருந்தது பாராட்டத்தக்கது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X