அல்வா-கருவாட்டு பை காணாமல் போனதால் ரயிலை நிறுத்திய நபர்

By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: அல்வா, கருவாட்டு பை காணாமல் போனதால் அபாய சங்கிலியை இழுத்து குருவாயூர் எக்ஸ்பிரசை நிறுத்திய நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு 7.40 மணிக்கு நெல்லை ரயில் நிலையத்திற்கு வந்தது.

10 நிமிடங்களுக்குப் பின் புறப்பட்ட அந்த ரயில் நெல்லை மீனாட்சிபுரம் தாமிரபரணி ஆற்று பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது ஒரு பெட்டியில் அபாய சங்கிலி இழுக்கப்பட்டது. இதையடுத்து ரயில் மீனாட்சிபுரம் ரயில்வே கேட் அருகே நிறுத்தப்பட்டது.

சங்கிலி இழுக்கப்பட்ட பெட்டிக்கு ரயில்வே ஊழியர்கள், ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விரைந்தனர்.

அபாய சங்கிலியை நெல்லையைச் சேர்ந்த இசக்கி என்பவர் இழுத்தது தெரியவந்தது. இவர் குடிபோதையில் இருந்தார்.

இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

அவரிடம் போலீசார் விசாரித்த போது, அல்வா மற்றும் கருவாடு வைத்திருந்த தனது பை காணாமல் போனதால் அபாய சங்கிலியை இழுத்ததாகக் கூறினார்.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்ப்டடுச் சென்றது.

அதுவரை மீனாட்சிபுரம் ரயில்வே கேட்டை மறித்தபடி ரயில் நின்றதால் அந்த வழியாக வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...