விலையைக் குறைக்காவிட்டால் சத்தியமூர்த்தி பவனில் சிமென்ட் விற்போம்-இளங்கோவன் அதிரடி

By:
Subscribe to Oneindia Tamil

EVKS Ilangovan
நாகர்கோவில்: தமிழக அரசு உடனடியாக சிமென்ட் விலையைக் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் சத்தியமூர்த்தி பவனில் வைத்து சிமென்ட் விற்போம் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்களில் ஒருவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன்.

நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,

திமுகவுடன் கூட்டணி தொடர காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை. காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் தலைமையில் புதியதாக ஒரு அணி உருவாக வேண்டும். இப்போது உள்ள கூட்டணி வேண்டாம் என்று கடந்த வாரம் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கோஷமிட்டார்கள்.

கன்னியாகுமரியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சிலை வைக்க கடந்த 4 ஆண்டுகளாக அனுமதி கேட்டும், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

தமிழகம் முழுவதும் தனியாருக்கு சொந்தமான இடங்களை ஒரு கும்பல் ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. இதுகுறித்து தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.

கட்டுமானப் பொருட்களின் விலை தமிழகத்தில் உயர யார் காரணம்? சிமெண்ட் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னை சத்தியமூர்த்தி பவனில் குறைந்த விலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிமெண்ட் விற்பனை செய்யப்படும்.

திருமாவளவன் அரசியலுக்கு லாயக்கு இல்லை. சினிமாக்காரர் போல் போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து வருவதால், சினிமாவில் நடிக்கவே பொறுத்தமானவர்.

தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டும் என்பது மக்கள் விருப்பம். தேர்தல் சமயத்தில் மக்கள் விருப்பம் நிறைவேறக்கூடும்.

தமிழகத்தில் ப‌டித்த இளைஞர்கள் தவறுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு காவல்துறை மீது பயமில்லாமல் போனதே காரணம். இதற்கு அரசு செயல்பாடுகள் தான் காரணம் என்றார் இளங்கோவன்.

Please Wait while comments are loading...