மனசாட்சி தெளிவாக உள்ளது என்கிறார் ராஜினாமா செய்ய மறுக்கும் பி.ஜே.தாமஸ்

By:
Subscribe to Oneindia Tamil

PJ Thomas
டெல்லி: தனது மனசாட்சி மிகத் தெளிவாக இருப்பதாகவும் இதனால் மத்திய ஊழல் கண்காணிப்பு தடுப்பு ஆணையர் (சி.வி.சி.) பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்றும் பி.ஜே.தாமஸ் கூறியுள்ளார்.

1992ம் ஆண்டில் கேரள மாநில அரசின் உணவுத் துறைச் செயலாளராக இருந்தபோது அந்த மாநிலம் பாமாயில் இறக்குமதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தாமஸ்.

இந் நிலையில் இவர் மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறை செயலராகப் பதவி வகித்தபோது தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந் நிலையில் அவர் இப்போது மத்திய கண்காணிப்பு ஆணையர் பதவியில் நீடிப்பது தார்மிக நெறிகளுக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனாலும் பதவி விலக தாமஸ் மறுத்துவிட்டார். அவர் கூறுகையில், மத்திய கண்காணிப்பு ஆணையர் பதவியில் என்னை நியமிக்கும்போதே கேரள மாநிலத்தில் நடந்த பாமாயில் இறக்குமதி விவகாரம் தொடர்பான விஷயங்கள் அனைத்தும் மத்திய அரசுக்குத் தெரியும். அதே போல 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையின்போது நான் தான் தொலைத் தொடர்புத்துறையின் செயலாளராக இருந்தேன் என்பதும் அரசுக்குத் தெரியும்.

பிரதமர் மன்மோகன் சிங்கும், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் தான் என்னை சி.வி.சி. பதவியில் நியமித்தனர். எனவே நான் பதவியை ராஜிநாமா செய்வது என்ற கேள்விக்கே இடமில்லை.

என்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்டுதான் மத்திய அரசு என்னை இந்தப் பதவியில் நியமித்தது.

பாமயில் இறக்குமதி வழக்கு மிகவும் பழையது. அது எனது பதவிக்காலத்தில் அது நடைபெறவில்லை. கேரள அமைச்சர்கள் குழு பாமாயில் இறக்குமதி செய்ய முடிவெடுத்தது. உணவுத் துறைச் செயலாளர் அதை அமல்படுத்தியிருந்தார். அதன் அடிப்படையில் என் மீது கிரிமினல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பது வேடிக்கையானது.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் அதுகுறித்து இப்போது பேசுவது சரியல்ல.

சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றார் தாமஸ்.

பதவி விலக திரிணமூல்-தேசியவாத காங் கோரிக்கை:

இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தாமசை மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷனர் பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரியுள்ளன.

Please Wait while comments are loading...