முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது உறுதி-கேரளா

Posted by:
உங்களது ரேட்டிங்:

கோட்டயம்: முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதில் கேரளா உறுதியாக இருக்கிறது. இந்த முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்தார்.

கேரள சட்ட பேரவையில் சில மாதங்களுக்கு முன் ஆளுநர் ஆற்றிய உரையில், முல்லை பெரியாறில் புதிய அணை கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது.

இந் நிலையில் கேரளாவில் காங்கிரஸ் சார்பில் புதிய முதல்வராக பதவியேற்று்ள்ள உம்மன்சாண்டி கோட்டயத்தில் அளித்த பேட்டியில்,

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதில் கேரளா உறுதியாக இருக்கிறது. இந்த முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை. புதிய அணை கட்டினாலும் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும்.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் முக்கிய தேவையாக உள்ள போதிலும் கேரள மக்களின் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டுடன் சுமூக பேச்சு நடத்தி தீர்வு காணப்படும் என்றார்.

வைகோ கடும் கண்டனம்:

இந் நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டியே தீருவோம் என்று கேரளத்தின் புதிய முதல்வர உம்மன்சாண்டி கடந்த 4 நாட்களுக்குள் 2வது முறையாக கூறியுள்ளார். 5 ஆண்டுக்காலம் கேரளத்தில் ஆட்சி நடத்திய மார்க்சிஸ்ட் கட்சி முதல்வர் அச்சுதானந்தன் புதிய அணை கட்டுவோம் என்று கூறி வந்தார். அவரது அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை பொறுப்பு வகித்த பிரேமச்சந்திரன், பென்னிகுக், கட்டிய அணையை உடைப்போம் என்றும் புதிய அணை கட்டுவோம் என்றும் தொடர்ந்து சொன்னார்.

முல்லைப் பெரியாறு அணையில், 999 ஆண்டுகளுக்கான பாசன உரிமையைத் தமிழகம் பெற்று இருக்கிறது. கேரள அரசு கட்டத் திட்டமிடுகின்ற புதிய அணை, பள்ளத்தில் இடத்தில் அமைவதால் கேரள அரசு நினைத்தாலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும், பின்னர் 145 அடி உயரத்துக்கும் அதன் பின்னர் 152 உயரம் வரையிலும் படிப்படியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் கேரள அரசு இதற்கு எந்தவிதத்திலும் முட்டுக் கட்டை போடுகின்ற வேலையில் ஈடுபடக்கூடாது என்றும், 2006ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதை எதிர்த்து, அச்சுதானந்தன் போன்றவர்களின் வற்புறுத்தலால், கேரள அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, சட்டமன்றத்தில், ஒரு சட்டத்தை நிறைவேற்றி, 136 அடிக்கு மேல் தண்ணீரை உயர்த்த முடியாது என்றும், முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதற்கும் எங்களுக்கு உரிமை உண்டு என்றும் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.

அப்போதைய அதிமுக அரசு அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. 3 ஆண்டுகளுக்கு மேல் வழக்கை இழுத்தடித்து தமிழ்நாட்டிற்கு நியாயமான தீர்ப்பு வர இருந்த நிலையில் அநீதியாக ஒரு உத்தரவை வெளியிட்டது. பென்னி குக் கட்டிய அணையின் வலுவை ஆய்வு செய்வதற்கும், புதிய அணை கட்டுவது குறித்தும் ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமித்தது.

இந் நிலையில் புதிய அணையைக் கட்டுவோம் என்று கேரள அரசு இப்போது அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால், தென்பாண்டிச் சீமையில் 5 மாவட்டங்கள் அடியோடு பாசன வசதி யையும், குடிநீர் வசதியையும் இழக்கும் அபாயம் தலைக்கு மேல் இப்போது கத்தியாகத் தொங்குகிறது. கேரள மாநில அரசின் அக்கிரமமான போக்கைத் தடுக்க வேண்டிய கடமையை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்யவே இல்லை.

கேரள அரசு பென்னி குக் அணையில் கை வைக்கவோ, புதிய அணை கட்டவோ முனைந்தால், நிரந்தரப் பொருளாதார முற்று கையைத் தமிழகம் ஏற்படுத்தும் என எச்சரிக்க விரும்புகிறேன்.

தமிழக முதல்வர் நம் மாநிலத்தின் முக்கிய வாழ் வாதாரப் பிரச்சனையான இந்தப் பிரச்சனையில், கேரள அரசின் தவறான போக்கைத் தடுத்து நிறுத்தவும், மத்திய அரசுக்கு நிலைமையின் விபரீதத்தை உணர்த்தவும், உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

English summary
The Kerala Government was firm on construction of a new dam across Mullaperiyar in view of the safety of the people living downstream in the state and did not want to stop water release to Tamil Nadu, Chief Minister Oommen Chandy said today. What matters more than politics was safety of people. Therefore there would be no going back on the decision to construct a new dam at Mullaperiyar, he said.
Please Wait while comments are loading...

Videos

 

Skip Ad
Please wait for seconds

Bringing you the best live coverage @ Auto Expo 2016! Click here to get the latest updates from the show floor. And Don't forget to Bookmark the page — #2016AutoExpoLive