For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயன்படுத்துவதில் தவறில்லை- விஜயகாந்த்

Google Oneindia Tamil News

Vijayakanth
சென்னை: குதிரையைக் கேட்டோம், கழுதைதான் கிடைத்துள்ளது. குதிரை கிடைக்கும் வரை கழுதையைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு வரை அதிகம் பேசி வந்த விஜயகாந்த் தற்போதெல்லாம் எப்போதாவதுதான் பேசுகிறார். அப்படி அவர் அரிதாக பேசிய பேச்சு அடங்கிய அறிக்கை:

தமிழக அரசு ஏற்கனவே கொண்டு வந்த பொதுப்பாடத் திட்டத்தை அப்படியே செயல்படுத்த வேண்டுமென்றும், அதை இன்றைய அரசு திருத்தம் கொண்டு வந்ததை ஏற்க மறுத்தும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் பாடத்திட்டத்தில் நீக்க வேண்டியவற்றை நீக்கியும், சேர்க்க வேண்டியவற்றை சேர்த்தும் மூன்று மாத காலத்திற்குள் ஒரு துணை பாடப் புத்தகத்தை உருவாக்கவும் இந்தத் தீர்ப்பு வழி வகை செய்துள்ளது.

இந்த கல்வி ஆண்டு தொடங்கி ஏற்கனவே இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இன்னும் பாடப் புத்தகங்கள் கிடைக்கவில்லையே என்ற கவலையால் பீடிக்கப்பட்டுள்ளனர். எந்த பாடப் புத்தகத்தையாவது வைத்தால் போதும் என்ற நிலையே அவர்களிடம் உள்ளது.

இந்த சூழ்நிலையில் முந்தைய தி.மு.க அரசு கொண்டு வந்த பாடத் திட்டத்தில் உள்ள கருணாநிதி குடும்பத்தின் சுய புராணம் பாடும் பகுதிகளை நீக்கி, தரமுள்ள புதிய பாடத் திட்டங்களை கல்வி நிபுணர்களின் குழுவின் மூலம் சேர்த்து பாடத் திட்டத்தின் தரத்தை தமிழக அரசு உயர்த்த வேண்டும்.

தமிழகத்தில் தற்போதைய கல்வியின் தரம் வெகுவாக குறைந்துள்ளது என்பதும், முந்தைய தி.மு.க அரசு கொண்டு வந்த பொதுப் பாடத்திட்ட சட்டம் இந்த தரத்தை மேலும் குறைக்கவே வகை செய்துள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இன்றைய மாணவர்கள்தான் நாளைய நாட்டின் எதிர்காலம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஆனால் அந்த மாணவர்களுக்கு சரியான கல்வி கிடைக்க தமிழக அரசு ஏற்கனவே நிறைவேற்றிய பொதுப் பாடத்திட்ட சட்டம் தீர்வாகாது.

கல்வித் துறையில் கடந்த ஆட்சியால் ஏற்பட்டுள்ள சீர்கேட்டினை நிரந்தரமாகக் களைய வேண்டுமானால், அது குறித்து அனைத்து தரப்பினரும், குறிப்பாக கல்வி நிபுணர்களும், கலந்து கருத்தாய்வு செய்வது அவசியம். ஆகவே கல்வி சம்பந்தமாக அனைத்து விவரங்களையும் திரட்டி ஒரு வெள்ளை அறிக்கை கொண்டு வரவேண்டும் என்றும், அதில் அனைத்து தரப்பினரின் கருத்துகளை திரட்டி சட்டப் பேரவையில் அனைத்து கட்சியினர்களையும் கலந்து ஒரு விரிவான கல்வி சீர்திருத்த சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

இதற்கிடையில் நாம் கேட்பது குதிரையானாலும் கிடைத்திருப்பது கழுதைதான் என்றாலும், குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்வது தவறல்ல.

தேவை மற்றும் உடனடித் தேவை என்று இருப்பதைப் போல, நமக்கு தேவை சமச்சீர் கல்வி என்றாலும் உடனடித் தேவையாக இருப்பது தற்போது திறந்துள்ள பள்ளிக் கூடங்களை பாடப் புத்தகங்கள் தந்து நடத்துவதுதான். ஆகவே உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று உடனடியாக பள்ளிக் கூடங்கள் இயங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

English summary
DMDK president Vijayakanth has asked the TN govt to implement the revised Samacheer Kalvi scheme for the sake of students. He also urged the govt to remove the portions related to Karunanidhi and his family members from the books.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X