கூடங்குளம் பணிகளை நிறுத்தக் கோரி தமிழக அமைச்சரவை நாளை தீர்மானம்- உண்ணாவிரதம் வாபஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Kudankulam Nuclear Power Plant
சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டப் பணிகளை நிறுத்துமாறு நாளை அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்ததைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்துக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போராட்டக் குழு அறிவித்துள்ளது.

கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை, கூடங்குளம் போராட்டக் குழுவினர் மற்றும் மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.

முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக, டாக்டர் உதயக்குமார் தலைமையிலான போராட்டக் குழுவினர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இக்குழுவில், கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ், தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ், கன்னியாகுமரி மறைமாவட்ட ஆயர் லியோன் கென்சன், இடிந்தகரை குருவானவர் ஜெயகுமார், கன்னியாகுமரி மாவட்ட மகளிர் குழுவை சேர்ந்த லிட்வின், புஷ்பராயன், மைக்கேல், ஜோசப், வக்கீல் சிவசுப்பிரமணியன், ஞானசேகர் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

இன்று காலை அவர்கள் சாந்தோமிலிருந்து தலைமைச் செயலகம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.

அப்போது தங்களது கருத்துக்கள், கோரிக்கைகளை அவர்கள் முதல்வரிடம் விளக்கினர். தமிழக சட்டசபையிலும், அமைச்சரவையிலும் அணு மின் நிலையத்தை மூடக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து நாளையே அமைச்சரவையைக் கூட்டி, கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், பிரதமரிடம் போராட்டக் குழுவினர் நேரம் ஒதுக்க கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார். எனவே உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த உறுதிமொழியை ஏற்று உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக போராட்டக் குழு அறிவித்துள்ளது.

ஜெயலலிதாவை சந்தித்து பேசிய பிறகு வெளியே வந்த போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நிருபர்களிடம் கூறுகையில், இனிமேல் எங்களது போராட்டம் மத்திய அரசின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சாத்வீகமான முறையில் அமைதி வழி போராட்டமாக இருக்கும்.

முதல்வரின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றாலும் மத்திய அரசக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். மாநில அரசுக்கும் முதல்வருக்கும் எங்களுடைய ஒத்துழைப்பு எப்போதும் உண்டு.

தமிழ் மண்ணில் இருந்து அணுமின் திட்டங்களை முழுமையாக அகற்றுவது அவசியமாகிறது. உலக அளவில் ஜெர்மனி, இத்தாலி போன்ற பல நாடுகளில் அணு உலைகளின் தீமைகளை புரிந்து கொண்டு அதை நிராகரிக்க போராடி உள்ளனர். இதை மற்ற நாடுகளும் பின்பற்றுகின்றன. எனவே எதிர்காலத்தில் இந்தியாவிலும் அணு மின் கொள்கையை மறுபரிசீலனை செய்யவேண்டும். மின் உற்பத்திக்கு எரிசக்தி மூலம் மாற்று வழியை கையாள வேண்டும் என்பதையும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்போம்.

நாங்கள் போராட்டம் நடத்தியபோது எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். அதை ஏற்று வழக்குகளை வாபஸ் பெறுவதாக முதலவர் கூறினார் என்றார்.

அதே போல மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் நாராயணசாமியும் முதல்வரை சந்தித்தார். அவரிடம், கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்தும், போராட்டம் குறித்தும் நாராயணசாமி விவாதித்தார். இடிந்தகரை சென்று போராட்டக் குழுவினரை சந்தித்துப் பேசியது குறித்தும் விளக்கினார்.

பின்னர் வெளியில் வந்த அவர் கூறுகையில், முதல்வருடன் விவாதித்தது குறித்து பிரதமரிடம் எடுத்துரைப்பேன். இந்த விவகாரத்தில் பிரதமர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். கூடங்குளம் மக்களின் மன நிலை குறித்து முதல்வரிடம் எடுத்துக் கூறினேன் என்றார் நாராயணசாமி.

போராட்டம் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது-கருணாநிதி:

இந் நிலையில் திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள செய்தியில், கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக நடந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக போராட்டக் குழுவினருக்கு அளித்த உறுதியை மத்திய, மாநில அரசுகள் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
KKNP agitation committe members and Union Minister for state for PMO Narayanasamy met CM Jayalalitha today. They discussed the Kudankulam issue with the CM.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்