ராசா, தயாநிதிக்கு பதில் மத்திய அமைச்சரவையில் யாரையும் சேர்க்க திமுக விரும்பவில்லை!

By:
Subscribe to Oneindia Tamil

Karunanidhi and Raja
டெல்லி: மத்திய அமைச்சரவையில் இப்போதைக்கு திமுக சார்பில் யாரையும் சேர்ப்பதில்லை என்று அந்தக் கட்சி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

திமுக சார்பில் மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்களாக இருந்த ஆ.ராசாவும், தயாநிதி மாறனும் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராஜினாமா செய்துவிட்டனர். இதையடுத்து மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது திமுக சார்பில் இருவரை நியமிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் திமுகவிடம் கோரிக்கை வைத்தார்.

ஆனால், திமுக எம்பி கனிமொழியும் 2ஜி விவகாரத்தில் கைதாகி, திமுக-காங்கிரஸ் உறவும் சீர்குலைந்த நிலையில், காலியாக உள்ள அமைச்சர் பதவிகளுக்கு யாரையும் நியமிக்க திமுக மறுத்துவிட்டது. ஆனாலும், திமுகவுக்கான அமைச்சரவை இடங்கள் அப்படியே உள்ளதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் நீண்ட காலத்துக்குப் பின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். இதனால் கூட்டணி உறவு லேசாக சீர்பட ஆரம்பித்துள்ளது.

இதையடுத்து விரைவிலேயே ராசா, தயாநிதிக்குப் பதிலாக திமுக தனது பிரதிநிதிகளை மத்திய அமைச்சர்களாக நியமிக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால், காங்கிரசிடம் பணியாமல் இருக்கும் வகையில், 2 மத்திய கேபினட் அமைச்சர் பதவிகளுக்கும் யாரையும் நியமிப்பதில்லை என்று திமுக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

மேலும் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்த பின்னர், 2ஜி விவகாரத்தில் சரிந்து போன கட்சியின் பெயரை மீட்டெடுத்த பின்னரே இது குறித்து திமுக யோசிக்கும் என்றும் தெரிகிறது.

English summary
The DMK has decided not to fill the two Cabinet berths now, till it clears the name in the 2G spectrum case legally
Please Wait while comments are loading...