For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெடிகுண்டு மிரட்டல் ஜாலமெல்லாம் என்னிடம் பலிக்காது-சரத்குமார்

Google Oneindia Tamil News

தென்காசி: வெடிகுண்டு மிரட்டல் ஜாலங்கள் எல்லாம் என்னிடம் பலிக்காது என தனக்கு மிரட்டல் விடுத்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் தென்காசி எம்.எல்.ஏ.வும் நடிகருமான சரத்குமார்.

சரத்குமாருக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் எழுதப்பட்டுள்ளது.அதில் சுரண்டையில் உள்ள சரத்குமார் வந்து தங்கும் வீட்டை குண்டு வைத்துத் தகர்ப்போம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து மிரட்டல் விடுவித்த விஷமிகளை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் எம்.எல்.ஏ.,சரத்குமார் விடுத்துள்ள அறிக்கை:

தென்காசி எம்.எல்.ஏ.,வாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து கடந்த 7 மாத காலத்தில் தொகுதியில் நான் பல முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டு நேரடியாகவும், எம்.எல்.ஏ.,அலுவலகம் மூலமாகவும் நான் மேற்கொண்ட பணிகளை பொதுமக்கள் அறிவர்.

பத்திரிகைகளில் வெளி வந்த செய்திகள் அவற்றை நிரூபணம் செய்பவையாக இருப்பதையும் தொகுதி மக்கள் நன்கறிவர்.இதற்கிடையே நான் தொகுதிக்கு விஜயம் செய்வதில்லை. தொகுதி பயணிகள் எவற்றையும் மேற்கொள்வதில்லை என எச்சரிக்கை மிரட்டல் கடிதம் வந்திருப்பதாக அறிகிறேன்.

எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் பொய் பிரசாரங்களுக்கும், அவமதிக்கும் நோக்கோடு அனுப்பப்படும் மிரட்டல் கடிதங்களுக்கும் என்னுடைய செயல்பாடுகளே பதில் சொல்லிடும். இருப்பினும் மிரட்டல் கடிதம் வந்ததாக பத்திரிகைளில் செய்தி வெளியானதால் பத்திரிகைகள் மூலம் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியத்தின் அடிப்படையில் எனது விளக்கத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தென்காசி எம்.எல்.ஏ.,அலுவலகம் விடுமுறை நாட்களை தவிர எல்லா நாட்களிலும் முழுமையாக செயல்பட்டு வருவதோடு எழுத்துப் பூர்வமாக மட்டும் இதுவரை சுமார் 6 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இம்மனுக்கள் துறை வாரியாக பிரிக்கப்பட்டு அவற்றிற்கான பரிந்துரை கடிதங்கள் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுகின்றன. நான் சென்னையில் இருக்கும் போதும் தபால் மூலமாகவோ, நேரிலோ எனக்கு அனுப்பி வைக்கப்பட்டு என் கையெழுத்து பெறப்பட்டு தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இவையன்றி எனது சென்னை அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் நூற்றுக்கணக்கான மனுக்கள் வந்த வண்ணம் உள்ளன. அவையும் முறையாக கையாளப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தொகுதிக்கு நான் ஆற்றிய பணிகளில் பெரும்பாலும் தேர்தல் வாக்குறுதிகள். குறிப்பிட்டு சொல்வதென்றால் கூடிய விரைவில் முடிவடையும் நிலையிலுள்ள தென்காசி மேம்பால சர்வீஸ் சாலை, ஆசாத்நகர் சிற்றாற்றின் மீது கட்டப்படும் புதிய பாலம். சுரண்டையில் என் சொந்த செலவில் தேவர் சிலை நிறுவ 2 லட்சம் ரூபாய் முன் பணம் வழங்கினேன். சுரண்டை அரசு கலை கல்லூரி புதிய கட்டடத்தில் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தென்காசி கல்லூரி மாணவர்களை கொண்டு அரசு மருத்துவமனை சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. சுரண்டை-பாண்டியாபரம் வழியாக பஸ் வசதி செய்யப்பட்டது. ராமநதி - ஜம்புநதி மேல் மட்ட கால்வாய் திட்டத்தை அமைச்சர் சட்டசபையில் அறிவித்தார். குலையநேரி கால்வாய் திட்ட பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் தோட்டக்கலை துறை மூலம் அரசு 5 கோடி ரூபாய் செலவில் அழகிய பூங்கா அமைக்கும் பணி நடக்கிறது. பாவூர்சத்திரம் பகுதியில் விவசாய பொருட்கள் சேமிக்க குளிர்பதன கிடங்கு ஏற்பாடு செய்துள்ளேன்.

பொதுவாக தேர்தலில் வெற்றி பெற்று நன்றி தெரிவிக்கும் போது தொகுதிக்குட்பட்ட பகுதிகள் எதையும் விட்டு விடாமல் நேரில் சென்று நன்றி கூறிய பெருமை எனக்கு உண்டு. அரசு நலத் திட்டங்கள் அனைத்தையும் தொகுதிக்கு கிடைக்க செய்வதோடு என் சொந்த செலவிலும் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளேன்.

ஆனால் விளம்பரமோ, ஆடம்பரமான விழாவோ நடத்தாமல் இப்பணிகள் மேற்கொண்டதால் அவை வெளிச்சத்திற்கு வரவில்லையோ என்று சில சமயங்களில் நான் எண்ணியதுண்டு. ஆனால் என் பணிகள் யாருக்கு தெரிய வேண்டுமோ, யாருக்கு புரிய வேண்டுமோ அவர்களுக்கு புரிந்தும் உள்ளது என்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.

கடந்த 3 மாத காலமாக உலகத்தரம் வாய்ந்த ஆய்வு நிறுவனத்தின் மூலம் தொகுதியில் ஒரு சிறப்பு ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். அதன்படி தொகுதியின் குடிநீர் வசதி, சாலை மேம்பாடு, சுகாதார வசதி, கல்வி மேம்பாடு, விவசாய வளர்ச்சி, தொழில் துறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை வளர்ச்சி என அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கான வழிமுறைகளை ஆராய்ந்து அவற்றை முறைப்படி செயல்படுத்தி ஐந்தாண்டு காலத்திற்குள் தமிழகத்திலேயே முன்மாதிரியான தொகுதியாக தென்காசி தொகுதியை மாற்றிக் காட்டும் பணியில் நான் முழு மூச்சுடன் பணியாற்றி வருகிறேன்.

எனது செயல்பாடுகளை தமிழக முதல்வரின் பேருதவியோடு செய்து வருகிறேன். எனது முயற்சிக்கான பலன்களும் முடிவுகளும் வெகு விரைவில் தென்காசி மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே எதிரொலிக்கும். அப்போது என்னை களங்கப்படுத்த நினைக்கும் நண்பர்களின் பொய் பிரசாரம் முடிவுக்கு வந்து விடும்.

இந்த வெடிகுண்டு மிரட்டல் ஜாலங்கள் எல்லாம் என்னிடம் பலிக்காது. எத்தகைய துர்சக்தியையும் மக்கள் பலத்தோடு சந்திக்க தயாராகத்தான் இருக்கிறேன். அஞ்சி ஓடி ஒளியும் கோழையாக நான் பிறக்கவில்லை. அன்புக்கும், நியாயத்திற்கும், பாசத்திற்கும் மட்டுமே கட்டுப்படுவேன்.

எனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது பொய்யான விடு செய்தியாக இருந்தாலும் இச்செய்தியை பார்த்து ஆயிரக்கணக்கில் போன் மூலம் தொடர்பு கொண்டு அதிர்ச்சியை வெளிக்காட்டிய அனைத்து நல் இயதங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

English summary
Actor and Tenkasi MLA Sarath Kumar has slammed the 'enemies' for issuing bomb threat to him. In a statement he has listed out his service to his constituency, Tenkasi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X