For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பற்றாக்குறை ஜனநாயகத்தை மட்டும் நம்பினால் போதாது-விஜயகாந்த்

Google Oneindia Tamil News

Vijayakanth
சென்னை: தற்போதைய பற்றாக்குறை ஜனநாயகத்தை மட்டுமே நம்பியிராமல் அனைவரின் நல்வாழ்வுக்கும் வழி வகுக்கக் கூடிய உண்மையான ஜனநாயகம் மலர்வதற்கு நாம் அனைவரும் பாடுபடுவதிலேயே இந்தியாவின் எதிர்காலம் அடங்கியுள்ளது என்று தனது குடியரசு தின விழா வாழ்த்துச் செய்தியில் கேட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியா தனது 63வது குடியரசு தினத்தை இன்றைய தினம் (அதாவது நாளைக்கு) கொண்டாடுகிறது. எத்தனையோ நாடுகள் பெற்ற சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் இழந்து தவிக்கின்றன. இடைக்காலத்தில் நெருக்கடி நிலை என்ற பெயரால் ஜனநாயகத்தை பறிகொடுத்தாலும் இந்தியா இன்றும் தனது ஜனநாயக அமைப்புகளை காப்பாற்றிக் கொண்டிருப்பதே ஒரு சாதனையாகும்.

ஆனால் அதே நேரத்தில் எல்லோரும் சமம் என்ற ஜனநாயகம் உண்மையில் செயல்பட்டுள்ளதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சமூக ரீதியில் ஜாதி, மதங்களால் பிரிந்தும், பொருளாதார ரீதியில் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு அதிகரித்தும் வருவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து வறுமை ஒழிப்புக்காக மத்திய அரசும், மாநில அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு திட்டங்களை அறிவித்தன.

ஆனால் இந்த திட்டங்கள் வெறும் காகித அறிவிப்புகளாகவே இருந்துள்ளன. இன்றும் உலகிலேயே அதிக ஏழை மக்களைக் கொண்ட நாடு இந்தியாதான். உண்மையான ஜனநாயகம் மலர்ந்திருக்குமானால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது.

மக்கள் பிரதிநிதிகளாக உள்ள அரசியல் தலைவர்கள் இந்த குடியரசு தின கொண்டாடத்தையே குண்டு துளைக்காத மேடைகளில் கொண்டாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது ஏன்? நக்சல்பாரி இயக்கத்தினர் கையில் இந்தியாவின் மூன்றில் ஒரு பகுதி இன்னும் இருப்பது ஏன்? பொதுமக்கள் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற இடங்களையும், பஸ், ரயில் போன்ற போக்குவரத்து சாதனங்களையும் போலீசார் கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பது ஏன்?

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து துறைகளிலும் ஊழல், ஊழல், ஊழல் என்று ஊழல் மயமாக உள்ளன.

இவற்றையெல்லாம் உற்று நோக்குகிறபோது எந்த ஜனநாயகம் உண்மையான ஏழை, நடுத்தர மக்களுக்கு பயன்பட வேண்டுமோ, அவர்களுக்கு பயன்படாததாலேயே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நதி நீர்ப் பங்கீடு சம்பந்தமான பிரச்னை தீர்ந்தபாடில்லை. முல்லைப் பெரியாறு பிரச்னை தமிழ்நாட்டு மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது. ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன் பிடித்து வாழ்க்கையை நடத்த முடியவில்லை.

இவை போதாதென்று தானே புயல் என்ற இயற்கைப் பேரிடர் கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டிணம் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கையையே சூறையாடி விட்டது. இவற்றிற்கு தீர்வு காணவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் மாநில, மத்திய அரசுகள் எவ்வித முனைப்பையும் காட்டவில்லை.

தற்போதைய பற்றாக்குறை ஜனநாயகத்தை மட்டுமே நம்பியிராமல் அனைவரின் நல்வாழ்வுக்கும் வழி வகுக்கக் கூடிய உண்மையான ஜனநாயகம் மலர்வதற்கு நாம் அனைவரும் பாடுபடுவதிலேயே இந்தியாவின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

ஆகவே சமூகப் பொருளாதார ரீதியில் சம வாய்ப்பு சமுதாயம் ஏற்படவும், ஜனநாயகம் காப்பாற்றப்படவும் இந்த குடியரசு தின விழாவில் உறுதி சூளுரை மேற்கொள்வோம். அனைத்து தரப்பினருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.

English summary
DMDK leader has slammed India's democracy. He has posed many questions on India's democracy and the security of the people in his republic day message.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X