For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாத மீனவர்கள்- மீன் பிடிக்கப் போகவில்லை!

Google Oneindia Tamil News

சென்னை: இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி வரும், வராது என்று மாறி மாறி வந்த தகவல்களால் தமிழக கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் நேற்று இரவு முழுவதும் தூங்காமல் விழித்து பெரும் தவிப்புக்குள்ளாகி விட்டனர். இன்றும் கூட இயல்பு நிலைக்கு அவர்கள் திரும்பவில்லை. மீன் பிடிக்கவும் அவர்கள் போகவில்லை.

முதலில் நேற்று மாலை 5 மணியளவில் தமிழக கடலோரப் பகுதிகளை குறிப்பாக சென்னையை சுனாமி தாக்கலாம் என்று தகவல்கள் வந்தன. புதுவையை 4.30 மணிக்கு தாக்கும் என்றும் கூறப்பட்டது. பின்னர் சுனாமி வர வாய்ப்பில்லை என்று தகவல்கள் வந்தன. அதன் பின்னர் இந்தோனேசியாவில் 2வது பூகம்பம் வந்ததால் தமிழக கடலோரங்களை மாலை 6.30 மணிக்கு சுனாமி தாக்கலாம் என்று செய்தி வெளியானது. இதனால் மீனவர்கள், கடலோரப் பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

அதன் பின்னர் இரவு 7 மணியளவில் சுனாமி வராது என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது. இதனால் நிம்மதிப் பெருமூச்சு ஏற்பட்டது. இருப்பினும் பலஇடங்களில் கடல் கொந்தளிப்பும், பெரிய பெரிய அலைகள் எழுந்ததாலும், கடல் உள் வாங்கியதாலும் மீனவர்களிடையே பெரும் பீதி நிலவியது.

ஒரு வேளை இரவில் சுனாமி வரலாமோ என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால் மீனவர்களும், கடலோரப் பகுதி மக்களும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இரவு முழுவதும் பெரும்பாலானோர் தூங்க முடியாமல் தவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல், கோடிமுனை, கொட்டில்பாடு மற்றும் கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மேலமணக் குடி, பள்ளம் போன்ற அடுத்தடுத்து அமைந்துள்ள மீனவ கிராமங்களில் வசித்தவர்கள் பெரும்பாலானோர் வீடுகளை காலி செய்துவிட்டு மேடான பகுதிகளுக்கு சென்றனர். பலர் கிறிஸ்தவ ஆலயங்களில் சென்று தஞ்சமடைந்தனர்.

தென்தாமரைகுளம் பனிமயமாதா ஆலயம், கோட்டாறு சவேரியார் ஆலயம், குளச்சல் புனிதமேரி பள்ளி வளாகம் போன்றவற்றில் அடைக்கலம் புகுந்த மக்கள் அங்கேயே விடிய, விடிய தங்கியிருந்தனர்.

ஆண்கள் அனைவரும் கடற்கரைக்கு அவ்வப்போது சென்று கடல் நிலவரத்தை பார்த்தபடி இருந்தனர். இதனால் அவர்களும் தூங்கவில்லை.

காரைக்கால் பகுதியில் மாலை 5 மணியளவில் திடீரென்று கடல் உள்வாங்கியது. இதனால் அரசலாறும் கடலும் கலக்கும் முகத்துவார பகுதியில் தண்ணீர் இருக்கும் மண்மேடு வெளியில் தெரிந்தது. கடல் உள்வாங்கியதால் அரசலாறு மற்றும் முல்லையாற்றில் தண்ணீர் குறைந்தது. இதனால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் தரை தட்டி நின்றன. மீனவர்கள் எவ்வளவோ போராடியும் அவற்றை மீட்க முடியவில்லை.

நாகை கடலோர பகுதியில் கடல் அலைகளின் சீற்றம் வழக்கம்போல் இருந்தது. நம்பியார்நகர், அக்கரைபேட்டை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் மாவட்ட நிர்வாகம் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்பட்டது.

இதனால் நாகை மாவட்ட கடலோர பகுதி மக்கள் விடிய, விடிய தூங்காமல் வீதியில் விழித்திருந்தனர்.

இன்றும் பீதி நிலவுகிறது

சுனாமி வராது என்று கூறி விட்டபோதிலும் இன்றும் கூட கடலோரப் பகுதிகள் பெரும்பாலானவற்றில் பீதி குறையவில்லை. மீனவர்கள் பலர் கடலுக்குள் போகவில்லை. நாகை, திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் ஒரு பீதியுடன் காணப்படுகின்றனர். இன்றும் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

சென்னை, திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் இன்று காலை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.

காசிமேடு மற்றும் அதனை சுற்றி உள்ள மீனவ கிராமங்களில் ஏராளமானோர் வீடுகளை பூட்டி விட்டு உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனர். இதனால் அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. ஒருவாரத்திற்கு முன்பு கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இன்று காலை கரை திரும்பினர். மீன்களை வாங்க வியாபாரிகளும், பொதுமக்களும் அதிக அளவு வராததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சுனாமி வராது என்று தெளிவாகி விட்ட போதிலும் கூட கடல் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்று மீனவர்கள் கருதுகிறார்கள். இதனால் கடலுக்குள் போகாமல் காத்திருக்கின்றனர்.

English summary
TN Fishermen still in Tsunami panic after a strong quake in Indonesia. They have not ventured into sea for fishing today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X