For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லஞ்சத்துக்கு தகுந்த மாதிரி பிட் தயாரித்த பள்ளி நிர்வாகம்- ஆட்சியர் சோதனையில் அம்பலம்

By Mathi
Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக பள்ளி நிர்வாகமே விடைத்தாளை ரூ500க்கும் ரூ1000க்கும் விநியோகித்து 7 ஆசிரியர்கள் பிடிபட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. மாணவ-மாணவிகள் தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

ஆட்சியரிடம் புகார்

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவுக்கு, "அவலூர்பேட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர்களே பிட் கொடுப்பதால் நன்றாக படிக்காதவர்களும்கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள் என்ற நிலை இருப்பதாக" ஒரு மின்னஞ்சல் வந்தது.

இந்த மின்னஞ்சலின் உண்மைத் தன்மையை ஆராய்வதற்காக தானே களத்தில் குதித்தார் ஆட்சியர். தம்முடன் 20 அதிகாரிகளிடம் எதற்கு போகிறோம்? எங்கு போகிறோம் என்று சொல்லாமலேயே குறிப்பிட்ட செயின்ட் ஜோசப் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.

ஆட்சியரின் அதிரடி

பள்ளியின் அலுவலக அறைக்கு ஆட்சியர் சென்றபோது விடைத்தாளை பணியாளர் ஒருவர் சகட்டுமேனிக்கு ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார். அப்படியே விடைத்தாள் ஜெராக்ஸைகளை அள்ளிய ஆட்சியர் அதிரடியாக ஒரு உத்தரவை சக அதிகாரிகளுக்குப் போட்ட்டார்.

வழக்கமாக மாணவர்களிடம் பிட் இருக்கிறதா என்றுதான் சோதிப்பார்கள். இந்த பள்ளியிலோ அனைத்து ஆசிரியர்களையும் சோதிக்குமாறு ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட ஆடிப்போனது பள்ளி நிர்வாகம்..

சிக்கிய ஜெராக்ஸ்கள்

சில ஆசிரியர்களிடம் விடைத்தாள் ஜெராக்ஸ்களும் இன்னும் சிலரிடம் மாணவர்களுக்கு கொடுப்பதற்காக ஆங்காங்கே "சொருகி" வைக்கப்பட்டிருந்த பிட்டுகளும் கிடைத்தன..

இன்னும் சிலரிடம் சில மாணவர்களின் தேர்வு எண்ணும் பெயரும் குறிப்பிடப்பட்டு ரூ500, ரூ1000 என்று எழுதப்பட்டிருந்தது.

வாத்தியார்கள் வகையாக சிக்கியதால் மாணவர்கள் பலரும் பிட்டுகளை ஜன்னலில் வீசியிருந்தனர்.

பிறகு பள்ளி நிர்வாகத்தினருடன் பிடிபட்ட ஆசிரியர்களையும் விடைத்தாள் ஜெராக்ஸ்களையும் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

அப்போதுதான் விதம் விதமாக முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது.

எப்படியெல்லாம் முறைகேடு?

- வினாத்தாளை வைத்திருக்கும் பள்ளி நிர்வாகமே ஒரு விடைத்தாளையும் தயார் செய்து வைத்துக் கொள்ளும்

- எந்த மாணவர் அல்லது பெற்றோர் எவ்வளவு பணம் கொடுக்கிறாரோ அந்த ரேஞ்சுக்கு விடைத்தாளின் ஜெராக்ஸ் தரப்படும்..

- விடைத்தாள் ஜெராக்ஸ் என்பது ரூ500, ரூ1000 ரேஞ்சுக்கும் தான் கிடைக்கும்..

- அதற்கு கீழே பணம் கொடுத்தால் பிட்டுதான் கொடுக்கும்...

வினாத்தாளை கையில் வைத்துக் கொண்டு மாணவர்கள் எப்படி விடை எழுதுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டிய ஆசிரியர்களே காசுக்காக பிட்டுகளையும் விடைத்தாள் ஜெராக்ஸையும் சுமந்து திரிந்தது கொடுமையிலும் கொடுமை!

இன்னும் கொடுமை பிட் வைத்திருந்த மாணவர்களை பிடித்த ஆசிரியர்களை ரவுடிகள் மூலம் மிரட்டுவதும் இந்த பள்ளியில் நடந்திருக்கிறது..

மாணவர்களிடம் பிட் இருந்தால் ஆசிரியர்கள் பிடிப்பார்கள். மாணவர்களுக்காக ஆசிரியர்களே பிட் கொண்டுவந்தால் ஆட்சியர்தான் பிடிப்பாரோ?

தமிழகம் முழுவதும் எத்தனை தனியார் பள்ளிகள் இப்படி திருட்டுத்தனமாக மாணவர்களை தேற்றுகிறதோ?

English summary
Thiruvannamalai District Collector has caught 7 teachers who they are helping students for mal practise in X exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X