For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மதிமுகவும் போட்டியிடவில்லை: வைகோ அறிவிப்பு

Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: இடைத்தேர்தல்களில் நடைபெறுகின்ற அநீதியை, ஜனநாயகப் படுகொலையை நாட்டு மக்களுக்கு உணர்த்துவதற்காகவே புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடப்போவதில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த திமுக ஆட்சியின் போது திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நடைபெற்ற ஆளுங்கட்சி அராஜகம், வாக்காளர்களின் வாக்குகளை விலைக்கு வாங்க, கோடிகோடியாகக் கொட்டப்பட்ட ஊழல் பணம், இவற்றால் தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அன்றைய எதிர்க்கட்சியான அதிமுக அதற்குப் பின்பு நடைபெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.

ஆனால் மார்ச் மாதம் நடைபெற்ற சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் முந்தைய ஆளுங்கட்சி செய்த அதே அதிகார அத்துமீறல்களையே இன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவும் அப்பட்டமாகச் செய்து, ஒவ்வொரு வாக்காளருக்கும் பல்லாயிரக்கணக்கில் பணத்தைக் கொடுத்து, கோடிகோடியாக ஊழல் பணத்தைக் கொட்டி, வாக்காளர்களின் ஏழ்மையை, இல்லாமையைப் பயன்படுத்தி, வாக்குகளை விலைக்கு வாங்கியது. இதில் தானும் சளைக்கவில்லை என்ற விதத்தில் திமுகவும் வாக்காளர்களுக்குப் பணத்தைக் கொடுத்து, கோடிக்கணக்கில் செலவழித்தது.

திருமங்கலம் இடைத்தேர்தலின் போதாவது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழக தேர்தல் அதிகாரியான நரேஷ் குப்தா அவர்கள், அதிகார அத்துமீறலைத் தடுக்க முயற்சி மேற்கொண்டார். அப்போது, ஆளுங்கட்சிக்குக் காவல்துறை குற்றேவல் புரிந்ததால், பணப்பட்டுவாடாவை அவரால் தடுக்க முடியவில்லை.

ஆனால் சங்கரன்கோவில் இடைத்தேர்தலின்போது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழக அதிகாரியான பிரவீண்குமார் அதிகார அத்துமீறல்களைத் தடுக்க, ஒப்புக்குக்கூட ஒரு நடவடிக்கை எடுத்ததாகக் தெரியவில்லை.

முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்த மறுநாள் அதாவது மார்ச் 15ம் தேதி சங்கரன்கோவில் தொகுதி முழுக்க ஆளுங்கட்சி பணப் பட்டுவாடா செய்தது. ஓட்டுக்குப் பணம் கொடுத்த ஆளுங்கட்சியினர், கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டு, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டபோதும், எந்த நடவடிக்கையையும், தேர்தல் ஆணைய அதிகாரி மேற்கொள்ளவில்லை. மாறாக ஓட்டுக்குப் பணம் கொடுத்தவர்களைப் பிடித்துக் கொடுத்தவர்கள் மீது காவல்துறை பொய்வழக்கு போட்டது.

தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கும், தமிழ்நாட்டில் உள்ள தேர்தல் அதிகாரிக்கும், தேர்தல் பார்வையாளருக்கும் ஆதாரங்களோடு புகார் கொடுத்தேன். ஆனால் அதற்கு மறுநாளான வாக்குப்பதிவு நாள் வரையிலும், தொகுதிக்குள் எங்கேயும் தலைகாட்டாத தேர்தல் பார்வையாளர், குதிரை கீழே தள்ளியதோடு, குழியும் பறித்த கதையாக, தொகுதியில் பணம் எங்கும் கொடுக்கப்படவில்லை என்றும், அது குறித்து எந்தப் புகாரும் தனக்கு வரவில்லை என்றும், அப்பட்டமான பொய்களை வாக்குப்பதிவு அன்றே சொன்னார்.

மதிமுக தோழர்கள், தங்கள் சக்திக்கு மீறி கைக்காசைச் செலவழித்து, வீதிவீதியாக வீடு வீடாக வாக்காளர்களை நேரில் சந்தித்து, ஆதரவு கேட்டு, ஜனநாயகக் கடமை ஆற்றினர். ஆனால் ஆளுங்கட்சி, ஆண்ட கட்சியின் பணப்பட்டுவாடாவால் அனைவரின் கண்முன்னாலேயே ஜனநாயகத்தின் மென்னி முறிக்கப்பட்டது.

புதுக்கோட்டை இடைத்தேர்தலிலும், ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதிக்கும், அராஜகம் பகிரங்கமாக அரங்கேறப் போகிறது. தமிழ்நாட்டில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி ஆளுங்கட்சியின் ஏஜெண்டாகச் செயல்படுகின்றார்.

தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு புதுக்கோட்டை நகராட்சிக்கு ரூ. 50 கோடி ரூபாய் நிதிஉதவி ஒதுக்கி இருப்பதும், 32 அமைச்சர்கள் புதுக்கோட்டையில் முகாம் இடுவதும், அதற்கான ஏற்பாடுகளே சாட்சியாகும்.

இடைத்தேர்தலில் இப்படி நடைபெறுகின்ற அநீதியை, ஜனநாயகப் படுகொலையை நாட்டு மக்களுக்கு உணர்த்துவதற்காகவே, புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பங்கு பெறுவதில்லை என்று மதிமுக முடிவு செய்துள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே புதுக்கோட்டை இடைத்தேர்தலில் திமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதில்லை என அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
MDMK chief Vaiko has announced that his party won't contest in the forthcoming Pudukkottai bypoll as the ruling ADMK government will woo the voters with money.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X