பாசி மோசடி: பிரமோத்குமார் ரூ.2.83 கோடி லஞ்சம் வாங்கியதற்கு ஆதாரம் சிக்கியது

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

சென்னை: ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த பாசி நிதி நிறுவன வழக்கில் கைதாகியுள்ள ஐ.ஜி. பிரமோத்குமார் ரூ.2.83 கோடி லஞ்சப்பணம் வாங்கியதற்கான ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார்தான் கண்டுபிடித்து, அதுதொடர்பான உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர். அதன் அடிப்படையில், சி.பி.ஐ. போலீசார் இப்போது அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர் பாசி நிதிநிறுவன மோசடி வழக்கில் தமிழக போலீஸ் ஐ.ஜி. பிரமோத்குமாருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. போலீசார், ஐ.ஜி. பிரமோத்குமாரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள். இந்தநிலையில், ஐ.ஜி. பிரமோத்குமார் ரூ.2.83 கோடி லஞ்சப்பணத்தை எப்படி, எங்கே, எவ்வாறு வாங்கினார் என்றும் உரிய ஆதாரங்களுடன் பிரமோத்குமார் எவ்வாறு சிக்கினார் என்பதும் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கை முதலில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார்தான் விசாரித்தனர். அதன்பிறகு உயர் போலீஸ் அதிகாரிகள் தொடர்பு இருந்ததால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி அப்போதைய டி.ஜி.பி. உத்தரவிட்டார்.

இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார், விசாரணை செய்து, ரூ.2.83 கோடி லஞ்சப்பணத்தை ஐ.ஜி. பிரமோத்குமார் வாங்கியதற்கான ஆதாரங்களை சேகரித்தனர்.

பாசி நிதிநிறுவன இயக்குனர்களை சென்னைக்கு அழைத்து வந்து, இங்குள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கவைத்து, அவர்களோடு லஞ்சப்பணத்தை பிரமோத்குமாருக்கு கொடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நடத்தியது அனைத்தும் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில்தான். இதனால் மோகன்ராஜை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், லஞ்சப்பணம் கைமாறியது தொடர்பான அனைத்து உண்மைகளையும் சொல்லி, சி.பி.சி.ஐ.டி.போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துவிட்டார். மேலும் இதுபற்றி மாஜிஸ்திரேட் முன்னிலையில் ரகசிய வாக்குமூலமும் கொடுத்தார்.

லஞ்சப்பணத்தை வாங்கிக்கொண்டு வந்த 2 போலீஸ்காரர்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பிடித்தனர். அவர்கள் இருவரும் அப்ரூவர்களாக மாறி உண்மையை ரகசிய வாக்குமூலமாக கூறியுள்ளனர்.இதன் அடிப்படையில், அப்போதே ஐ.ஜி. பிரமோத்குமாரிடம், சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர். கிட்டத்தட்ட அவரை கைது செய்யும் நிலைக்கு வந்தபோதுதான், சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு சி.பி.ஐ. போலீசாருக்கு மாறியது.

ஐ.ஜி. பிரமோத்குமாருக்கு லஞ்சப்பணத்தை வாங்கி கொடுத்த சென்னையைச் சேர்ந்த பிரபல புரோக்கரும், ஆடிட்டரும் கூட சி.பி.சி.ஐ.டி போலீசாரால் விசாரிக்கப்பட்டனர். இப்போது அவர்கள் இருவரையும் சி.பி.ஐ. தனது பிடியில் வைத்து விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மொத்தத்தில் இந்த வழக்கில் ஐ.ஜி. பிரமோத்குமார் உள்பட அனைவரையும் சிக்கவைத்து ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார்தான் வெளிக்கொண்டு வந்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் சேகரித்து கொடுத்த ஆதாரங்கள் அடிப்படையில்தான் சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை வேட்டையாடி பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The CB-CID and CBI sleuths have gathered enough evidence to nail IG Pramod Kumar in Paazee scam.
Write a Comment
AIFW autumn winter 2015