மக்கள் விரும்பும் முடிவை எடுக்க ஜெயலலிதாவுக்கு வீடியோ மூலம் உதயகுமார் வேண்டுகோள்

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+ Comments Mail

Udayakumar
ராதாபுரம்: கூடங்குளம் பிரச்சனையில் மக்கள் விரும்பும் முடிவை எடுக்குமாறு தலைமறைவாக உள்ள போராட்டக்குழு தலைவர் உதயகுமார் வீடியோ மூலம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்த உதயகுமார் பேட்டி அடங்கிய சி.டி.க்களை போராட்டக்குழுவினர் செய்தியாளர்களிடம் அளித்தனர்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

கூடங்குளம் அணு மின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும். அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பக் கூடாது என்ற கோரிக்கைகளோடு நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவ மக்கள், விவசாய மக்கள், வணிக பெருமக்கள் கடந்த 10 நாட்களாக உச்சகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடல் மண்ணில் தங்களை புதைத்தும், கடலில் கழுத்தளவு தண்ணீரில் நிற்பது போன்ற பல போராட்டங்களை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இது தவிர தமிழகம் முழுவதும் மீனவர்கள், மாணவர்கள், வக்கீல்கள், பெண்கள் அமைப்பினர் உள்ளிட்ட பல தரப்பு மக்களும் எங்களுக்கு ஆதரவாக பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கூடங்குளம், வைராவி கிணறு போன்ற கிராமங்களில் காவல் துறையினர் அராஜக தாக்குதலால் நோய் வாய்ப்பட்ட குழந்தைகளை கூட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தாய்மார்கள் வீட்டினுள் பதுங்கிக் கிடக்கிறார்கள். இப்படிப்பட்ட அச்ச பீதி இந்த பகுதி முழுவதும் பரவி கிடக்கிறது.

கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தியபோது மிகவும் தாழ்வாக பறந்த விமானத்தால் தோழர் சகாயம் இறந்துவிட்டார். அவரது உடலை மருத்துவமனையில் இருந்து பெற காவல் துறை சில பிரச்சினைகளை உருவாக்கியது. இதனால் கிராம மக்கள் அனைவரும் பதட்டத்தோடு இருந்த நிலையில் சகாயத்தின் உடலை தங்களது விருப்பப்படி கொண்டு வரவிடாமல் காவல்துறை தடுத்து நிறுத்தி மீண்டும் மக்கள் மத்தியில் பதட்டம் மற்றும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அச்சன்புதூர் நிலத்தட்டு ஒரு பிரச்சினைக்குரியது என்று முன்பே நாங்கள் கூறியிருந்தோம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மணப்பாட்டில் வெப்ப நீர் ஊற்று எழுந்தது. அதற்கு அச்சன்புதூரில் உள்ளது போன்ற வெப்பத்தட்டு தான் காரணம் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.

இயற்கையே எச்சரித்தும் அதையும் ஏற்றுக்கொள்ளாமல், மக்களின் உணர்வுகளை முற்றிலும் புறம்தள்ளி இந்த அணுமின் நிலையத்தை திணிக்க வேண்டுமா? என நாம் சிந்திக்க வேண்டும். இந்த பிரச்சினையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நல்ல முடிவை எடுக்க வேண்டும். அப்படி அவர் நல்ல முடிவை எடுக்கும் பட்சத்தில் அணு சக்திக்கு எதிரான நாங்கள் மற்றும் மக்கள் எல்லாவிதத்திலும் அவர்களுக்கு ஒத்துழைக்கவும், உதவவும் தயாராக இருக்கிறோம்.

நாங்கள் எந்த பொது சொத்துக்கும் சேதம் விளைவிக்கவில்லை. நாங்கள் ஜனநாயக முறையில் அறவழியில் போராட்டம் நடத்துபவர்கள். எங்களை தீவிரவாதிகள் போல சித்தரிக்காமல் எங்களுடன் கலந்து பேசி மக்கள் விரும்பும் முடிவை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை அன்போடும், பண்போடும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
Kudankulam protesters team head Udayakumar relased a CD requesting CM Jayalalithaa to have discussion with the protesters to solve the anti-nuclear protest issue.
Please Wait while comments are loading...
Your Fashion Voice

Videos

Advertisement
Content will resume after advertisement