For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல்.. காங்கிரஸுக்கு தொடர்பு - இத்தாலி பத்திரிகை

By Shankar
Google Oneindia Tamil News

Italian media hints at Cong link to copter scam
வி.ஐ.பி.க்கள் பயணத்துக்கு ஹெலிகாப்டர்கள் வாங்க இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ரூ. 3600 கோடிக்கு செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் இந்தியர்கள் ரூ. 360 கோடி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் நாள்தோறும் புதிதாக, புதிதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

முதலில் இந்த முறைகேட்டில் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியின் உறவினர்கள் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாக இத்தாலி பத்திரிகையான 'லெட்டரா 43'யில் தகவல் வெளியாகியுள்ளது.

அதில், "பின்மெக்கானிக்கா நிறுவனம் இந்தியாவுக்கு 12 ஹெலிகாப்டர்கள் தயாரித்து கொடுக்க செய்த ஒப்பந்தத்தில் மொத்தம் ரூ. 450 கோடி இந்தியர்களுக்கு லஞ்சமாக கொடுத்துள்ளது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் இதில் முக்கிய இடைத்தரகராக செயல்பட்டுள்ளார்.

கிறிஸ்டியன் மைக்கேலுக்கும் இந்தியாவில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் நெருக்கமான தொடர்புள்ளது. இந்த பேரத்தில் அவருக்கு காங்கிரஸ் பின்புலமாக இருந்து உதவி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

மற்றொரு இடைத்தரகரான கியூடியோ ரல்ப் என்பவர் ரியல் எஸ்டேட் நிறுவனமான எம்மார்-எம்.ஜி.எப் நிறுவனத்தில் இயக்குனராக இருந்தார். இந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் கனிஷ்காசிங் என்பவரால் நடத்தப்படுகிறது.

இந்த கனிஷ்காசிங், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுலுக்கு நெருக்கமானவர். கனிஷ்காசிங்கும், கிறிஸ்டியன் மைக்கேலும் சேர்ந்து லஞ்ச பணத்தில் முதல் தவணனையாக ரூ. 210 கோடி பெற்றுள்ளனர். இந்தப் பணம் இந்தியாவில் எந்தக் குடும்பத்துக்குச் சென்றிருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

காங்கிரசுடனான இவர்கள் தொடர்புதான் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து ஹெலிகாப்டர் பேர ஊழலுக்கும் ராகுல்காந்திக்கும் மிக, மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக பாரதீய ஜனதா கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது. பா.ஜ.க. முன்னாள் எம்.பி. கீர்த்தி சோமையா இது தொடர்பாக சி.பி.ஐ.க்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர், ஹெலிகாப்டர் பேர ஊழலுக்கும், ராகுல்காந்தியின் அரசியல் உதவியாளர் கனிஷ்கா சிங்குக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக இத்தாலி பத்திரிகை உறுதிபட செய்தி வெளியிட்டுள்ளது.

ராகுல்காந்தி உதவி செய்ததன் மூலம் ரூ. 360 கோடி ஊழலில் கனிஷ்காசிங்கின் உறவினர்கள் லாபம் அடைந் திருப்பது உறுதியாக தெரிய வந்துள்ளது. எனவே இதில் மறைந்து இருக்கும் எல்லா ரகசியங்களையும் சி.பி.ஐ. தீவிரமாக விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் மறுப்பு

பா.ஜ.க.வின் இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி உடனடியாக மறுத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்திரி கூறுகையில், நாளையே யாராவது ஒருவர் பிட்சா சாப்பிட்டால் கூட அது ராகுல்தான் என்பார்கள் போல் இருக்கிறது என்றார்.

ராஜீவ் ஆட்சிக் காலத்தில் நடந்த போபர்ஸ் ஆயுத பேர ஊழலில் காங்கிரசுக்கு தொடர்பு இருப்பது முன்பு உறுதிபடுத்தப்பட்டது. அதுபோல் ஹெலிகாப்டர் ஊழலும் காங்கிரசை நோக்கி நகர்ந்து வருவது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரணாப் முகர்ஜியிடம் விசாரணை?

ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பான விசாரணை சூடு பிடித்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் பிரணாப் முகர்ஜி ராணுவ மந்திரியாக இருந்த போது செய்யப்பட்டிருப்பதால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிரணாப்முகர்ஜி கையெழுத்து போட்டிருப்பதால் அவரிடம் விசாரணை நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Lettera 43, an Italian media exposed the links of Congress in Chopper deal scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X