இஸ்ரோவில் வேலை வாங்கித் தருவதாக கூறி 84 பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி - பெண் கைது

By:
Subscribe to Oneindia Tamil

ISRO
பெங்களூர்: இஸ்ரோவில் வேலை வாங்கித் தருவதாக கூறி 84 பேரிடம் பெருமளவில் பண மோசடி செய்த பலே பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இஸ்ரோ நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, இஸ்ரோ சார்பில் பெங்களூர் சஞ்சய் நகர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சித்த ஷாஷ்வதி மொகந்தி (23) என்ற பெண்ணை கைது செய்தனர்.

இதையடுத்து ஒடிசா போலீசார் பெங்களூர் வந்து அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக் தகவல்கள் வெளியானது. இஸ்ரோவுக்கு என்ஜினியர் தேர்வு கடந்தாண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. ஒடிசா மாநிலம் மகா மாயா இன்ஸ்டியுட் ஆப் டெக்னிகல் சயின்ஸ் கல்லூரியை சேர்ந்த மொகந்தி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார். தேர்ச்சி அடைந்த இவர் அடுத்தகட்ட எழுத்து தேர்வுக்காக கடந்த டிசம்பர் மாதம் மைசூர் வந்துள்ளார்.

மீண்டும் ஒடிசாவுக்கு சென்ற இவர் மாகாமாயி பொறியியல் கல்லூரி, ராம ராதாகிருஷ்ணன் கல்லூரி, சுஷ்ரி கல்லூரி மற்றும் பல கல்லூரிகளை அணுகி இஸ்ரோ வேலைக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுவதாகவும் தான் அதற்கு மேலாளராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதை நம்பிய கல்லூரி மாணவர்கள் சுமார் 84 பேர் அவரிடம் பல லட்சம் பணம் கொடுத்துள்ளனர்.

பணத்தை பெற்ற மொகந்தி போலி விண்ணப்ப படிவங்களை இ மெயிலில் அனுப்பியுள்ளார். அவர்களும் படிவங்களை பூர்த்தி செய்து இஸ்ரோவுக்கு அனுப்பியுள்ளனர். தற்போது ஆட்கள் தேர்வு நடக்காத நிலையில் திடீரென விண்ணப்ப படிவங்கள் வந்ததால் குழம்பிப்போன இஸ்ரோ அதிகாரிகள் இதுகுறித்து சஞ்சய்நகர் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து மொகந்தியை போலீஸார் கைது செய்தனர்.

English summary
Bangalore police have arrested a woman from Odisha in money fraud case.
Please Wait while comments are loading...