மனிதநேயம் மிக்கவர் கடலூர் மணி: வைகோ கண்ணீர் அஞ்சலி

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

சென்னை: வாழும் போது போராளியாக வாழ்ந்து தனி ஈழம் மலர தீக்குளித்து உயிரை மாய்த்த கடலூர் மணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீரவணக்கமும் கண்ணீர் அஞ்சலியும் செலுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:

கடலூர் நல்லவாடு பகுதியைச் சேர்ந்த மணி இளம் வயதில் இருந்தே நாட்டு நலனுக்காகவும் அநீதியை எதிர்த்தும் போராளியாகவே வாழ்ந்து உள்ளார்.

வளைகுடா நாட்டில் கப்பல் துறையில் பணியாற்றி உள்ளார். மனிதநேயம் மிக்கவராகவே வாழ்ந்து, 26 முறை குருதிக்கொடை அளித்து உள்ளார். சுனாமி வீடு கட்டும் திட்டத்தில் நடந்த முறைகேடுகளை எதிர்த்தும், அதிகார வர்க்கத்தை எதிர்த்தும் தொடர்ந்து போராடி வந்தார்.

ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுந்துயர் குறித்து மனம் உடைந்தவராக பல கட்டங்களில் தன் வேதனையைப் புலப்படுத்தி உள்ளார். இளந்தளிர் பாலச்சந்திரன் படுகொலை, அவரை முற்றிலும் நிலைகுலையச் செய்ததாக அவரது நண்பர்கள் வருத்தத்தோடு கூறினார்கள். அதனால்தான், மார்ச் 4-ந்தேதியைத் தேர்ந்தெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்து தீக்குளித்தார்.

"தமிழ் இனக்கொலை செய்த ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும்; தமிழ் ஈழம் தனி நாடாக வேண்டும்" என்று அறிவித்து தன் உயிரை அர்ப்பணித்து உள்ளார். அவருக்கு எனது வீரவணக்கம்.

பேரிடி தலையில் விழுந்த நிலையில், கதறித்துடிக்கும் அவரது துணைவியாருக்கும், பிள்ளைகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்.

தமிழ் ஈழ விடியலுக்காக வாழ்ந்து போராட வேண்டிய இளைஞர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என்றும் வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
MDMK leader Vaiko paid his last tribute to Cuddalore Mani, he immolated himself for Lankan Tamils.
Write a Comment