For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் ரூ. 10 லட்சம் கேட்டு எல்.கே.ஜி. மாணவன் கடத்தல்: சில மணிநேரத்தில் மீட்ட போலீஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த எல்.கே.ஜி. மாணவன் சூர்யா நேற்று பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் வைத்தே கடத்திச்செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடத்தப்பட்ட சிறுவனை சில மணிநேரங்களில் போலீசார் மீட்டனர். கடத்தல்காரன் கேட்ட ரூ.10 லட்சத்தை கொடுத்துதான் போலீசார் குழந்தையை மீட்டதாக தகவல் பரவியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

எண்ணூர் துறைமுகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அரிகரன் அவரது மனைவி பத்மாவதி இவர்களின் குழந்தை சூர்யா, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளியில் எல்.கே.ஜியில் படித்து வருகிறான்.

மதியம் 12 மணி அளவில் மாணவனின் வகுப்பறைக்கு வந்தே கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவன் சூர்யாவை துணிச்சலுடன் அழைத்துச் சென்றுள்ளான். இதுபற்றி தகவல் கிடைத்ததும் எண்ணூர் துறைமுகத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் மாணவனின் தந்தை அரிகரன் மற்றும் தாய் பத்மாவதி ஆகியோர் அலறியடித்துக் கொண்டு பள்ளிக்கு வந்தனர்.

அங்குள்ள கேமராவை போட்டுப் பார்த்தபோது, சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மாணவன் சூர்யாவுடன் சிரித்தபடியே பேசிக் கொண்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இதற்கிடையே அரிகரனின் செல்போனில் பேசிய மர்ம ஆசாமி ஒருவன், உங்கள் மகனை கடத்தி வைத்துள்ளோம். ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால்தான் அவனை உயிருடன் விடுவோம் என்று மிரட்டினான். இதனால் உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது அரிகரனும் அச்சடைந்தார்.

போலீசுடன் சென்றால் மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்று அவர் கருதினார். எனவே ரூ.10 லட்சம் பணத்தை தனி ஆளாக சென்று கொடுத்துவிட்டு கடத்தல் கும்பலிடம் இருந்து மகனை மீட்டு வரவும் அவர் திட்டமிட்டார். அதே நேரத்தில் தனிப்படை போலீசாரும் 7 பிரிவுகளாக பிரிந்து மாணவனை மீட்க தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில் இரவு 7.30 மணிக்கு பேட்டியளித்த இணை கமிஷனர் சங்கர், மாணவன் சூர்யா பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாகவும், கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவன் மட்டும் சிக்கியுள்ளான் என்றும் தெரிவித்தார்.

கடத்தலில் தொடர்புடைய முக்கிய நபரை தேடி வருவதாகவும் இதற்கு மேல் எதுவும் தெரிவிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

3 பேருக்கு தொடர்பு

இந்த கடத்தல் தொடர்பாக பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையின் போது இந்த கடத்தலில் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த விஷால் என்ற டைலர், மாணவன் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு உள்ளார். இவரும் இவரது நண்பர்கள் பிரபு, கதிரவன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து மாணவனை கடத்த திட்டம் தீட்டி உள்ளனர்.

கதிரவன் தலைமறைவு

பள்ளி வேன் ஒன்றில் பிரபு தற்காலிக டிரைவராக பணிபுரிந்து வந்ததால், வசதியான வீட்டை சேர்ந்த மாணவன் ஒருவனை கடத்தி பணம் பறிக்க வேண்டும் என்று விஷால் ஐடியா கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 3 பேரும் சேர்ந்து மாணவன் சூர்யாவை எப்படி கடத்தலாம் என்று மதுபார் ஒன்றில் வைத்து திட்டம் தீட்டி உள்ளனர். இதன்படி நேற்று காலை கதிரவனும் பிரபுவும் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றுள்ளனர். கதிரவன் வகுப்பறைக்கு சென்று சூர்யாவை அழைத்து வந்துள்ளார்.

அப்போது சூர்யாவை மோட்டார் சைக்கிளில் வைத்து கொருக்குபேட்டை ஐ.ஓ.சி. அருகில் உள்ள பிரபு வீட்டுக்கு அழைத்து சென்றதும் தெரிய வந்துள்ளது. அங்கிருந்தபடிதான் கதிரவன் மாணவனின் தந்தை அரிகரனிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளான். தற்போது விஷாலும் பிரபுவும் போலீசில் சிக்கி உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கதிரவன் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

தர்மபுரியில் பதுங்கல்

சொந்த ஊரான தருமபுரியில் பதுங்கி இருப்பதாக கருதப்படுகிறது. அவரை தேடி தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். அதே நேரத்தில் மாணவன் சூர்யாவை போலீசார் மீட்கவில்லை என்றும், ரூ.10 லட்சம் பணம் கொடுத்து மாணவனின் தந்தை அரிகரனே கடத்தல் கும்பலிடம் இருந்து அவனை மீட்டு வந்ததாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியானது.
இதனை போலீசார் மறுத்தனர்.

நீடிக்கும் மர்மம்

கடந்த ஆண்டு அண்ணா நகரை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் கீர்த்திவாசன் கடத்தப்பட்டான். அவனை கடத்தியவர்கள் ரூ.1 கோடி கேட்டு மிரட்டினார்கள். சிறுவனின் உயிரை காப்பதற்காக ரூ.1 கோடி கொடுத்து அவன் மீட்கப்பட்டான் என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் அந்த சிறுவனை கடத்திய 2 என்ஜினீயர்களை போலீசார் கைது செய்தனர். பணமும் மீட்கப்பட்டது. ஆனால் தற்போது எல்.கே.ஜி. மாணவன் சூர்யா மீட்கப் பட்டது எப்படி என்பதில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. ரூ.10 லட்சம் பணத்துடன் கதிரவன் தப்பி சென்றிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் லண்டனில் வசித்து வரும் இலங்கை தம்பதிகள் கடத்தப்பட்ட சம்பவத்தில், அவர்கள் மீட்கப்பட்டது குறித்து விரிவான தகவல்களை போலீசார் வெளியிட்டனர். அப்போது மீட்கப்பட்ட தம்பதிகள் 2 பேரும் போலீசார் முன்னிலையிலேயே நிருபர்களின் கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் அளித்தனர்.

ஆனால் நேற்று மீட்கப்பட்ட மாணவனிடமோ, அல்லது அவனது பெற்றோரிடமோ நிருபர்கள் யாரும் பேசுவதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. இதுவும் மர்மமாக உள்ளது.

மாணவன் சூர்யாவின் கடத்தல் பின்னணியில் ஏராளமான கேள்விகள் புதைந்து கிடக்கின்றன. இதற்கான விடையை தமிழக போலீசார்தான் அளிக்கவேண்டும்.

English summary
Mystery surrounded the kidnap and subsequent rescue on Thursday of Surya, 4-year-old son of an assistant manager in Ennore Port, from in front of his school in R A Puram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X