For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலையங்கம்: பலி வாங்கும் “பவுன்சர்” – இனியாவது தடுக்குமா ஐசிசி?

Google Oneindia Tamil News

கிரிக்கெட் - "11 முட்டாள்கள் விளையாடுவதை 11 ஆயிரம் முட்டாள்கள் இணைந்து பார்க்கும் விளையாட்டு" என்று உலகப்புகழ்பெற்ற இலக்கிய மேதை ஜார்ஜ் பெர்னாட்ஷாவால் வர்ணிக்கப்பட்ட இவ்விளையாட்டு இன்று உயிர்ப்பலி களமாக மாறி வருகிறது.

பல்வேறு வகையிலான பந்து வீச்சு முறைகளும், மட்டையால் அடிப்பதற்கான விதிகளும் வகுக்கப்பட்டிருந்தாலும் சில விதிமுறைகள் விளையாடும் எதிராளியின் உயிரையே போக்கும் வகையில்தான் அமைந்துள்ளது. அப்படி ஒரு பந்து வீச்சில் இன்று தன்னுடைய உயிரை இழந்துள்ளார் 25 வயதான ஆஸ்திரேலியாவின் இளம் வீரர் பில் ஹியூக்ஸ்.

The cruel face “bouncer”…

இவர் மட்டுமல்ல இதற்கு முன்னரும் பல வீரர்கள் இதுபோன்ற பந்து வீச்சுகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக இன்று ஹியூக்ஸின் உயிர் பிரிந்ததற்கு காரணமாக சொல்லப்படுவது, எதிரணி வீரரான சீன் அப்பாட்டின் "பவுன்சர்" பந்து வீச்சுதான்.

"பவுன்சர்" பந்து வீச்சு என்பது "கரணம் தப்பினால் மரணம்" என்று வீரரின் உயிரையே பறிக்கும் திறன் கொண்ட பந்து வீச்சு உத்தி. மிகவும் அபாயகரமான இந்த தந்திரத்தை பேட்ஸ்மேனை நிலை குலைய வைப்பதற்காக, பயமுறுத்துவதற்காக, பதட்டத்தை ஏற்படுத்துவதற்காக, தவறு செய்ய வைப்பதற்காக வேகப் பந்து வீச்சாளர்கள் பயன்படுத்துகிறார்கள். கிட்டத்தட்ட இது ஒரு வகையான ஆயுதமாகும்.

பவுன்சர் என்றால் என்ன?

ஒரு பேட்ஸ்மேன் திறமையாகவும், அதிரடியாகவும் ஆட்டத்தில் ஜொலிக்கும் போது, அவர்களை திசை மாற்றும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் பந்து வீச்சாளர் கையாளும் ஒரு "டேக்டிக்ஸ்"தான் பவுன்சர். கண்ணிமைக்கும் நேரத்தில் அபாயகரமாக எழுந்து வருகின்ற பந்தினை தடுத்தடிப்பதற்கு பேட்ஸ்மேனுக்கு அசாத்திய திறமையும், கண நேர சிந்தனையும் வேண்டும். இல்லையெனில் ஆபத்துதான். நெஞ்சினைக் குறிவைக்கும் வகையில் வீசப்பட்டாலே அது பவுன்சர்தான். சில நேரங்களில் நேரடியாக தலையினைத் தாக்கும் வகையிலும் பவுன்சர் பந்துகள் பறந்து வரும். அதனைத் தடுப்பதென்பது மிகவும் சவாலான ஒரு வேலை.

தற்போதைய நடைமுறைகளின் படி கிரிக்கெட் போட்டியில் இரு விக்கெட்டுகளுக்கான தூரம் 22 யார்டாக உள்ளது. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள பிட்ச் அதாவது ஆடுகளங்கள், பந்தானது அதிக அளவில் பவுன்சாக கூடிய வகையில் இருக்கும். அதாவது பந்து அதிகமாக பிட்சில் பட்டு எழுந்து வரும்.

இதனால்தான் இந்திய வீரர்கள் இங்கு போய் விளையாட முடியாமல் தட்டுத் தடுமாறுகின்றனர். இதுபோன்ற பிட்ச்சில் கொஞ்சம் வேகமாக போட்டாலே பந்து பாய்ந்து வரும்.

இதுபோன்ற பந்து வீச்சுக்களைத் தவிர்ப்பதற்காகத்தான் தூரத்தினை 24 யார்டுகளாக அதிகரிக்க பல காலங்களாக கோரிக்கை விடப்பட்டு வருகின்றது.

ஏனெனில், ஏழுகடல், ஏழு மலை தாண்டி ஒருவரின் உயிரானது கிளிக்குள் இருப்பதுபோல், பேட்ஸ்மேனின் உயிர்நாடி, பந்து வீச்சாளரின் கையில்தான் இருக்கின்றது. கிரிக்கெட்டைப் பொறுத்த வரையில் பந்து வீசும் வீரர்தான் "ராஜா". அவர்களைத் தாண்டித்தான் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் செலுத்தியாக வேண்டும்.

அதிலும், வேகப்பந்து வீச்சாளார்கள் என்றால் கேட்கவே வேண்டாம். கண்ணிமைக்கும் நேரத்தில் வேகத்தைக் அதிகரித்து பந்தினை பவுன்சராக மாற்றும் திறமை படைத்தவர்கள் அவர்கள். "நான்தான் இங்கே முக்கியம்" என்று காட்டுவதற்காகவே எப்போதும் அதிவேகமாக பந்து வீசுபவர்கள் அவர்கள். எதிரில் விளையாடும் வீரரைப் பற்றிய கவலை இவர்களுக்கு துளியும் இருக்காது. இதனால் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் ஏராளம்.

பவுன்சர் வீசுவதில், மேற்கிந்திய பந்து வீச்சாளர்களான மால்கம் மார்ஷல், இயான் பிஷப், பாட்ரிக் பேட்டர்சன் ஆகியோர் "கில்லிகள்".

ஒருமுறை இயான் பிஷப் போட்ட "பவுன்சர்" பந்தில் நம் நாட்டு கிரிக்கெட் வீரரான ஸ்ரீகாந்த்தின் கை பலமாக உடைந்தது. ஒருமுறை பிஷப்பால் ஸ்ரீகாந்தின் மூக்கு உடைந்தது. மற்றொரு முறை "சேம் பவுலர், சேம் பேட்ஸ்மேன்" மறுபடியும் ஸ்ரீகாந்துக்கு மூக்கு "அவுட்".

அதென்னவோ பிஷப்புக்கும், ஸ்ரீகாந்துக்கும் "பவுன்சர்" பந்தில் அப்படி ஒரு "கெமிஸ்ட்ரி" ஒர்கவுட் ஆனது. கிட்டதட்ட 6 முறை பிஷப்பின் பவுன்சர் வீச்சில் ஆட்டமிழந்துள்ளார் ஸ்ரீரங்கத்து ஸ்ரீகாந்த். முதல் ஓவரிலேயே, முதல் பந்தையே பவுன்சரைப் போடுவார் பிஷப். பின்னாடியே ஒரு யார்க்கர். பேட்ஸ்மேனாக இருக்கும் ஸ்ரீகாந்தின் டவுசர் கிழிந்துவிடும் அவ்வளவுதான் அவுட்!

இதற்கு முன்னர், 1933 ஆம் வருடத்தில் ஒருமுறை இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான ஹரோல்ட் லார்வூட் வீசிய "பவுன்சர்" பந்தில் பேட்ஸ்மேனைத்தாண்டி ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பரான பெர்ட் ஓல்ட் பீல்ட்டின் தலையில் பந்து பட்டு அவருடைய மண்டை தாறுமாறாக விரிசல் விட்டது.

1960 இல் மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் சார்லி கிரிப்பித் பந்து வீச்சில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த நாரி கான்ட்ராக்டர் படுகாயத்துடன் மயக்கமடைந்து ஆடுகளத்திலேயே வீழ்ந்தார். கிட்டதட்ட ஆறு நாட்களுக்கு சுய நினைவு திரும்பாமல் உயிருக்கு போராடிய கான்ட்ராக்டர் அதிருஷ்டவசமாக உயிர் பிழைத்தார். ஆனால், அதன்பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

அடுத்து பவுன்சருக்கு "பலிகடா" ஆனவர் நியூசிலாந்தின் இவான் சாட்பீல்ட். இங்கிலாந்து வீரர் பீட்டர் லிவர் வீசிய பவுன்சரில் நாக்கு தொண்டைக்குள் சிக்கி உயிருக்குப் போராடி பின்னர் மீண்டு வந்தார்.

தலைக்கு வந்த "பவுன்சர்" பந்து "தலைப்பாகை"யுடன் போகாமல் சில வீரர்களின் தலையையும் காவு வாங்கியுள்ளது.

அதில் முதலாவது, 1998 ஆம் ஆண்டு வங்கதேச லீக் கிரிக்கெட்டின்போது பீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய வீரர் ராமன் லம்பா மீது பேட்ஸ்மேன் மீரப் ஹுசைன் அடித்த பந்து வந்து பட்டது. காதும், நெற்றியும் சேருமிடத்தில் பந்து பட்டதால் 3 நாட்கள் கோமாவுக்கு சென்ற 38 வயதான லம்பா, இறுதியில் உயிரிழந்தார். அதேபோல், 1959 இல் 17 வயதான பாகிஸ்தான் வீரர் அப்துல் அஜிஸ் நெஞ்சில் பந்து பட்டு அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இவ்வளவு ஏன்? "கிரிக்கெட் உலகின் கடவுள்" என்று கொண்டாடப்படும் சச்சினே பலமுறை சோயப் அக்தரின் "பவுன்சர்" வீச்சில் சிக்கித் தவித்தவர்தான். பயப்படாம ஆடுங்க சச்சின் என்று சோயப்பே கிண்டலடிக்கும் அளவுக்கு பயந்தவர் சச்சின்.

இந்தியாவினைப் பொறுத்த வரையில் பேட்ஸ்மேனைப் பற்றியும் யோசித்து பந்து வீசும் "ஜென்டில்மேன் வீரர்" என்றால் அது கபில்தேவ் மட்டும்தான். ஏனெனில், அவர் பேட்ஸ்மேனை அதிர்ச்சிக்கு உள்ளாக்க வேண்டும் என்று நினைக்காமல், எப்படி புத்திசாலித்தனமாக பந்து வீசினால் விக்கெட்டை சாய்க்கலாம் என்று யோசித்து பந்து வீசுவதில் வல்லவர். அபாயத்தை விட, புத்திசாலித்தனத்தில் நம்பிக்கை கொண்டவர் அவர்.

வேகப் பந்து வீச்சில் பவுன்சர் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான். அது ஒரு உத்தி. ஆனால் பல சமயங்களில் அது விபரீதத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஐசிசி விதிமுறையின்படி, ஒரு ஓவருக்கு 2 பவுன்சரை போட அனுமதி உண்டு. டுவென்டி 20 போட்டிகளில் ஒரு ஓவருக்கு ஒரு பவுன்சர் போடலாம்.

ஆனால் ஹியூக்ஸ் உயிரை இன்று ஒரு பவுன்சர் பறித்துள்ளது ரசிகர்களை அதிர வைத்துள்ளது. பேசாமல் இந்த பவுன்சரை தடை செய்து விடலாம் என்ற சிந்தனையும், விவாதமும் எழுந்துள்ளது.

கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டுதான். உயிரைப் பலி வாங்கும் கொலைக்களமாக அது மாறிவிடக்கூடாது. இனியாவது, கிரிக்கெட் விதிமுறையாளர்கள் விழித்துக் கொண்டு பவுன்சர் பந்து வீச்சைத் தடை செய்யலாம். இல்லையெனில், கிரிக்கெட் ஆடுகளத்தில் உயிரிழப்புகள்தான் ரன்களாக மிஞ்சும்.

ரசிகர்களுக்குத் தேவை வீரர்களின் உயிர் அல்ல... நல்ல விறுவிறுப்பான, ஆரோக்கியமான கிரிக்கெட் போட்டி மட்டுமே... யோசிப்பார்களா இனியேனும்?!

English summary
“Bouncing” is one of the bowling method in Cricket. It is very dangerous one, which was killed more number of cricketers recently Philip Hughes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X