For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளாவில் இருந்து 21 பேர் மாயம்- உறுதிப்படுத்தினார் பினராயி.. ஐஎஸ்ஸில் சேர்ந்திருக்கலாம் என சந்தேகம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: தமிழகத்தில் திருப்பூர் நகரத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் மளிகைக்கடை வைத்து நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற ஒரு தம்பதி உட்பட 20 இளைஞர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அம்மாநிலத்தில் இருந்து இதுவரை 21 பேர் மாநிலத்தில் இருந்து மாயமாகி இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் சட்டசபையில் அறிவித்துள்ளார். அவர்களில் 6 பேர் பெண்கள் என்பதுதான் கூடுதல் அதிர்ச்சியாகும். மாயமான அனைவரும் கேரளாவின் தமிழக எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், தமிழகத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் நேற்று சட்டசபை கூடியதும் இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கேள்வி எழுப்பினார். ‘‘கேரள இளை ஞர்கள் சிலர் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் பெரும் பீதியை ஏற்படுத்துகின்றன. ஆனால் இதுவரை அரசு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமான பதிலோ, விளக்கமோ அளிக்கப்படவில்லை. நிலைமையை சமாளிக்க பொது மக்களின் உதவியை முதல்வர் நாட வேண்டும். கிடைத்த தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்.

21 missing from Kerala may be in IS camps: CM

பாஜக எம்எல்ஏ ஒ.ராஜகோபால், முதல்வரின் சொந்த தொகுதியில் வசித்து வந்த பல் மருத்துவ படிப்பு மாணவியும் மாயமாகியுள்ளார். அவர் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு பாலக்காட்டுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், அம்மாவட்டத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றவர்களில் அவரும் ஒருவர் என்பதும் தெரியவந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சட்டசபையில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், காசர்கோடில் இருந்து 17 பேரும், பாலக்காட்டில் இருந்து 4 பேரும் மாயமாகி இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாயமானவர்களில் காசர்கோட்டில் இருந்து 4 பெண்கள், 3 குழந்தைகளும், பாலக்காட்டில் இருந்து 2 பெண்களும் அடங்குவர். பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்தார்.

ஊடகங்களில் வெளியான தகவலின்படி இவர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளனர். மும்பை விமான நிலையத்தில் காத்திருந்த காசர்கோடு பகுதியை சேர்ந்த பிரோஸ் என்பவர் அண்மையில் கைதாகியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கேரள இளைஞர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைவது தொடர்பான விவகாரத்தை அரசு மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது. மத்திய அரசின் ஆதரவுடன் இதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எந்தவொரு தீவிரவாத நடவடிக்கையையும் அரசு பொறுத்துக் கொள்ளாது. நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே சமயம் அரசியல் ஆதாயத்துக்காக இந்த விவகாரத்தை பெரிது படுத்தவும் அனுமதிக்க மாட் டோம்.

இப்பிரச்சினையால் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான மனோபாவம் வளர்ந்து வருகிறது. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேக கண்ணோடு பார்க்கும் நிலையும் உருவாகி வருகிறது. ஒரு சிலர் வேண்டுமென்றே மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். கேரளாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எந்தவொரு தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் ஏற்க மாட்டார்கள்.

வெறும் அரசால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றாக கைகோர்த்தால் மட்டுமே தீய சக்திகளை தனிமைப்படுத்தி களையெடுக்க முடியும் என்று சட்டசபையில் பேசியுள்ளார்.

கேரள மாநிலம் காசர்கோடு மற்றும் பாலக்காட்டை சேர்ந்த 16 பேர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் திடீரென மாயமானார்கள். இவர்களில் 4 பெண்களும் 2 குழந்தைகளும் உண்டு. இவர்கள் இலங்கை மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள புனித தலங்களுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர். இதன்பிறகு கடந்த ஒரு மாதமாகியும் இவர்களை பற்றிய எந்த தகவலும் வரவில்லை. இந்நிலையில் காணாமல் போன ஹபீசுதீன் என்பவரின் மனைவி செல்போனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது.

அந்த செய்தியில், நாங்கள் சொர்க்க ராஜ்ஜியத்திற்கு வந்து விட்டோம். இனி எங்களை தேட வேண்டாம். நாங்கள் இஸ்லாமிய நாட்டிற்கு வந்து விட்டோம். இங்கு நிரபராதிகளை அமெரிக்கா கொன்று குவிக்கிறது. எனவே அவர்களை பழிவாங்குவதற்காக ஐஎஸ் அமைப்புக்காக நாங்கள் எங்களை அர்ப்பணித்து விட்டோம். இதுகுறித்து பெற்றோரிடம் கூறி புரிய வைக்க வேண்டும். அவர்களையும் ஐஎஸ் அமைப்பிற்கு அழைத்து கொண்டு வரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை பார்த்து ஹபீசுதீனின் மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து கணவரின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரது பெற்றோர் காசர்கோடு எம்பி கருணாகரன், எம்எல்ஏ ராஜகோபாலன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயனிடமும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து உடனடியாக விசாரணை நடத்த கேரள டிஜிபி லோக்நாத் பெக்ராவுக்கு முதல்வர் உத்தரவிட்டார். உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காசர்கோடு மாவட்டம் திருக்கரிப்பூரை சேர்ந்த டாக்டர் இஜாஸ் என்பவர் தலைமையில் 16 பேரும் சிரியாவுக்கு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

கேரளாவில் இருந்து ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்தவர்கள், தமிழக எல்லையில் உள்ள நகரங்களைச் சேர்ந்தவர்கள். இதனால் தமிழகத்தில் இருந்து யாரும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேராமல் தடுக்க, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இணையதளங்களில் பரிமாறப்படும் தகவல்களை காவல் துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

கேரளாவில் இருந்து ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக கூறப்படுபவர்களில் திருவனந்தபுரம் ஆற்றுகால் பகுதியைச் சேர்ந்த பிடிஎஸ் மாணவி நிமிஷா என்ற பாத்திமாவும் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது. இவரது தாய் பிந்து. தனது மகளும் ஐஎஸ்சில் சேர்ந்ததாக நேற்று பத்திரிகைகளில் தகவல் வந்த பிறகுதான் அவருக்கு இது தெரியவந்துள்ளது.

இதுபோல் கொச்சியை சேர்ந்த ஒரு பெண்ணும் ஐஎஸ் அமைப்பில் இணைந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமாணவிகளை குறிவைத்து காதலித்து திருமணம் செய்வதோடு அவர்களை ஐ.எஸ் அமைப்பில் இணைத்து விடுகின்றனர்.

கேரளாவை சேர்ந்த 21 பேர் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உளவுத்துறையான ரா அதிகாரிகள் கேரளா வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இவர்கள் காசர்கோட்டிலும் மங்களூரிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மங்களூரில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கும் அமைப்பு செயல்படுவதாக விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

English summary
Kerala Chief Minister Pinarayi Vijayan told the State Assembly on Monday that 21 persons declared missing in the State are suspected to be in the camps of the Islamic State (IS) in Syria or Afghanistan, as per news reports. They include 17 persons from Kasargod and four from Palakkad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X