For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திரா புஷ்கரம் விபத்து பலி 29 ஆனது… ரூ.10 லட்சம் நிவாரணம்- பிரதமர் மோடி இரங்கல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ராஜமுந்திரி: ஆந்திர மாநிலத்தில் ராஜமுந்திரியில் நடைபெற்ற கோதாவரி மஹா புஷ்கரம் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. படுகாயங்களுடன் ஏராளமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். துயரகரமான இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

29 dead, several injured in stampede at Godavari Pushkaram festival in Andhra

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘கோதாவரி புஷ்கரம்' விழா ராஜமுந்திரியில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த ஆண்டு குரு பகவான் சிம்ம ராசியில் பிரவேசிப்பதால், இந்த விழா மகா கோதாவரி புஷ்கரமாக கொண்டாடப்படுகிறது.

மகா புஷ்கரம் விழா

இந்த மகா புஷ்கரம் விழா 144 ஆண்டுக்கு ஒரு முறைதான் வரும். இது ‘ஆதி புஷ்கரம்' என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விழா வரும் 25 ந்தேதி வரை 12 நாட்களுக்கு நடக்கிறது. இந்த நாட்களில் பக்தர்கள் ஆற்றில் நீராடுவார்கள். இதற்காக ஆந்திராவின் கிழக்கு, மேற்கு கோதாவரி மற்றும் தெலங்கானாவின் கம்மம், வாரங்கல் ஆகிய மாவட்டங்களில் கோதாவரி ஆற்றில் புனித நீராடுவதற்காக 262 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

29 dead, several injured in stampede at Godavari Pushkaram festival in Andhra

முதல்வர் வருகை

இந்நிலையில், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி அருகே உள்ள கோட்டகும்மம் பகுதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதியினர் நேற்று காலை 6.26க்கு புனித நீராடினர். இதனால் இப்பகுதியில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சுமார் 3 மணி நேரம் வரை கோட்டகும்மம் பகுதியின் முதல் நுழைவு வாயில் மூடப்பட்டது.

பக்தர்கள் தள்ளுமுள்ளு

காலை 9.15 மணியளவில் முதல்வர் சென்ற பிறகு, இந்த வாயில் திறக்கப்பட்டது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த வழியாக ஒரே நேரத்தில் முண்டியடித்துக் கொண்டு செல்ல முயன்றனர். இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் வயதான ஒரு பெண்மணி கீழே விழுந்தார்.

29 dead, several injured in stampede at Godavari Pushkaram festival in Andhra

கீழே விழுந்த பக்தர்கள்

பாட்டியை மீட்க சிலர் குனியவே அந்த நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் ஏராளமானோர் கீழே விழுந்தனர். இதனால் கீழே விழுந்தவர்களை மிதித்துக் கொண்டே ஆற்றுக்குள் ஓடினர். இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர்.

மீட்புப்பணிகள்

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் பொது மக்களும் மயக்கமடைந்தவர்களை உடனடியாக ராஜமுந்திரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

29 dead, several injured in stampede at Godavari Pushkaram festival in Andhra

பெண்கள் அதிகம்

கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களில் பெண்களே அதிகம் என்றும் இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இறந்தவர்களில் சிலரது உடல்கள் அடை யாளம் தெரியாததால், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆந்திரா முதல்வர் இரங்கல்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியில் இருந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். பின்னர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்த அவர், ராஜமுந்திரி அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

ரூ.10 லட்சம் நிவாரணம்

இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் பக்தர்கள் நெரிசலை தவிர்க்க அனைத்து வாயில்கள் வழியாகவும் சென்று புனித நீராடும்படி முதல்வர் கோரியுள்ளார். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

பிரதமர் மோடி இரங்கல்

ராஜமுந்திரியில் கூட்ட நெரிசலில் பக்தர்கள் பலர் பலியான சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "ஆந்திர சம்பவத்தால் மிகுந்த வேதனையடைந்தேன். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

English summary
Twenty nine people have died in a stampede during Godavari Pushkaram festival in Rajahmundry in Andhra Pradesh on Tuesday. Several others have been injured in the incident and the death toll is likely to rise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X