For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருமண உறவாக மலர்ந்த மாற்றுத் திறனாளி பெண்ணின் லிவ்-இன் உறவு #HerChoice

By BBC News தமிழ்
|

காதலிப்பது, நம்பிக்கையை உருவாக்குவது, ரிஸ்க் எடுப்பது இவையெல்லாம் மாற்றுதிறனாளி பெண்ணுக்கு மாறுபட்டதா?

நவீன இந்தியப் பெண்களின் வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் அவளது உண்மை கதையை, பிபிசியின் சிறப்புத் தொடரான #HerChoice-இல் மேலும் படியுங்கள், அவளது வார்த்தைகளில்...

லிவ்-இன் உறவில் இருக்கும் மாற்றுதிறனாளி பெண் #HerChoice
BBC
லிவ்-இன் உறவில் இருக்கும் மாற்றுதிறனாளி பெண் #HerChoice

சில சமயம், எனக்கு ஒரு கை இல்ல என்பதையே அவரு மறந்துடுவாரு. ''நீ எப்படி இருக்கியோ அத முதலில் நீ ஏத்துக்கிட்டா உன்ன சுத்தி இருக்குறவங்க உன்ன எளிதா ஏத்துப்பாங்க'' என்று அவர் அடிக்கடி என்கிட்டே சொல்லுவாரு. அவருக்கு உடலில் எந்த குறையும் இல்ல; அவர் ஒரு முழுமையான ஆண். அவரால எந்த பொண்ணையும் சுலபமா தன் பக்கம் ஈர்க்க முடியும்.

ஆனா அவர் என்கூட இருக்குறததான் விரும்பினாரு. கல்யாணம் ஆகாமலே ஒரே வீட்டுல நாங்க ஒன்னா வாழத் தொடங்கி ஒரு வருஷம் ஆகிடுச்சு. கல்யாணம் ஆகாமலேயே ஒன்னா வாழலாம்ன்னு முடிவு எடுக்குறது அவ்வளவு எளிதானது இல்ல.

என் திருமணத்த பத்தின என் அம்மாவின் கவலையத் தணிக்க ஒரு வரன் தேடும் இணையதளத்துல என் சுயவிவரத்த நான் பதிவு செஞ்சதுக்கு அப்புறம்தான் இது எல்லாமே ஆரம்பமாச்சு. எனக்கு இருபத்தி ஆறு வயசானதுனால, இதுதான் கல்யாணம் செய்வதுக்கு சரியான காலம்ன்னு என் அம்மா நெனச்சாங்க.

நான் குழந்தையா இருக்கும்போது ஒரு விபத்துல என் இடது கையை இழந்தேன். அதனாலதான் எனக்கு கல்யாணம் பண்ணுறதுல என் அம்மா மும்முரமா இருக்காங்கன்னு எனக்கு புரிஞ்சுது. ஒருநாள், வரன் தேடும் இணையதளத்துல இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்துச்சு. என்ன தொடர்புகொண்டவர் ஒரு இன்ஜினியர். வேற நகரத்த சேர்ந்தவரா இருந்தாலும் அவரும் என்ன மாதிரியே ஒரு பெங்காலிதான்.

ஆனா என்னால எதுவும் முடிவு பண்ண முடியல. அதனால நான் கல்யாணத்துக்கு தயாரில்லைன்னு அவருக்கு பதில் அனுப்பினேன். 'இருந்தாலும் பரவாயில்ல. நம்ம பேசலாம்' என்று அவர்கிட்ட இருந்து உடனடியாக ஒரு பதில் வந்துச்சு.

நான் ஒரு ஃபிளாட்டுல இரண்டு தோழிகள் கூட தங்கியிருந்தேன். அவர் தேவைக்கு பயன்படுத்திட்டு என்ன ஏமாத்திடுவாருன்னு அவங்க பயந்தாங்க. இதுக்கு முன்னாடியே இரண்டு பேர் என்ன அப்படித்தான் பயன்படுத்த முயற்சி பண்ணாங்க. அடுத்து வரப்போறவரும் அதையே பண்ணிடக்கூடாதுன்னு அவங்க நெனச்சாங்க.

உண்மையில நான் ஒரு புது உறவுக்கு தயாரில்ல. ஆனா தனியா வாழவும் எனக்கு விருப்பம் இல்ல. இந்த காரணத்துனாலதான் நான் அவர்கிட்ட தொடர்ந்து பேசினேன். அவரோட பெயர 'டைம்பாஸ்' என்று என் மொபைலில் சேவ் பண்ணேன்.

ஒரு நாள் நாங்க நேரில் சந்திக்கலாம்ன்னு முடிவு செஞ்சோம்.

லிவ்-இன் உறவில் இருக்கும் மாற்றுதிறனாளி பெண் #HerChoice
BBC
லிவ்-இன் உறவில் இருக்கும் மாற்றுதிறனாளி பெண் #HerChoice

எனக்கு ஒரு கை இல்லைன்னு நான் அவர்கிட்ட ஏற்கனவே சொல்லிருந்தும் முதல் முறையா என்ன நேரில் பார்க்க போகும் அவர் என்ன ரியாக்ஷன் கொடுப்பார் என்று நான் பயந்தேன்.

அது பிப்ரவரி மாசம்; அன்று லேசான குளிர் இருந்துச்சு. நான் ஆபிசுக்கு போட்டுகிட்டு போகும் உடையில இருந்தேன். ஐலைனரும் லிப்ஸ்டிக்கும் மட்டும்தான் அன்று நான் போட்டுருந்த மேக்கப்.

ரோட்டுல நாங்க பேசிக்கிட்டே நடந்து போயிட்டு இருக்கும்போது எங்களுக்கு இடையில நிறைய விஷயங்கள் ஒத்துப்போனது தெரிய வந்துச்சு. கொஞ்ச நாளில் நாங்க நண்பர்களாகிட்டோம்.

அவர் அதிகமா பேசமாட்டார். ஆனா என்ன ரொம்ப நல்ல பாத்துக்கிட்டாரு. நான் வீட்டுக்கு பத்திரமா போயிட்டேனான்னு பாத்துப்பாரு. அவருக்கு லேட் ஆனாலும் சில சமயம் என்ன வீட்டுல ட்ராப் பன்னிட்டு போவாரு. வேற வழி இல்ல, நான் தனியாத்தான் போய் ஆகணும்ன்னு ஒரு சூழ்நிலை வந்தா ராத்திரி பத்து மணிக்குள்ள வீட்டுக்கு போகணும்ன்னு சொல்லுவாரு.

நான் ஒரு நல்ல மனைவியா இருக்க முடியுமான்னு எனக்கு நிச்சயமா தெரியல. ஆனா ஒரு நல்ல கணவருக்கு இருக்கவேண்டிய குணங்கள் எல்லாமே அவர்கிட்ட இருக்கு. எங்க உறவு எதை நோக்கி போய்கிட்டு இருக்குன்னு எனக்கு தெரியல. ஆனா ஒருவருக்கொருவர் இந்த உறவை நேசிக்க ஆரம்பிச்சோம்.

ஒரு முறை எனக்கு உடம்பு சரியில்லாம போனப்போ அவர் எனக்கு மருந்துகள் வாங்கிக்கொடுத்தாரு; அதையும் அவரே ஊட்டிவிட்டாரு. அன்று தான் முதல் முறையா அவர் என் தோளில் கை போட்டுக்கிட்டாரு. அது ஒரு அற்புதமான நாள். அதுக்கு அப்புறம் நாங்க ஒன்னா கை புடிச்சுகிட்டு நடப்போம்; அதாவது என் வலது கைய அவரு புடிச்சுப்பாரு.

சில மாசத்துக்கு அப்புறம், என் ஃபிளாட்டுல என்கூட வசிக்கும் தோழிகளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அந்த ஃபிளாட்டுக்கு என்னால தனியா வாடகை கொடுக்க முடியல. அதே நேரத்துல அவர் குடியிருந்த வீட்டுக்கு பக்கத்துக்கு வீடு காலியாச்சு. உடனே நான் அந்த வீட்டுக்கு குடியேறிட்டேன்.

நெஜத்துல, நாங்க ஒன்னா ஒரே வீட்டுல வாழலன்னு இந்த சமூகத்துக்கு காட்டிக்கத்தான் இப்படி ஒரு திட்டம்.

ஆனா என் அம்மா என்ன பாக்க வீட்டுக்கு வந்தப்போ நாங்க ஒன்னாதான் இருக்கோம்ன்னு கண்டுபுடிச்சுட்டாங்க.

இப்போ ஒருவருக்கொருவர் இன்னும் நெருக்கமாகிட்டோம்.

வீட்டு வேலைகள் எல்லாத்தையும் எந்த கஷ்டமும் இல்லாம நான் செய்வேன் என்பத அவர் கண்கூடா பாத்ததும் என் ஊனத்த பத்தின கவலைகள் எல்லாமே காத்தோட கரைஞ்சுடுச்சு. அதுக்கு அப்புறம் நாங்க வேற வேலைல சேர்ந்தோம்; வீட்டையும் மாத்திட்டோம். இந்த முறை நாங்க தயாராகிட்டோம்.

லிவ்-இன் உறவு, பாலியல் ரீதியான தேவைகள மட்டும் பூர்த்தி செய்வதில்ல, ஒருத்தரோட மனச முழுசா புரிஞ்சுக்கவும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு என்பது எங்க ரெண்டு பேருக்கும் நல்லா தெரியும். நாங்க எப்பவும் ஒன்னா ஒத்துமையா இருப்போம், ஒருத்தர ஒருத்தர் ஏத்துக்கிட்டோம் என்பதற்கான அடையாளம் அது. இந்த காரணத்துனாலதான் எங்க மனசாட்சியும் இத ஏத்துக்கிச்சு.

எனக்கும் சரி அவருக்கும் சரி, சமைக்கவே தெரியாது. ஆனா கொஞ்சம் கொஞ்சமா நான் எல்லாமே கத்துக்கிட்டேன். என்ன பத்தி எனக்கிருந்த சந்தேகங்களும் தெளிவாச்சு.

நான் ரொமான்டிக்கான பொண்ணா இல்லைனாலும் ஒரு நல்ல மனைவியா இருக்க எல்ல தகுதியும் எனக்கு இருக்குன்னு தெரியவந்துச்சு. அவரும் இத புரிஞ்சுக்கிட்டாரு.

ஆனா அவரோட குடும்பத்தினர் கண்களுக்கு நான் மத்த பெண்கள விட திறமை கொறஞ்சவளா தெரிஞ்சேன். அவர் குடும்பத்துக்கு ஒரே பிள்ளை. என்ன பத்தி அவர் அம்மாகிட்ட அவர் சொன்னப்போ, ''இந்த மாதிரி பொண்ணுகூட நட்பு வெச்சுகுறது தப்பில்ல; ஆனா கல்யாணம் என்ற எண்ணத்தையெல்லாம் மறந்துடு'' என்று சொன்னங்க.

லிவ்-இன் உறவில் இருக்கும் மாற்றுதிறனாளி பெண் #HerChoice
BBC
லிவ்-இன் உறவில் இருக்கும் மாற்றுதிறனாளி பெண் #HerChoice

எல்லாரும் ஏன் இப்படி கற்பனை பண்ணிக்குறாங்க? அவங்க எண்ணம் என்ன சுட்டெரிக்க நான் என் அனுமதிக்கணும்? என் வாழ்கையையும் விருப்பங்களையும் நான் ஏன் வரையறை செய்யணும்?

ஒரு சராசரி பொண்ண மாதிரி எனக்கும் கனவுகள் இருக்கு. என்ன நல்லா புரிஞ்சுகுற ஒரு வாழ்க்கை துணை வேணும்ன்னு நானும் ஆசைப்பட்டேன்.

அவரோட பெற்றோர்கிட்ட என்ன ஃபோன்ல பேச வெச்சாரு; ஆனா நான் தான் அந்த ஊனமுற்ற பொண்ணுன்னு அவங்ககிட்ட சொல்லல.

முதலில் என் திறமைகள் பத்தி அவங்க தெரிஞ்சுக்கனும்ன்னு அவர் நினைச்சாரு. என் இடது கையை இழந்ததுல இருந்து, என்னால எல்லா பெண்கள மாதிரி எல்லா வேலைகளையும் செய்யமுடியும்ன்னு நிரூபிக்கவேண்டிய நிர்பந்ததுல இருந்தேன்.

இறுதியா அவங்க என்ன பாக்கவந்தப்போ, இதே பரிசோதனைய செஞ்சு பாத்தாங்க. ஒரு மனைவி செய்யவேண்டிய எல்லா வேலைகளையும் நான் செஞ்சத அவங்க கண்கூடா பாத்தாங்க.

காய்கறி வெட்டுவது, சமைப்பது, துணி துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது, வீட்டை சுத்தம் செய்வது என எல்லாத்தையும் ஒரே கையால என்னால செய்யமுடிஞ்சுது.

என்னோட ஊனம் என் திறமைகளுக்கு தடையில்ல என்பத அவரோட பெற்றோர் புரிஞ்சுகிடாங்க. எங்களுக்கு திருமணமாகி ஒரு வருஷம் ஆன பிறகும் எங்களுக்கு இடையில இருந்த அன்பு இன்னும் அதிகரிச்சுதான் இருக்கு.

என் குறைபாடு, எங்க காதலுக்கோ கல்யாணத்துக்கோ தடைக்கல்லா இல்ல. இப்போ, ஒரு குழந்தைய என்னால நல்ல வளர்க்க முடியுமான்னு ஒரு சின்ன சந்தேகம் இருக்கு. ஆனா அதுக்கான பதிலும் எனக்குள்ளதான் இருக்கு.

என்ன நானே நம்பினா, நிச்சயம் என்ன சுத்தி இருக்கவங்களும் நான் ஒரு நல்ல தாயா இருக்கமுடியும்ன்னு நம்புவாங்க!

(பிபிசி செய்தியாளர் இந்திரஜீத் கௌரிடம் பகிரப்பட்டு திவ்யா ஆர்யாவால் தயாரிக்கப்பட்ட வட இந்தியாவில் வசிக்கும் ஒரு பெண்மணியின் உண்மை கதை இது. அந்த பெண்ணின் அடையாளம் அவரது வேண்டுகோளின்படி பெயர் அறியப்படாமல் வைக்கப்பட்டுள்ளது)

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
சில சமயம், எனக்கு ஒரு கை இல்ல என்பதையே அவரு மறந்துடுவாரு. ''நீ எப்படி இருக்கியோ அத முதலில் நீ ஏத்துக்கிட்டா உன்ன சுத்தி இருக்குறவங்க உன்ன எளிதா ஏத்துப்பாங்க'' என்று அவர் அடிக்கடி என்கிட்டே சொல்லுவாரு. அவருக்கு உடலில் எந்த குறையும் இல்ல; அவர் ஒரு முழுமையான ஆண். அவரால எந்த பொண்ணையும் சுலபமா தன் பக்கம் ஈர்க்க முடியும்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X