For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை கார் விபத்து வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மும்பை: மது அருந்திவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி தேஷ்பாண்டே உத்தரவிட்டார். இது தவிர லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டியதற்காக 2 மாத சிறை தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி நடிகர் சல்மான்கான்,மும்பை பாந்திராவில் தனது நண்பர்களுடன், மதுபோதையில் வேகமாக கார் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் சாலையோரம் படுத்து தூங்கி கொண்டிருந்த நூருல்லா மெகபூப் செரீப் என்பவர் உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் சல்மான்கானின் கார் ஏறி இறங்கியதில், 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

ஆரம்பத்தில், இந்த வழக்கை விசாரித்த மும்பை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் பின்னர் விசாரணையை செசன்சு நீதிமன்றத்திற்கு மாற்றியது. அதன்படி, செசன்சு நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கக்கூடிய குற்றப்பிரிவின்கீழ் மறுவிசாரணை தொடங்கியது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் காயம் அடைந்த கலிம் முகமது பதான், முன்னா மலாய் கான், அப்துல்லா ராப் சேக், முஸ்லிம் சேக் மற்றும் சல்மான்கானின் பக்கத்து வீட்டுக்காரர் பிரான்சிஸ் பெர்னான்டஸ் மற்றும் சல்மான்கானின் போலீஸ் மெய்க்காவலர் ரவீந்திர பாட்டீல் உள்ளிட்ட பலர் நேரில் ஆஜராகி சாட்சி அளித்தனர்.

சல்மான்கான் மறுப்பு

சல்மான்கான் மறுப்பு

சல்மான்கானுக்கு எதிராக பலர் சாட்சி அளித்ததன் காரணமாக, இந்த வழக்கின் விசாரணை சூடுபிடித்தது. மேலும், விசாரணை இறுதிகட்டத்தை நெருங்கிய நிலையில், சல்மான்கானிடம் நீதிபதி தேஷ்பாண்டே விசாரித்தபோது, ‘‘சம்பவத்தின் போது நான் கார் ஓட்டவும் இல்லை, மது அருந்தவும் இல்லை. என்னுடைய டிரைவர் அசோக் சிங் தான் காரை ஓட்டினார்'' என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

கார் டிரைவர் சாட்சியம்

கார் டிரைவர் சாட்சியம்

இதைத்தொடர்ந்து டிரைவர் அசோக் சிங், நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது, நடிகர் சல்மான்கான் அளித்த வாக்குமூலத்துக்கு அவர் வலுசேர்க்கும் வகையில், விபத்துக்குள்ளான காரை நான் தான் ஓட்டினேன் என்று குறிப்பிட்டார்.

13 ஆண்டுகளுக்குப் பின்

13 ஆண்டுகளுக்குப் பின்

13 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கின் விசாரணை நடந்து வரும் வேளையில், திடீரென்று நீங்கள் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பதன் நோக்கம் என்ன? என்று நீதிபதி கேட்டதற்கு, இந்த வழக்கின் தன்மை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்று அசோக் சிங் பதிலளித்தார்.

தீர்ப்பு நாள்

தீர்ப்பு நாள்

அதன்பின்னர், சல்மான்கான் தரப்பு வக்கீல் ஸ்ரீகாந்த் சிவாடே மற்றும் அரசு தரப்பு வக்கீல் பிரகாஷ் காரத் ஆகியோருக்கு இடையே நடந்த காரசார வாதத்துக்கு பின்னர், இருவரது வாதமும் கடந்த மாதம் 21-ந் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, மே 6ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறுவதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், அன்றைய தினம் சரியாக காலை 11.15 மணிக்கு சல்மான்கான் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

மும்பை நீதிமன்றத்தில்

மும்பை நீதிமன்றத்தில்

அதன்படி, சல்மான்கான் மீதான கார் விபத்து வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்படுகிறது. இதையொட்டி, நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தீர்ப்பினை அறிந்துகொள்ள மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் சல்மான்கான் ஆஜரானார்.

சல்மான்கான் குற்றவாளி

சல்மான்கான் குற்றவாளி

இதனிடையே காலை 11.15 மணிக்கு தீர்ப்பை வாசித்த நீதிபதி சல்மான்கான் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். சம்பவ தினத்தன்று கார் ஓட்டிய சல்மான்கான் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். சல்மான்கானுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து தண்டனை குறித்த வாதங்கள் நடைபெற்றன. பின்னர் நீதிமன்றம் 45 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

5 ஆண்டுகள் சிறை

5 ஆண்டுகள் சிறை

பிற்பகல் 1.20 மணிக்கு நீதிபதி தேஷ்பாண்டே தண்டனை விவரத்தை அறிவிக்க தனது அறைக்கு வந்தார். ஆனால் அப்போது மின்சாரம் ரத்தானதால் அவர் தண்டனையை அறிவிப்பது தாமதமானது. சற்று நேரத்தில் மின்சாரம் வரவே, நீதிபதி தீர்ப்பை வாசித்தார். சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார். இது தவிர லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டியதற்காக 2 மாத சிறை தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

சல்மான் கான் கண்ணீர்

சல்மான் கான் கண்ணீர்

நீதிபதி தண்டனையை அறிவித்தபோது முகத்தில் சலனமில்லாமல் அமைதியாக தலையை குனிந்தபடி கேட்டார் சல்மான் கான். அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. சல்மான்கான் உறவினர்களும் கதறி அழுதனர்.

English summary
A sessions court here will pronounce its verdict on Wednesday in the 2002 hit-and-run case, in which actor Salman Khan is the accused.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X