ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் பாதிக்காதாம்.. மீண்டும் போராட்டத்திற்கு தயாராகிறது நெடுவாசல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் பாதிக்காது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் லோக்சபாவில் இன்று தெரிவித்தார். இதனால் கடும் கோபம் அடைந்துள்ள நெடுவாசல் மக்கள் மீண்டும் போராட்டத்திற்கு தயாராகி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது என்றும் விவசாயம் பாதிக்கப்படாது என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் லோக் சபாவில் கூறியுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் 22 நாட்கள் நெடுவாசலில் மக்கள் தொடர் போராட்டத்தை நடத்தினார்கள்.

மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தியதையடுத்து நெடுவாசல் மக்கள் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், அதே மாவட்டத்தில் வடகாடு, நல்லாண்டார்கொல்லை பகுதிகளில் போராட்டம் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

லோக் சபாவில் கேள்வி

இந்நிலையில், இன்று லோக் சபாவில் அதிமுக எம்பி பி.ஆர்.சுந்தரம் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பேசினார். அப்போது, நெடுவாசல் மக்கள் நடத்திய போராட்டம் குறித்தும் இந்த எரிவாயு திட்டத்தால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் மக்களின் அச்சத்தையும் தெரிவித்தார்.

இதுதான் பதில்..

இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் பாதிக்காது என்று பதில் அளித்தார். மேலும், எரிவாயு கிணறு அமைப்பதால் புதுக்கோட்டையில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் கூறினார்.

மக்களோடு சந்திப்பு

மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து, நெடுவாசல் விவசாயிகள் பிரதிநிதிகளை நாளை மறுநாள் சந்தித்து பேச உள்ளதாகவும் அமைச்சர் தர்மேந்திரா பிரதான் லோக் சபாவில் தெரிவித்தார்.

மக்கள் அதிர்ச்சி

ஹைட்ரோ கார்பன் குறித்து லோக் சபாவில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியுள்ளது நெடுவாசல் மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் உறுதி அளித்ததால்தான் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சர் இப்படி பேசுவதா என்று நெடுவாசல் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மீண்டும் போராட்டம்

திட்டத்தை மத்திய அரசு கைவிடும் என்று நெடுவாசல் மக்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், லோக் சபாவில் அமைச்சர் அளித்த விளக்கத்தால் மீண்டும் போராட்டத்தில் குதிக்க நெடுவாசல் தயாராகி வருகிறது. இந்தப் போராட்டம் முன்பு நடைபெற்ற போராட்டத்தை விட வீரியம் மிக்கதாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
Agriculture will not be affected by hydrocarbon, said Union Minister Dharmendra Pradhan in Lok Sabha.
Please Wait while comments are loading...