For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியில் நரேந்திர மோடி வீட்டை முற்றுகையிட்ட அன்புமணி, ஏ.கே.மூர்த்தி கைது

ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்த அனுமதிக்க கோரி பிரதமர் மோடியின் வீட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சரும் லோக்சபா எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பாக பேசி அவசர சட்டத்திருத்தம் செய்ய வலியுறுத்துவதற்காக அன்புமணி எம்.பி, டெல்லி சென்றிருந்தார்.

ஆனால் பிரதமரை சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து பிரதமர் வீடு முன்பு சாலையில் அமர்ந்து முன்னாள் அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, அன்புமணி ஆகியோர் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார், அன்புமணி மற்றும் ஏ.கே.மூர்த்தியை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்கள் போராட்டம் சென்னை மெரினா கடற்கரையை மையமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் 200 இடங்களிலும், தமிழர்கள் அதிகம் வாழும் 30க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. முந்தைய போராட்டங்கள் எப்படி வெற்றி பெற்றனவோ, அதேபோல் இந்த போராட்டமும் மிகப்பெரிய வெற்றி பெறும்; மாணவர்கள் வரலாறு படைப்பார்கள் என்பது உறுதி என்றார்.

டெல்லி வந்தது ஏன்?

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பிற கட்சித் தலைவர்களை சந்திப்பதற்காக நான் டெல்லி வந்திருந்தாலும் என் மனம் முழுவதும் மாணவர்கள் நடத்தும் போராட்டத்தின் மீது தான் உள்ளது.

மாணவர்கள் போராட்டம்

பாமகவின் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடக்கும் போராட்டங்களில் பங்கேற்றுள்ளனர். மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவிக்க மனது துடிக்கிறது. ஆனால், அரசியல் கட்சியினர் தங்கள் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்றும், அவ்வாறு பங்கேற்கச் சென்ற தலைவர்களை திருப்பி அனுப்பியதாலும் என் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு தார்மீக ஆதரவையும், பாராட்டுகளையும் வழங்கி வருகிறேன்.

மக்கள் பிரச்சினை

மக்கள் பிரச்சினைக்காக மாணவர்கள் போராட வேண்டும் என்பது தான் பாமகவின் நீண்ட நாள் விருப்பம். இதைத் தான் பாமக நிறுவனர் ராமதாசும், நானும் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். பாமக எதிர்பார்த்த மாற்றம் இப்போது ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான மற்ற விஷயங்கள் இனி தானாக நடக்கும்.

ஜனவரி 26ல் ஜல்லிக்கட்டு

ஜனவரி 26ல் ஜல்லிக்கட்டு

மாணவர்களின் தன்னெழுச்சியான இப்போராட்டத்தை மதித்து தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வசதியாக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும். அடுத்த இரு நாட்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்தால் வரும் 26ஆம் தேதி குடியரசு நாள் அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாமக சார்பில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகிய போட்டிகள் தடையை மீறி அமைதியாக நடத்தப்படும். இப்போட்டிகளில் மாணவர்களும், இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று அன்புமணி கூறினார்.

English summary
Former Union health minister and Patali Makkal Katchi loksabha MP Anbumani Ramadoss under arrest by Delhi Police on charges of dharna infront of the PM house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X