For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்டிடிவி யிலிருந்து விலகினார் பர்கா தத்!

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர்.மணி

இந்தியாவின் முன்னணி தொலைக் காட்சி பெண் செய்தியாளர் பர்கா தத் என்டிடிவி செய்தி தொலைக் காட்சியிலிருந்து விலகி விட்டார்.

1971 ல் பிறந்த பர்கா தத் கல்லுரி படிப்பை முடித்தவுடனேயே 1995 ல் என்டிடிவி யில் பணிக்குச் சேர்ந்தார். இவருடைய தந்தை எஸ்.பி. தத் ஏர் இந்தியாவில் உயரதிகாரியாக பணியாற்றினார். தாய் பிரபா தத் செய்தியாளர். ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றினார். 'என்னுடைய பத்திரிகை துறை திறமை என்பது என் தாயிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது' என்று வெளிப்படையாகவே பர்கா தத் சொல்லுவார். இவருடைய தங்கை பாஹர் தத் தற்போதும் வேறோர் முன்னணி செய்தி நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

Barkha Dutt exits from NDTV

1995 ல் என்டிடிவி யில் பர்கா தத் சேர்ந்த காலகட்டத்தில் அந் நிறுவனம் தூர்தர்ஷனுக்கு வாரம் ஒரு முறை செய்திகளை, அதுவும் உலக செய்திகளை தரும் நிறுவனமாகவே இருந்தது. The World This Week என்ற அந்த நிகழ்ச்சி மிகவும் பிரசித்திப் பெற்றது. வெள்ளிக் கிழமைகளில் இரவு 10 மணிக்கு ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும். பின்னர் ஸ்டார் நியூஸ் சேனலுடன் என்டிடிவி ஒப்பந்தம் செய்து கொண்டது. 1998 ல் தனியாக சேனலாக வரத் துவங்கியது, 1999 கார்கில் யுத்தத்தின் போது போர் முனையில் பர்கா தத் கொடுத்த செய்திகள் மிகவும் பிரசித்திப் பெற்றவை. இதே போன்று இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 1999 டிசம்பரில் ஆப்கானிஸ்தானின் காந்தஹாருக்கு கடத்தப்பட்ட போதும் பர்கா தத் தின் செய்தி சேகரிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

2002ம் ஆண்டு குஜராத் இனக் கலவரங்களின் போது பர்கா த த் என்டிடிவி சார்பாக செய்தி சேகரிக்கச் சென்றார். கலவரக் காரர்களையும், கொல்லப் பட்டவர்களையும் ஹிந்துக்கள் என்றும் முஸ்லீம்கள் என்றும் அவர் வர்ணனை செய்தது கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. காஷ்மீர் விவகாரத்தில் தனியான ஆர்வம் கொண்ட பர்கா தத் இடைவிடாமல் அம் மாநிலத்தின் பிரச்சனை பற்றி தொடர் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். "பர்கா தத்தின் மதச் சார்பற்ற தன்மை காஷ்மீர் பண்டிட்களின் உண்மையான துயரை பார்க்க விடாமல் அவரது கண்களை மறைக்கிறது,'' என்ற குற்றச்சாட்டும் அவர் மீது எழுந்தது.

2008 ம் ஆண்டு மும்பை தாக்குதல்களின் போது பர்கா தத் செய்திகளை வழங்கிய விதம் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. பர்கா ஒருவிதமான நாடகத் தன்மையுடன் செயல்படுகிறார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. 'தி நியூயார்க் டைம்ஸ்' போன்ற பத்திரிக்கைகள் பர்கா தத்தின் செயல்பாடுகள் இந்திய பார்வையாளர்களில் ஒரு சாரராரிடம் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருப்பாகக் கூறின. இந்த விவகாரத்தில் பர்காதத்தின் பத்திரிகையாளர் பணி பற்றி சைதன்ய குண்டே என்பவர் ஒரு பிளாக் எழுதினார். அதில் கோபமடைந்த தத் அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதன் காரணமாக அந்த பிளாக் அகற்றப்பட்டது.

2010 ம் ஆண்டுதான் மிகப் பெரிய சிக்கலில் பர்கா தத் மாட்டிக் கொண்டார். டாடா குழுமத்தின் நீரா ராடியா வுடன் அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்கள் 'அவுட்லுக்', 'தி ஓப்பன்' போன்ற ஆங்கில வார இதழ்களில் கசிந்தன. இதில் திமுக எம் பி கனிமொழிக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுப்பது சம்மந்தமாக காங்கிரஸ் கட்சியில் சிலருடன் பர்கா தத் பேசும் உரையாடல்களும் மாட்டிக் கொண்டன. 2ஜி ஊழல் வழக்கு உச்சத்திற்குப் போய்க் கொண்டிருந்த சமயம் அது. 2009 மக்களவைத் தேர்தல்களுக்குப் பிறகு திமுக வில் யார் யார் அமைச்சர்கள் ஆகலாம் என்ற விவாதம் நடைபெற்ற சமயம் அது. அமைச்சரவை முடிவாவதற்கு முன்பு டில்லி காங்கிரஸ் உயர் தலைவர்களுடன் பர்கா தத் கனிமொழி சார்பாக பேசியது கடுமையான சர்ச்சையை கிளப்பியது. நீரா ராடியாவுடனும் பர்கா தத் இது பற்றி உரையாடியது பெரும் புயலை கிளப்பியது.

நவம்பர் 30, 2010 இரவு 10 மணிக்கு என்டிடிவி இது தொடர்பாக ஒரு மணி நேரம் ஒரு நிகழ்ச்சி நடத்தியது. இதில் என்டிடிவி யில் பணி புரியாத நான்கு பத்திரிகையாளர்கள் பர்கா தத்தை குறுக்கு விசாரணை செய்தனர். 'ஒருவருக்கு அமைச்சர் பதவி வாங்கித் தருவது போன்ற காரியங்களில் ஒரு பத்திரிகையாளர் ஈடுபடலாமா? இது வரம்பு மீறிய செயல் ஆகாதா?' என்றெல்லாம் கேட்டு, பர்கா தத்தை நார் நாராக கிழித்தனர். ஒரு கட்டத்தில் பர்கா தத் ''நான் என்னுடைய கணிப்பில் தவறு செய்து விட்டேன். ஆனால் நான் உண்மையில், நடைமுறையில் எந்த தவறும் செய்யவில்லை. 'It was an error of judgment' என்று கூறிய போது ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.

காங்கிரஸ் கட்சியின் அடியாள், சோனியா காந்தியின் கையாள் என்பதுதான் பர்கா தத் மீது பாஜக வினர், குறிப்பாக சங் பரிவாரத்தினர் வைக்கும் கடுமையான குற்றச் சாட்டாகும். 2008 ம் ஆண்டு பர்கா தத்துக்கு பிரதமர் மன்மோஹன் சிங் பத்ம ஸ்ரீ விருது வழங்கினார். 2004 ம் ஆண்டு சுனாமி சம்மந்தப்பட்ட செய்தி சேகரிப்புக்காக இந்த விருது வழங்கப் பட்டது. பர்கா தத்துக்கு எதிராக மிகப் பெரியளவில் ஒருங்கிணைந்த தாக்குதலை சங் பரிவாரத்தினர் சமூக வலைதளங்களில் மேற்கொண்டனர். மிக கடுமையாக, ஆபாசமான தாக்குதல்களுக்கு பர்கா தத் ஆளானார். இதன் காரணமாக சிலர் மீது அவதூறு வழக்குகளையும் பர்கா தத் தாக்கல் செய்தார்.

2015 பிப்ரவரியில் என்டிடிவி யின் குரூப் எடிட்டர் பதவியிலிருந்து விலகி, கன்சல்டிங் எடிட்டராக பொறுப்பேற்றார். இவரது 'வீ தி பீப்பிள்' என்ற ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி மிகவும் பிரசித்திப் பெற்றது. சமீப காலமாக என்டிடிவி நிர்வாகத்துக்கும் பர்கா தத்துத்குமான இடைவெளி அதிகரித்து வந்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய 'சர்ஜிகல் ஸ்டிரைக்' எனப்படும தாக்குதல் பற்றிய விஷயத்தில் மோதல் உச்சத்துக்குப் போனதாகக் கூறப்படுகிறது.

'சர்ஜிகல் ஸ்டிரைக்' சம்மந்தமாக முன்னாள் உள்துறை அமைச்சர் ப சிதம்பரத்துடன் பர்கா தத் ஒரு பேட்டியை எடுத்திருந்தார். அதில் 'சர்ஜிகல் ஸ்டிரைக்' என்ற ஒன்று நடக்கவேயில்லை என்று ப சிதம்பரம் மறுக்க முடியாத ஆதாரங்களுடன் நிறுவியிருந்தார். இந்த நிகழ்ச்சி பற்றிய ஒரு 'ப்ரோமா'வும் 24 மணி நேரமும் சேனலில் ஓடியது. ஆனால் திடீரென்று இந்த பேட்டி ரத்து செய்யப்பட்டது. காரணம் மோடி அரசை பகைத்துக் கொள்ள என்டிடிவி நிறுவனம் விரும்பவில்லை. ஏற்கனவே என்டிடிவி க்கும் மோடி அரசுக்குமான பகை ஊரறிந்த ஒன்றுதான். நவம்பர் 7 ஃ ம் தேதி என்டிடிவி யின் ஒரு நாள் ஒளிபரப்பை நிறுத்தவும் மத்திய அரசு முடிவு செய்திருந்த நேரம் அது. ஆகவே மோடியை மேலும் பகைத்துக் கொள்ள விரும்பாத என்டிடிவி நிர்வாகம் சிதம்பரத்தின் பேட்டியை ரத்து செய்து விட்டது.

"இது பர்கா தத்தை அதிகப் படியாகவே கோபமூட்டி விட்டது. மற்ற ஊடகங்களைப் போன்றே என்டிடிவி யிலும் மோடி க்கு எதிரான போக்கு வேகமாக குறைந்து கொண்டே வருவதை அவர் உணர்ந்து கொண்டார்,'' என்கிறார் என்டிடிவி யில் நீண்ட நாட்கள் பணியாற்றும் செய்தியாளர் ஒருவர்.

ஜெயலலிதா மரணத்தின் போதும் பர்கா தத்தின் பெயர் அடிபடத் துவங்கியது. ஜெ மரணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டியின் மகள்களில் ஒருவரான சங்கீதா ரெட்டி பர்கா தத்துக்கு எழுதிய ஒரு ஈ மெயில் பரவலாகப் பேசப் பட்டது. இந்தக் கடிதத்தில் சங்கீதா ரெட்டி இவ்வாறு கூறியிருக்கிறார்; ''ஜெ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட போதே அவருக்கு நீண்ட காலமாக அவருடைய சர்க்கரை நோய்க்கு தவறான மருந்துகள் கொடுக்கப் பட்டதைக் கண்டு பிடித்தோம்''. இந்த ஈ மெயில் என்டிடிவி ஊழியர்களிடம் ஜெ இறந்த அன்று அனைவரது பார்வைக்குப் வைக்கப் பட்டு பின்னர் அகற்றப் பட்டிருக்கிறது.

தமிழ்நாடு சம்மந்தப்பட்டவர்களிடம் பர்கா தத் நடத்திய கடைசி பேட்டி நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர் தனுஷூடன் எடுத்த பேட்டிதான். ஐஸ்வர்யா எழுதி விரைவில் வெளி வரவிருக்கும் புத்தகம் பற்றிய கலந்துரையாடல் இது. இந்தியாவின் புகழ் பெற்ற மனிதர்களின் மகள்களுடனான பேட்டி என்ற தலைப்பில் இந்த பேட்டி நடத்தப்பட்டது. ஐஸ்வர்யா ராயுடன், நடிகர் அமிதாப் பச்சனின் மகள் ஷ்வேதா பச்சன் நந்தாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஏற்கனவே தனியாக, பத்திரிகையாளர் சேகர் குப்தாவுடன் சேர்ந்து ஒரு மீடியா நிறுவனத்தை நடத்தி வரும் பர்கா தத் விரைவில் புதிய, புதிய செய்தி வடிவங்களை, கருத்தாக்கங்களை இந்திய ஊடகத்துறைக்கு கொண்டு வரவிருப்பதாகச் சொல்லுகிறார். இதற்கான பெரியளவிலான நிதி திரட்டல்களும் நடந்து கொண்டிருப்பதாக பர்கா தத் துக்கு நெருக்கமானவர்கள் சொல்லுகின்றனர்.

ஆணாதிக்கம் மிகுந்த இந்திய மீடியா துறையில், கடந்த 20 ஆண்டுகளில் பர்கா தத் சாதித்துக் காட்டியிருக்கிறார். குறைகளும், சர்ச்சைகளும் உண்டுதான். ஆனாலும் போட்டிகள் மலிந்த இந்திய ஊடகத் துறையில் பர்கா தத்தின் சாதனை இந்த துறையில் ஜொலிக்க விரும்பும் ஏராளமான இளம் பெண்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றுதான்!

English summary
Known Journalist Barkha Dutt has been resigned from leading media house NDTV on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X