For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சமஸ்கிருத திணிப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் அதிரடி! கூடுதல் பாடமாகவே தொடர உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிப்பாடத்தை உடனடியாக ரத்து செய்து விட்டு அதற்குப் பதிலாக சமஸ்கிருதப் பாடத்தைக் கற்றுத்தரும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் இடைநிலை வகுப்புகளில் மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதல்மொழியாக ஆங்கிலமும், இரண்டாவதாக பிராந்திய மொழியும், மூன்றாவதாக சமஸ்கிருதம் அல்லது ஏதேனும் ஒரு நவீன இந்திய மொழியும் கற்றுத்தரப்பட்டு வந்தன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டு ஏதேனும் ஒரு வெளிநாட்டு மொழியை கற்பிக்க முந்தைய மத்திய அரசு முடிவெடுத்தது.

Centre confirms in SC affidavit: For KV, Sanskrit compulsory third language

இதையடுத்து 2011-12 ஆம் கல்வியாண்டிலிருந்து மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்திற்குப் பதிலாக வெளிநாட்டு மொழி அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாத நிலையில், கடந்த 27.10.2014 அன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தலைமையில் நடைபெற்ற கேந்திரிய வித்யாலயா சங்காதன் ஆளுனர்கள் வாரியத்தின் 99-வது கூட்டத்தில் ஜெர்மன் உள்ளிட்ட அன்னிய மொழிப் பாடங்களை ரத்து செய்துவிட்டு அவற்றுக்குப் பதிலாக முன்பிருந்தவாறு சமஸ்கிருதம் அல்லது ஏதேனும் ஒரு நவீன இந்திய மொழியை கற்றுத்தர வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் சமஸ்கிருதப் பாடத்தை அறிமுகம் செய்யவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இம்முடிவுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் ஸ்மிரிதி இராணி ஆணையிட்டார்.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. நாடுமுழுவதும் உள்ள 500 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6-ஆம் வகுப்பில் இருந்து 8-ஆம் வகுப்பு வரை படித்து வரும் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏற்கனவே படித்து வரும் ஜெர்மன் மொழிக்கு பதிலாக புதிதாக சமஸ்கிருதம் மொழியை படிக்க வேண்டியிருக்கும் என்பதால் பெற்றோர்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டது. மத்திய அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், ''கல்வியாண்டில் இடையில், பல மாதங்கள் பாடங்கள் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வுக்கு தயார் செய்துகொள்ளும் இந்த இடைப்பட்ட காலத்தில் பாடத்திட்டத்தில் உள்ள மொழியை மாற்றும் முடிவை கேந்திரிய வித்யாலயா சங்காதன் அமைப்பு எடுத்தது தவறானது. இந்த முடிவானது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களைக் கலந்து ஆலோசிக்காமலேயே எடுக்கப்பட்ட அவசரமான முடிவாக உள்ளது. அதனால், இதை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஏ.கே.சிக்ரி அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "நடப்புக் கல்வி ஆண்டில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழி கற்பித்தலை தொடர்வதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்" என்றனர்.

இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல், "ஜெர்மன் அரசு ஆதரவுடன் இயங்கும் மேக்ஸ்முல்லர் பவன் நிர்வாகத்துடன் கேந்திரிய வித்யாலயா ஒப்பந்தம் செய்துகொண்டது சட்டப்படி செல்லாது. எனவே அவ்வாறு தொடர முடியாது" என்றார்.

மேலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்பில் இருந்து 8 ஆம் வகுப்புவரை சமஸ்கிருதம் மூன்றாவது மொழியாக கற்றுத்தரப்படும் என்றும், இதுகுறித்து மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்வதற்கு அனுமதி வேண்டும் என்றும் கோரினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "உங்கள் தவறுகளுக்கு மாணவர்களை ஏன் தண்டிக்கிறீர்கள்" என கடிந்து கொண்டனர். "சமஸ்கிருதத்தை மூன்றாவது பாடமாக கற்றுக்கொடுக்க வேண்டாம். அதை ஒரு கூடுதல் பாடமாக வைத்துக்கொள்ளுங்கள். ஜெர்மன் மொழியே 3வது பாடமாக தொடர வேண்டும்" என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், கேந்திரிய வித்யாலா பள்ளிகளில் சமஸ்கிருத பாடத்தை அறிமுகப்படுத்துவதை அடுத்த கல்வி ஆண்டுக்கு ஒத்திவைப்பதில் தனது நிலைப்பாட்டை 4 வாரங்களுக்குள் தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

English summary
Sanskrit will be the compulsory third language from Class VI to Class VIII in Kendriya Vidyalayas but the syllabus and marks awarded in the current session will be that of an entry-level course to avoid “undue stress” on students, according to an affidavit submitted Thursday by the Centre to the Supreme Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X