தண்டனை பெற்றவர்களுக்கு வாழ்நாள் தடைவிதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பரிந்துரை!!

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு வாழ்நாள் தடைவிதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனால் சசிகலா உள்ளிட்டோருக்கு சிக்கல் ஏற்படும் என தெரிகிறது.

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் ஆன சசிகலா முதல்வாராக திட்டமிட்டார்.

இதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்த அவர், பதவியேற்க வசதியாக சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் அதற்கான பணிகளை செய்ய உத்தரவிட்டார். பதவியேற்பு விழாவுக்கான பணிகளும் ஜரூராக நடைபெற்றன.

சசிக்கு மொத்தமாக 10 வருஷம்

ஆனால் அதற்குள் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பேரிடியாக வர பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. 4 ஆண்டுகள் சிறைவாசம், 6 ஆண்டுகள் தடை என 10 ஆண்டுகள் சசிகலாவால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.

பொதுநல வழக்கு

இந்த நிலையில், தண்டனை பெற்ற குற்றவாளிகள் வாழ்நாள் முழுவதும் போட்டியிட தடை விதிக்கக்க வேண்டும் என்று கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது குற்றவழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் பரிந்துரை

இதற்கு ஒப்புதல் தெரிவித்து தண்டனை பெற்ற குற்றவாளிகள் வாழ்நாள் முழுவதும் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை உச்சநீதிமன்றம் ஏற்றால் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று சிறை சென்றவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.

சசிகலாவுக்கு சிக்கல்

தேர்தல் ஆணையத்தின் இந்த பரிந்துரை சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா உள்ளிட்டோருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உள்ளது.

உச்சநீதிமன்றம் ஏற்றால்..

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை உச்சநீதிமன்றம் ஏற்கும் பட்சத்தில் அவர் வாழ்நாளில் தேர்தலில் போட்டியிடவே முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Election commission proposed to supreme court to life time ban for criminals in Election. If supprme court accept this then Sasikala can not contest in election.
Please Wait while comments are loading...