For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவோடு இணைய விரும்பும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்கிட்!

By Shankar
Google Oneindia Tamil News

மும்பை: ஜம்மு காஷ்மீரின் தலைப் பகுதியாக உள்ள கில்கிட் - பால்டிஸ்தான் பகுதி மக்கள் இந்தியாவுடன் இணைந்திருக்க விரும்புவதாக அப்பகுதியைச் சேர்ந்த ஆய்வு நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கிரீடமாக உள்ள ஜம்மு காஷ்மீர், நாடு விடுதலையடைந்ததிலிருந்தே பெரும் பிரச்சினையாகத் திகழ்கிறது.

Gilgit Baltistan would prefer India to Pakistan

இந்த மாநிலத்தை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் அல்லது தனி நாடாக்க வேண்டும் என்று பிரிவினைவாத அமைப்புகள் போராடி வருகின்றன.

பிரிவினைவாதக் கொள்கை கொண்ட 26 அரசியல் கட்சிகளையும், சமூக அமைப்புகளையும் ஒன்றிணைத்து கடந்த 1993-ஆம் ஆண்டு ஹுரியத் மாநாட்டு அமைப்பை உருவாக்கினர்.

பிரிவினைவாதத்தை முன்னிறுத்தி பல்வேறு போராட்டங்களை அந்த அமைப்பு நடத்தி வருகிறது.

ஹுரியத் மாநாட்டு அமைப்பின் பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான சையது அலி ஷா கிலானி, கடந்த புதன்கிழமை டெல்லியிலிருந்து ஜம்மு-காஷ்மீர் சென்றபோது, அவரை வரவேற்க பாகிஸ்தான் கொடிகளை கையில் ஏந்தியபடி அவரது ஆதரவாளர்கள் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு, இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள ஜம்மு-காஷ்மீரை பிரித்தே ஆக வேண்டும் என்ற கொள்கையுடன் பிரிவினைவாதிகள் செயல்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தானில் உள்ள ஒரு பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்ற புதிய கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

Gilgit Baltistan would prefer India to Pakistan

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது கில்கிட்-பால்டிஸ்தான். 1947-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, இந்தப் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து இணைத்துக் கொண்டது. சுமார் 72,971 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பகுதியில், 20 லட்சம் பேர் வசிப்பதாக 2013-ஆம் ஆண்டு மக்கள் தொகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

7 மாவட்டங்கள், 33 பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய இந்தப் பகுதிதான், இந்தியாவுடன் இணைய தற்போது விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்தக் கருத்தை, இந்தியா வந்திருந்த கில்கிட்-பால்டிஸ்தான் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் செங்கே ஹஸ்னன் சேரிங் தெரிவித்துள்ளார். கில்கிட்-பால்டிஸ்தான் பகுதி இந்தியாவுடன் இணைய விரும்புவதாகவும், ஆனால் அதற்கு இந்திய அரசும் மக்களும் ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மும்பையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கில்கிட்-பால்டிஸ்தானை பாகிஸ்தான் அரசு, தனது காலனி ஆதிக்கப் பகுதியாகக் கருதுகிறது; அங்கு உயர்கல்வி கற்பதற்கான எந்த வசதிகளும் இல்லை; அடிப்படை உரிமைகள் குறித்து சட்டரீதியாக யாரேனும் கேள்வி எழுப்பினால்கூட, தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது' என்று தெரிவித்துள்ளார்.

கில்கிட்-பால்டிஸ்தானை சர்ச்சைக்குரிய பகுதியாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. எனவே எங்களை அந்நாட்டின் குடிமக்களாகக் கருத வேண்டாம் என்கிறார் செங்கே ஹஸ்னன். அங்கு வசிக்கும் மக்கள் சுதந்திரமாக வாழ நினைப்பதாகவும், அதன் காரணமாக இந்தியாவுடன் இணையவே அவர்கள் விரும்புவதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். கார்கில் எல்லையைத் திறந்து, கில்கிட் மக்கள் இந்தியாவில் வாழும் அவர்கள் உறவினரைச் சந்திக்க இந்தியா அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

வரும் ஜூன் மாதத்தில் அப்பகுதியில் தேர்தல் நடத்த பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது சட்டவிரோதமாக நடத்தப்படும் தேர்தல் எனக் குற்றம்சாட்டியுள்ள சேரிங், அதுதொடர்பாக உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதே தன்னுடைய இலக்கு எனத் தெரிவித்துள்ளார். இந்திய மண்ணில் பாகிஸ்தான் கொடியுடன் ஊர்வலம் சென்ற பிரிவினைவாதத் தலைவர் மஸரத் ஆலமை, வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary
Senge Hasnan Sering — activist and president of the Institute for Gilgit Baltistan Studies (IGBS) demanded that India intervene in the violation of human rights in PoK and open the Kargil border to ensure that divided families meet their ancestors in India. Gilgit Baltistan would prefer India to Pakistan’
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X