For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குறைந்தவிலை, நிறைந்த தரம்.. பெங்களூர் ஹெல்மெட் ஷோரூம்களில் தமிழர்கள் கூட்டம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூர் ஹெல்மெட் விற்பனை கடைகளில் அப்படி ஒரு பரபரப்பு.. குடோனுக்கும், ஷோரூமுக்குமாக கடை ஊழியர்கள் வேர்க்க வியர்க்க ஓடிக் கொண்டுள்ளனர். எப்போதோ ஒரு கஸ்டமர் வரும் ஹெல்மெட் ஷோரூம்களில் ஏன் இந்த களேபரம். எதற்காக இந்த ஓட்டம்..

இத்தனைக்கும் காரணம், தமிழ்நாட்டு கட்டாய ஹெல்மெட் சட்டம்தான். இது என்னடா, பனை மரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்துக்கு வலிக்குமா என்று நீங்கள் சந்தேகப்பட்டலாம். தமிழக ஹெல்மெட் சட்டத்துக்கும், கர்நாடக தலைநகர் பெங்களூர் ஹெல்மெட் கடைகளில் விற்பனை சூடு பறக்கவும் என்ன தொடர்பு?

பெங்களூரில் ஒரு புதுப்பேட்டை

பெங்களூரில் ஒரு புதுப்பேட்டை

தொடர்பு இருக்கிறது என்கிறார்கள், பெங்களூர் ஹெல்மெட் கடைக்காரர்கள். பெங்களூர் சாந்திநகர் அருகேயுள்ள, லால்பாக் சாலை கிட்டத்தட்ட சென்னை புதுப்பேட்டை மாதிரிதான். இங்கு வாகனங்கள் தொடர்புடைய அத்தனை ஸ்பேர் பார்ட்சும் கிடைக்கும். ஹெல்மெட்டுக்கான மொத்த விற்பனை கடைகளும் இங்கு ஏராளம், விலையோ தாராளம். இதுபோதாதா பக்கத்து மாநில தமிழனுக்கு. வண்டி பிடித்து குவிந்துவிட்டார்கள் லால்பாக் ரோட்டில்.

கம்மி ரேட்

கம்மி ரேட்

"பாதுகாப்பு காரணத்திற்காக, நாங்கள் விற்பது முழுக்க, ஐஎஸ்ஐ முத்திரை கொண்ட ஹெல்மெட்டுகள் மட்டுமே. இப்போதெல்லாம் தமிழ்நாட்டு வாடிக்கையாளர்கள் ஏகப்பட்ட பேர் எங்கள் கடைக்கு வருகின்றனர். அவர்களின் முதல் கேள்வியே, 'சார்.. உங்க கடையில ஹோல்சேல் ரேட்டுக்கு ஹெல்மெட் கிடைக்குமா?' என்பதுதான். பெரும்பாலானோர் விலை குறைந்த ஹெல்மெட்டையே தேடுகின்றனர்" என்கிறார் பாலாஜி ஹெல்மெட் பேலஸ் உரிமையாளர் தியாகராஜலு.

சப்ளை குறைந்துவிட்டதே

சப்ளை குறைந்துவிட்டதே

"எங்கள் கடைக்கு தமிழில் பேசியபடி வரும் கஸ்டமர்கள், ரூ.500-1000 இடைப்பட்ட ரேஞ்சிலான ஹெல்மெட்டுகளை விரும்பி கேட்கின்றனர். குறைந்த விலை ஹெல்மெட்டுகளுக்கான தேவை அதிகரிப்பால், சப்ளை குறைந்துவிட்டது. தமிழகத்திலுள்ள தங்களது சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்களுக்காக ஹெல்மெட் வாங்க பெங்களூர் வாழ் தமிழர்களும் பெருமளவில் வருகின்றனர்" என்கிறார் ஹெல்மெட் பேலஸ் உரிமையாளர் ரகு.

11 வருடங்கள் பிறகு

11 வருடங்கள் பிறகு

பெங்களூரில் 2004ம் ஆண்டு முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த காலகட்டத்தில் நகரின் ஹெல்மெட் கடைகளில் கூட்டம் அலைமோதியது. 11 வருடங்கள் பிறகு இப்போதுதான், ஹெல்மெட் ஷோரூம்கள் அதே அளவு கூட்டத்தை சந்திக்கின்றன. முன்பெல்லாம், நாளொன்றுக்கு, 10-15 ஹெல்மெட்டுகள் விற்பனையான கடைகளில் இப்போது 300 விற்கிறதாம். கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகம் விசிட் அடிக்கிறார்கள். சில நேரங்களில் சேலத்தில் இருந்தும் வருகிறார்கள்.

ஏன் பெங்களூர்..

ஏன் பெங்களூர்..

தமிழ்நாட்டில், ஹெல்மெட்டுகள் பல வரைட்டிகளில் கிடைப்பதில்லை. கட்டாய சட்டத்தால், ஹெல்மெட் விலையும் தாறுமாறாக உள்ளது. உண்மையான ஐஎஸ்ஐ முத்திரை உள்ள ஹெல்மெட்டுகளை போலவே அங்கு போலிகளும் அதிகம் நடமாடுகின்றன. இவை அனைத்துக்கும் மாற்றாகவே பெங்களூரை நாடுகின்றனர் தமிழக வாகன ஓட்டிகள். ஆனால் தேவை அதிகரிப்பால், இப்போது பெங்களூர் ஹெல்மெட் ஷோரூம்களிலும் விலை கணிசமாக உயர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Helmet-selling stores in Bengaluru are on a rise after neighbouring Tamil Nadu has made helmets mandatory for two-wheeler riders as well as pillion riders from July 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X