பசுவிற்கு வலிக்கிறது என்பதற்காக பால் கறக்காமலா இருக்கிறோம்.. ஜல்லிக்கட்டு வழக்கில் அனல் பறந்த வாதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பசுவிற்கு வலிக்கிறது என்பதற்காக பால் கறக்காமலோ, குதிரைக்கு வலிக்கிறது என்பதற்காக குதிரை பந்தையங்களையோ நடத்தாமல் விடுவதில்லை எனும்போது, காளைக்கு வலிக்கிறது என்று கூறி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பது நியாயமில்லை என மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வலுவான வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஜல்லிக்கட்டு நடத்த 2014ம் ஆண்டு மே மாதம் தடை விதித்தது. தமிழக அரசின் வற்புறுத்தலால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஜனவரி 8ம் தேதி அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது.

Jallikattu case hearing by Supreme court

ஆனால், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கை ஏற்று, சுப்ரீம் கோர்ட்டு ஜனவரி 14ம் தேதி ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்தது.

2014ம் ஆண்டில் ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹித்டன் நாரிமன் ஆகியோர் முன்னிலையான அமர்வு முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜல்லிக்கட்டு விலங்குகளை துன்புறுத்தும் செயல்தான் என கூறி, அனுமதி மறுத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேநேரம், இந்த வழக்கில் ஜல்லிக்கட்டை அனுமதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கைக்கு தடைகோரும் மனுக்கள் மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மத்திய அரசு இவ்வாறு ஒரு அனுமதியை பிறப்பித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வாதிடப்பட்டது.

மத்திய அரசு மற்றும் தமிழக அரசு வழக்கறிஞர்கள் இன்று வாதத்தை முன்வைத்தனர். மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மாவும், தமிழக அரசு சார்பில் சேகர் நாப்தேவும் வாதம் முன் வைத்தனர். அனல் பறந்த வாத விவாதங்களில் சிலவற்றை பாருங்கள்:

நீதிபதிகள்: சுப்ரீம் கோர்ட் தடை விதித்த ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திக்கொள்ள அறிவிக்கை எப்படி வெளியிடலாம்?

மத்திய அரசு: விதிமுறைகள் படி காளையை துன்புறுத்தாமல் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்ற உறுதிமொழி அடிப்படையில் அனுமதி தரப்பட்டது. இப்போதெல்லாம், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சாராயம் ஊற்றப்படுவதில்லை, காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை, காளைகளின் திமிலை பிடித்து தொங்கிக் கொண்டே வீரர்கள் ஓட அனுமதிப்பதில்லை.

நீதிபதி நாரிமன் (சிரிப்புடன்): இவ்வளவு விஷயங்களுக்கும் அனுமதியில்லையா.. அப்படியென்றால் ஜல்லிக்கட்டில் வேறு என்னதான் செய்ய மிச்சம் இருக்கிறது?

மத்திய அரசு: காளைகளுக்கு தேவையில்லாத துன்பத்தை ஜல்லிக்கட்டு தருவதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் பால் கறப்பது கூட பசுக்களுக்கு துன்பம்தான். அதை நாம் தேவைக்காக செய்கிறோமே. அதேபோல ஜல்லிக்கட்டையும் கருதலாம்.

தமிழக அரசு: குதிரை பந்தையங்களின்போது கூட குதிரைக்கு தொந்தரவு ஏற்படுகிறது. ஆனால் அவை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதானே உள்ளன.

நீதிபதிகள்: பசுவிடமிருந்து 50 சதவீதம் அளவுக்கான பாலை மட்டும் மனிதர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றனவே.

மத்திய அரசு: ஜல்லிக்கட்டை நிறுத்திவிட்டு கிராம மக்களை பார்முலா-1 கார் பந்தையத்தில் பங்கேற்க போகச் சொல்ல முடியாது.

நீதிபதிகள்: ஜல்லிக்கட்டு முடிந்த பிறகு காளைகள் மகிழ்ச்சியாக திரும்பி வருகின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்கள் போலும்.

இவ்வாறு வாத விவாதங்கள் நடைபெற்ற நிலையில், வரும் 7ம் தேதிக்கு இறுதி விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

English summary
Jallikattu case final hearing adjourned for Dec 7, SC refuses to hear pro jallikattu orgs n the matter.
Please Wait while comments are loading...